Monday, July 23, 2007

எனக்கும் !!!!!!!!!!-10

ஐந்து வயதிலே, என் வாழ்வின் பக்கமே, தலைகீழாக மாற்றி எழுதப்பட்டது. ஆம், சேலம் நகரிலே, எங்கள் உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு (யார் வீட்டுத்திருமணம், உறவுமுறை ஆகியவை நினைவுக்கு வரவில்லை.)சென்றிருந்தோம். முதல் நாள் அங்கும் ஆட்டம் பாட்டம் தான்.இரண்டாம் நாள் காலையிலிருந்தே, மணவறையிலே, பின்புறம் சுருண்டு படுத்துக்கொண்டே இருந்ததைப் பார்த்த எமது தாயார், பாட்டியிடம் வருத்தப்பட, அவரோ, நான் நேற்று முழுவதும் குதித்ததின் விளைவுயென சமாதானம் கூற, பிறகு அன்று மாலைப்பொழுது, சேலத்தில் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைப்பெரும் பொருட்காட்சிக்கு, எனது அப்பாவோ தோளிலே எனைச் சுமந்து சுற்றிக் காட்ட ( 1. கூட்டமுள்ள இடங்களில் குழந்தைகள் நன்றாகப் பார்க்க, 2.கூட்டத்தில் குழந்தைகள் தொலைந்து போய்விடாமலிருக்க, 3) குழந்தைகளுக்கு கால் வலிக்குமென, இப்படி மேலும் சில காரணங்களால் ), அது சமயம், குடிக்க தண்ணீர் கேட்டேன். வாங்கிக் கொடுத்த தண்ணிரை, தோளில் அமர்ந்தபடியே நான் குடித்தேன். நான் குடித்த நீர் வயிற்றுக்குள் சிறிது செல்ல, மூக்கின் வழியே வெளியே சிறிதும் சிந்தியது. கிழே சிந்தாமல் தண்ணீர் குடியென அப்பா கூற, மீண்டும் குடித்த நீர் மூக்கின் வழியே பைப்பிலே சிந்துவது போல, வெளியே சிந்த,மீண்டும் அப்பா கடிந்துக் கொள்ள, மூக்கிலே தண்ணீர் வருவதை கூறினேன். என் உடல் நிலை மாற்றத்தை உணர்ந்த அப்பா, திருமணமண்டபம் விரைந்து அம்மாவுடன் மருத்துவரை (டாக்டர்)காண அழைத்துச் சென்றார்கள். அம்மா, மருத்துவரிடம் (டாக்டரிடம்)நேரடியாகவே, எனக்கு டிப்டீரீயா ( தொண்டை அடைப்பான் )நோய் தாக்கியுள்ளது என கூறி பதற, மருத்தவரோ (டாக்டரோ ),பரிசோதனை செய்து விட்டு, உண்மையை அறிந்தவராக, அதிர்ந்து போய், பரிசோதனை செய்வதற்கு முன்பாகவே, மருத்துவரே( டாக்டரே ) உணரமுடியாத தொடக்க நிலையில்,தொடக்கப்பள்ளிப் படிப்பையே முடிக்காத, நீங்கள் எப்படி உணர்ந்தீர்களேன எனது தாயிடம் வினவ, வாரயிதழ்கள் படிப்பதையும், டிப்தீரீயா (தொண்டை அடைப்பான் ) நோயின் அறிகுறிகளைப் பற்றி படித்ததையும் கூற,மருத்துவர் (டாக்டர் ) ஊசி மருந்தை எழுதித்தர, அப்பா வாங்கி வர,உடனே ஊசியும் போடப்பட்டது எனது வலது இடுப்பிலே. அம்மா என்னுடனிருக்க,மீண்டும் வெளியே புறப்பட்டுச் சென்றார் அப்பா,மருந்து வாங்கிய கடை வழியாக. மருந்துக்கடைக்காரரோ, பதற்றத்துடன் அழைத்து, ஒரு குப்பியில் (பாட்டிலில்) உள்ள மருந்தில் பாதிமருந்து தான் ஊசி போடவேண்டுமென கூறி,மருந்தின் வீரியத்தை, மருத்துவருக்கு (டாக்டருக்கு) தகவல் தரச் சொல்ல, மருத்துவரும் ( டாக்டரும்)அவசரத்தில் ஏற்பட்ட தவறை உணர்தாலும், மாற்று மருந்தில்லாததால், சிறிது நேரத்தில் என் உடல் முழுவதும் உணர்வுகளின்றி செயலிழந்து விட்டது. பசித்தால் கேட்க தெரியாது. பேச்சு இல்லை. சிறுநீர், மலம் கழிப்பதோ,பூச்சிகள்,எறும்புகள் உடல் மேல் ஊர்வதோ,தொடுவதோ மற்ற எந்த உணர்வுகளும் இல்லை. அதனால் இச்சமயத்தில் நடந்த நிகழ்வுகளும் நினைவில்லை. தொடர்ந்த மருத்துவம் பற்றியும், என் உடல்நிலை மாற்றங்கள் பற்றியும், பிறகு......

