Sunday, March 9, 2014

எத்தனையோ வார்த்தைகள்....

ஒவ்வொரு உயிரினத்திலும் பிறவிக்குறைபாடுகள் பற்பல. ஆறறிவு படைத்த இம்மனிதப் பிறவி, தன்னிடமுள்ளக் குறைகளை உணர்கிறதோ இல்லையோ,  பிறரின் பிறவிக்குறைகளை சுட்டிக்காட்டும் அளவிற்கு அறிவு உள்ளது. இக்கால சூழ்நிலையில் பல்வேறு நோய்களாலும், விபத்துக்களாலும்,  உடல் பாதுகாப்பு அக்கறையின்மையாலும்,  பல்வேறு உடற்குறைப்பாடுகள் ஏற்படவாய்ப்புகள் அதிகரித்து விட்டதை மறுப்பதற்கில்லை. இதை உணர வேண்டிய நிலையுமாகும்.

1) ஒவ்வொரு பெற்றோரும் கரு உண்டான காலத்திலிருந்து பிரசவம் வரை, ஒவ்வொருகட்டத்தையும் தகுந்த மருத்துவ அறிவுரைகளை கவனித்து கடைப்பிடித்து திடமான வாரிசைபெற்றெடுக்க முனைய வேண்டும்.

2) குழந்தை பெற்றெடுத்ததுடன் கடமை முடிந்து விடுவதில்லை. சிசு, குழந்தையின்வளர்ச்சி எப்படியிருக்க வேண்டும் என்பதையும் அறிந்துக் கொண்டு, கவனித்துவளர்த்தால் பெருமளவு உடற்குறைகளை களைந்து விடலாம். உதாரணமாக தூங்குதல், அழுகை, காது கேட்பது, பார்வை, அசைவுகள் சரியானநிலையில் இருக்க வேண்டும்.

3) வளரும் சமயத்தில்,அடிபடுத்தல், சீதோசன குறைகள், குழந்தைகள்பயன்படுத்த கூடா பொருட்களை கையாளுவதிலும், பயன்படுத்தும் பொருட்களிலும் கவனம் செலுத்துதல்தேவை,

4) விபரம் அறிந்து,சுயமாக செயல்படும் நிலை வந்தபின், இயற்கைகுறைப்பாடுகளை கவனித்துக் கொள்ளுதல், தங்கள் செயல்பாடுகளால்உடற்குறைப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் கவனத்துடன் செயல்பட்டால், திடமான உடலுடன்நலமான வாழ்வும் வாழ முடியும்.

 பாதிப்படைந்த நிலையில் உள்ளோர்களுக்கு:-

1) சரி, இப்போது இதுதான் நம் வாழ்க்கை நிலை என்பதை உணர்ந்து,   அதற்கேற்றார் போல் அனுசரித்து வாழ பழகிக் கொள்ள வேண்டும். முயற்சிஎடுக்க வேண்டும். “உலகில் தானாக முன்னேறியவர்கள் யாருமில்லை.....! நீ உழைக்கத் தயாராகஇருந்தால்....!! சிலர் உனக்கு உதவ தயாராக இருப்பார்கள்....!!! ”

2) இறைவனால் படைக்கப்பட்ட நம் படைப்பிற்கு, ஒரு காரணம் இருப்பதைமனத்திலே நிறுத்தி தன்னம்பிக்கையுடன் நமது திறமைகளை வளர்த்து கொள்ள முற்படவேண்டும். உ-ம் : ''காலுக்கு செருப்பில்லையே என கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன், காலில்லாதவனைக்காணும் வரை.''  என்று ஒரு சொல் உண்டு.

3) உன்னை விட மோசமாக பாதிக்கப்பட்டவரை நினைத்துப்பார். தானாகதன்னம்பிக்கை வரும்.
உலகையே தமது மயக்கும் இசையால் கட்டிப்போட்ட பீதோவான் கூடகாதுகேளாதவர். பல்வேறு மாற்றுத்திறனாளர்களின் “சாம்பியன்ஸ்’ நிகழ்ச்சி சன் டிவியில் நடந்து வருவதையும். விஜெய்டிவி ‘’சூப்பர் சிங்கர்ஸ்’’ நிகழ்ச்சியில் நடக்கவியலா மாற்றுத்திறனாளி ரிஸ்வான்பாடி வருவதை பார்த்திருப்பீர்கள். ஒரு கால் இழந்த சினிமா நாட்டிய நடிகர் மறைந்த “குட்டி”.விபத்தியினால் கால் இழந்த பிறகும் பரத நாட்டியம் ஆடும் கலைஞர் சுதா சந்திரன்.இப்படி பல சாதனையாளர்கள் இருக்கிறார்கள். நாள்தோறும் நமக்கு தெரிந்த, அறிமுகமான பலமாற்றுத்திறனாளிகள், தங்கள் வேதனைகளையும், சோதனைகளையும் தாண்டி, சாதனை படைத்துவருவதை அறிந்தவர்கள் தாம் நாம். அப்படியிருக்கையில், நாம் ஏன் நமக்குள் குமைந்துக்கொண்டு, தாழ்வுமனப்பான்மையுடன் வாழ வேண்டும்?


4) யான், சிறு வயதிலிருந்தே நடக்கவியலாதவனாக இருப்பினும், சில மாற்றுத்திறமைகள் எமக்கும்இருந்தது, அந்த காலத்தில் அதை ஊக்கப்படுத்துபவர்கள் இன்மையாலும், காலப்போக்கிலும், வாழ்வின்சுழற்சியில் அஸ்தமித்து  விட்டது. இது தற்பெருமைக்கான கூற்று அல்ல.   நம் திறமைகளை அறிந்தால் போட்டிப்போட்டுக் கொண்டு, நம்மை அணுகிவெளிப்படுத்தும் ஊடகங்கள் இன்று இருப்பது போல், அன்று இல்லை. அதனால் உங்கள்மாற்றுத்திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். வெளிப்படுத்த தயங்காதீர்கள். 

5)  பல மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையற்றவர்களாக, தாழ்வுமனப்பான்மையுடன்
திகழ்கிறார்கள். கற்றுக் கொள்வதில், பழகுவதில் தயக்கமுள்ளவர்களாகஇருக்கின்றனர். அதே போல் வசதி வாய்ப்பில் உயர்ந்த, கல்வி கற்ற, பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகள்சிலர், மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதிலும், வழி காட்டுவதற்கும்விருப்பமற்றவர்களாக திகழ்வதையும் கண்கூடாக அறிந்து மனவருத்தம் அடைந்திருக்கிறோம்.

6) ஒரு சமயம், ஒருவர் மாற்றுத்திறனாளி என்பதை யான் அறியாமலே, சிறிது நேரம் அவருடன்கழிக்க நேரிட்டது. M.Com. படித்த அவரும்  மாற்றுத்திறனாளி என்பதை யான் அறிந்ததும், யானும்மாற்றுத்திறனாளி என்பதை அறிந்தும் ஏன் இத்தனை நேரம் உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவில்லையே, என வினவியதற்கு,உங்களிடம் பேசினால் வேலையா வாங்கிகொடுக்கப் போகிறீர்கள் என்று விரக்தியுடன் கேட்டார்.

7) அதேபோல் மற்றொருவர், நன்கு படித்து அரசு வேளையில்இருந்தார். பேசுவதற்கே தயங்கிய அவரிடம், மற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு, கல்விக்கும், வேலைவாய்ப்புகளுக்கும்  தங்கள் நிலையால்  உதவலாம் அல்லவா என கேட்டதற்கு, நான் சிரமப்பட்டபோது யாருமேஉதவவில்லை. இப்போது நான் எதற்கு செய்ய வேண்டுமென கோபம் கொப்பளிக்க வினவினார்.  அவருக்கு விளக்கங்கள் கூறி, நமது சங்கத்தை தொடர்புக் கொள்ளசெய்தோம்.

8) அன்புடைய மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளே, [ இனியவர்களே!] ஒரு குறிப்பிட்ட அளவு கல்வி / பணி / தொழில் கிடைத்ததும், போதுமென்று நினைப்பதை விட, மிக விரைவான வளர்ச்சியும், போட்டியும் நிறைந்த  உலகில் உயர்நிலை அடைய, தொடர்ந்து கல்வி அறிவை வளர்த்துக் கொள்ளல், தொழில் / பணி குறித்து முழு மூச்சுடன்,அறிந்துக் கொள்ள முயன்றுக் கொண்டே இருத்தால், பின்தங்காமல், முன்னேறி கொண்டிருக்க உதவும்.
உ-ம்: எமது உறவினர் ஒருவர், கல்வியில் ஆர்வமிருப்பினும், குடும்ப சூழ்நிலையால், சுருக்கெழுத்து பயிற்சி பெற்று, வங்கியில் பணிக்கு சென்று விட்டார். இருப்பினும் தனியா கல்வி தாகத்தினால், அந்த வங்கியில் நடைபெற்ற அனைத்துத் தேர்வுகளையும் ஒன்றின் பின் ஒன்றாக எழுதி, தேர்ச்சி பெற்று, பதிவி  உயர்வுகள் அடைந்து, இன்று அந்த வங்கியின் தலைமை அலுவலகத்தின் ஒரு பிரிவு தலைவராக திகழ்கிறார். இன்றும் தொடர்ந்து பல மொழிகளையும், இசைக்கருவிகளையும், வாய் பாட்டையும் கற்றுக் கொண்டே வருகிறார். 