Wednesday, July 18, 2007

ஏன் இப்படி ????

சென்ற வாரம் ஒரு செய்தியை வாசித்தேன். உடனே பதிவு செய்திட முடியவில்லை. எப்போதும் போல காரணங்கள்தான் வேண்டாமே அது. விசயத்திற்கு வருவோமா ? . செவிதிறன் குறைந்தோர் சிலர் குழுவாக, சில கோரிக்கைகளுடன், கோட்டைக்கு, நமது தமிழக முதல்வரை சந்திக்க சென்றிருக்கிறார்கள். அவர்களை அனுமதிக்க காவலர்கள் மறுத்ததுடன், கலைந்துச் செல்லவும் வற்புறுத்தியிருக்கிறார்கள். பார்த்து மனு கொடுக்காமல் அகலமாட்டோமென கூற, அதனால் கோபமடைந்த காவலர்கள் விரட்டி அடித்திருக்கிறார்கள்.

அவர்களின் கோரிக்கைகள் என்ன ?

1) ஊனமுற்றோருக்கான வேலை வாப்பிலே இட ஒதுக்கீடு.
2) அரசு அமைத்துள்ள ஊனமுற்றாருக்கான நலவாரியத்திலே, இவர்களின் கருத்தை வெளியிட சைகை மொழியாளர் நியமிக்க கோரி.
3) மோட்டார் வாகனங்களை ஓட்ட ட்ரைவிங் லைசன்ஸ் வழங்க கோரி.
இப்படி மேலும் சில கோரிக்கைகள் தான்.

காவலர்கள் என்ன செய்திருக்கலாம்

1) உடனடியாக முதலமைச்சரின் உதவியாளர்களிடம் ஆலோசனைப்பெற்று உதவி இருக்கலாம்.
2) சமுகநலத்துறை அமைச்சர் அல்லது அவரின் உதவியாளர்களிடம் தகவல் தெரிவித்து உதவியிருக்கலாம்.
3) ஊனமுற்றோர் நலவாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உதவி இருக்கலாம்.
அதைவிடுத்து வலுக்கட்டாயமாக விரட்டி அடிப்பதில் என்ன சாதித்து விடப் போகிறார்கள் ? நாம் இரானுவ ஆட்சியிலா இருந்துக் கொண்டிருக்கிறோம்.
பொறுப்பிலுள்ளவர்கள் பொறுப்பாக இருந்தால், தமிழகத்தில் பொன்னல்லவா!!
விளையும்.


இப்படி நடக்க காரணமென்ன?
1) கோரிக்கை வைப்பவர்கள் நேரடியாக முதல்வரையே பார்க்க வருவதின் காரணமென்ன ?
பதில்: கீழ்மட்டத்தில் பொருப்பிலுள்ள அதிகாரிகள் தேவையான உதவிகள் புரிவதுடன், சரியான வழிமுறைகளை காட்டி செயல் படாதது தான் மிக முக்கியமான காரணமாக கருதுகிறேன். அப்படி அவர்களால் முடிவுகாண முடியாத பட்சத்தில், தேவையில்லாமல் அலையவிடுவதை தவிர்த்து, அவர்களின் மேல் அதிகாரிகளை தங்களே தொடர்புக்கொண்டு, விபரம் அறிந்து எந்த மட்டத்தில், யாரை சந்திப்பது, முறையானது என்று சரியான வழிகாட்டுதலை செய்தால், மக்களும் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக அனுகுவதுடன், தேவையின்றி போராடவுமாட்டார்கள்.
அப்படி ஒரு காலம் பிறக்குமா?

இது குறித்து கருத்துகளையும், தீர்வுகளையும் எழுதுங்களேன்.

Monday, July 16, 2007

எனக்கும் !!!!!!!!!!-9

நான் நன்றாக நடக்க ஆரம்பித்த பிறகு, சிறிது தொலைவிலிருந்த எங்கள் கடைக்கு, ஒரே ஓட்டமாக ஓடுவேனாம்,ஏனென்றால் வழியில் பார்க்கின்ற, செல்கின்ற தெரிந்தவர்கள், என்னைப் பிடித்துக் கொண்டு, என் கைகளில் இருப்பதை பிடுங்கிக் கொண்டோ அல்லது நீ போட்டிருக்கும் நகைகள் எங்களுடையது,கழட்டிக கொள்கிறோம் என்றோ, இப்படி ஏதாவது சொல்லி வேண்டுமென்றே சீண்டுவார்களாம். தவிர என்னுடைய கைங்காரியமாக, கடையிலிருந்து விற்பனைக்கு இருக்கும் சாட்டைகளில் ஒன்றை (மனிதர்களை அடிக்கும் சாட்டை அல்ல, மாடுகளை,பொதிசுமக்கும் கழுதைகளை ஓட்ட பயன் பட்டது ) யாருக்கும் தெரியாமல் உருவிக்கொண்டு, வழியில் வரும்போது, என்னை பிடிக்க முயற்சிப்பவர்களை மிரட்டுவதற்காகவும், வழியில் மேய்ந்துக்கொண்டிருக்கும் கழுதைகளை விரட்டிக் கொண்டு ஓடியதும் தான் ஐந்து வயது வரை நினைவிலே நிற்கும் இனிமையான நிகழ்வுகளாகும். அதற்கு பின் நடந்தது காலத்தின் கோலமா?, விதியின் விளையாட்டா?......