மாற்றுத்திறனாளிகளே! குறிப்பாக ஆண்களே, உங்கள் குடும்பத்தை நடத்துவதற்கு தேவையான குறைந்தபட்ச சுயவருமானம் கூடயின்றி, திருமண வாழ்க்கை பற்றி
நினைக்காதீர்கள். ஐயோ, எனக்கு வயதாகிறதே என்றோ, குடும்பத்தினர் வற்புறுத்துதலுக்கோ, வேறு காரணங்களுக்கோ திருமணம் என்பது இன்பம் பயக்கக்கூடியதாக திகழாது. திருமணமான ஜோடிகளே! ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, உளப்பூர்வமான அன்பினையும், பாசத்தையும் செலுத்தி,  நம்பிக்கையுடன், உண்மையானவராகவும் வாழுதல், குடும்பநிலை ஆரோக்கியமாக, செழிப்பாக வளர வழி வகுக்கும்.

அதேபோல் எந்த ஒரு தீயபழக்க வழக்கங்களுக்கும் ஆட்படாமல் இருப்பது, உடல் நலத்திற்கும், வாழ்வுக்கும்  
நன்மையைப் பயக்கும் என்பதை, உங்களுக்கு சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை.
உங்கள் மனங்களைதிறந்து வையுங்கள், தாழ்வு மனப்பான்மையுடன் பூட்டி வைக்காதீர்கள். உங்களுடையதேவைகளுக்கும், விபரங்களுக்கும்,சந்தேகங்களுக்கும், திறமைகளைவெளிப்படுத்தவும் நமது சங்கத்தை அணுகுங்கள். எப்பொழுதும் உதவுவதற்காகவே காத்துக்கொண்டு இருக்கிறார்கள். உங்கள் திறமைகளால், நீங்கள் புகழ் பெற்று வாழ்விலேஉயர்வடைய எமது அன்பான வாழ்த்துக்கள்.












 [படத்தில் இடமிருந்து வலம்:-
1) V.சங்கர் மாவட்ட இணை செயலாளர்  சென்னை.
2) டாக்டர் .R.நாராயணன் மாநில செயற்குழு உறுப்பினர் புதுவை.
3) புதுக்கோட்டை இராஜேந்திரன் மாவட்ட துணை செயலாளர் சென்னை.
4) அடுத்தது யாம்.
5) ஜெகதீசன் மாவட்ட தலைவர் திருவாரூர்.]

வேண்டுகோள்:-

1) ஆட்சியாளர்களே! மாற்றுத்திறனாளிகளும், போட்டி நிறைந்த காலகட்டத்தில், மற்றவர்களுக்கு இணையாக வாழ, தேவையான அனைத்துவசதிகளையும் தாமதமின்றி  மனமுவந்து செய்துத் தாருங்கள்.

2) அதிகாரிகளே! மாற்றுத்திறனாளிகளும் உங்களில் ஒருவரே என்பதை உணருங்கள்.அரசுகள் வழங்கும் உதவிகளுடன்,தங்களால் இயன்ற வழிகளிலும், மனத்தில்களங்கமின்றி மாற்றுத்திறனாளிகளுக்கு  செய்து தாருங்கள்.

நன்றி:

மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறுநலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகின்ற அரசுகளுக்கும், சுணக்கமின்றிசெயல்படும் அதிகாரிகளுக்கும்,தனிப்பட்ட சேவை சங்கங்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கானநல சங்கங்களுக்கும் தமிழ்நாடு   அனைத்து மாற்றுத்திறனாளிகள் சார்பில் எமது நன்றியினை, பணிவுடன்  இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.


இங்ஙனம்
தவப்புதல்வன் @ A.M.பத்ரி நாராயணன் 
விழிப்புணர்வாளர், சேலம்.
கைப்பேசி: 99414 76945.

# சென்ற 26/01/2014ந் தேதி நடைப்பெற்ற சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் வெள்ளி விழா மலரில் வெளி வந்த எமது கட்டுரை.


Kovai Bala S அருமையான பதிவு. ஆட்சியாளர்கள் மனது வைத்தால் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வு வளம் பெறும்.

Balasubramanian Coimbatore “உலகில் தானாக முன்னேறியவர்கள் யாருமில்லை.....! நீ உழைக்கத் தயாராகஇருந்தால்....!! சிலர் உனக்கு உதவ தயாராக இருப்பார்கள்....!!! ” Very True.

Munuswami Muthuraman தன்னம்பிக்கை ஊட்டும் அற்புதமான பதிவு. வாழ்த்துகள் பத்ரிநாராயணன் !

Selvaraj Narayanasamy அற்புதமான கட்டுரை. வெள்ளிவிழா மலரிலும் படித்தேன். மகிழ்ச்சி.

Lion Lakshmi Narayanan அற்புதமான கட்டுரை