Saturday, July 14, 2007

எனக்கும் !!!!!!!!!!-8

நினைவிலே உள்ள துள்ளிக் குதித்த நிகழ்வுகள்

1) நான் 6 பெண்மகவுகளுக்கு பிறந்ததாலும்,
2) பிறக்கும் போதே சுருட்டை முடியுடனும் கொழுக்கொழுவென்று இருந்ததாலும்
3) வீட்டில் உள்ளவர்களும்
4) கிராமத்தைச் சேர்ந்தவர்களும்
5) வணிக சம்பந்தமாக அருகிலுள்ள கிராமங்களிலிருந்து வருபவர்களும்
கொஞ்சி, கொஞ்சி மகிழ, நானும் செழிப்பாக வளர்ந்தேன் 5 வயது வரை. இதிலே சில சொல்லக் கேட்டவை, சில நினைவிலே உள்ளவை. எங்கள் குடும்பமும், பெரியப்பா குடும்பமும் பெரிய கூட்டுக்குடும்பமாக இருந்ததால், என்னை விட 1 1/2 வயதே பெரியவரான எனது சகோதரன். ரமேஷ் பாபு (பெரியப்பாவின் மகன்), நான் சிறுகுழந்தையாக இருந்தபோது, எனது தம்பி,எனது தம்பி என்றும், எவ்வளவு அழகாக இருக்கிறான் என்று என்னையே சுற்றிக் கொண்டும், தூக்கமுடியாமல் தூக்கிக் கொண்டும் அலைவாராம். எங்கள் பெரிய அண்ணியார்.Late.திருமதி. கோகிலா அவர்களின் திருமணத்திற்கு( பெரியப்பாவின் பெரிய, முதல் மருமகள் ) பிறகு தான் நான் பிறந்ததாலும், என்னை கொழுந்தினார் என்றுதான் அழைப்பார்கள். அவரின் கடைசி கொழுந்தனாரான ரமேஷ் பாபுவிடம், சின்ன கொழுந்தினாரே... 'குட்டி கொழுந்தினாரை' ( அதாவது என்னைத் தான்) கீழே போட்டுவிடாதீர்கள், என்று பதறுவார்களாம். எவ்வளவுதான் எல்லோரும் என்னைத் தூக்கிக் கொஞ்சினாலும், முறைப்படி குப்புற விழ, தவழ, தட்டுத்தடுமாறி கிழே விழுந்து எழுந்து நடக்க வாய்ப்புக் கொடுத்துள்ளார்கள். மிக விரைவிலே எழுந்து நடந்த நான், 1.1\2 வயதிலே 3 வயது பையன் போல் இருந்துள்ளேன். நடக்க ஆரம்பித்தபின் நடந்த சொல்ல கேட்ட, நினைவிலுள்ள சில........

Wednesday, July 11, 2007

எனக்கும் !!!!!!!!!!-7

எங்களுடைய தாத்தா,பாட்டி(அம்மாவின் அப்பா,அம்மா\Late. மஹாராஜ ராஜஸ்ரீ.S.ராஜகோபால் செட்டியார்,Late.ஸ்ரீமதி. செங்கவல்லி) காசி,பத்ரிநாத், கேதாரிநாத் புனிதபயணம் சென்றபோது, ஆண் வாரிசுகளே இல்லாமலிருந்த எங்கள் தாய் மற்றும் சித்திக்காகவும் (தாயின் சகோதரி.ஸ்ரீமதி.Rவிடோபாய்), ஆண்மகவு பிறந்தால் ''பத்ரி'' என்ற பெயர் வைப்பதாக வேண்டுதல் செய்துக் கொண்டு ஊர் திரும்பிய பின் சில மாதங்களில் எனது தாய் என்னையும், மேலும் சில மாதங்களுக்கு பிறகு எமது சித்தியும் ஆண்மகவுகளாகப் பெற்றெடுக்க எனக்கு ''பத்ரி நாராயணன்'' என்ற நாமகரணமும் (பெயரும்), எமது சித்தியின் மகனுக்கு
''பத்ரி குமார்'' என்ற திருநாமத்தையுமிட்டு மகிழ்ந்தார்கள். எங்கள் குடும்பம் வணிகக்குடும்பமாக இருந்தாலும், தவமிருந்து பெற்றப் பிள்ளையாகையால், ராஜா வீட்டு கன்னுக்குட்டிப் போல, கைகளில் தங்கவளையல்களும், பத்து விரல்களிலும் வளையல்களுடன் சங்கிலிகளால் இணைந்த மோதிரங்களையும், கழுத்திலே தங்கச்சங்கிலிகளும், காதிலே கற்கள் பதித்த கடுக்கண்களும், இடுப்பிலே ஆலிலை கிருஷ்ன்னுடன் கூடிய (மானத்தைக் காக்க) அரைஞாண்கொடி, கால்களில் தண்டைகளுடன் சர்வ அழங்காரத்துடன் துள்ளிக் குதித்த நாட்கள் நிழலுருவமாய் நினைவிலே நிழலாடுகிறது. நினைவிலே உள்ள துள்ளிக் குதித்த நிகழ்வுகள் அடுத்து.....