Sunday, November 30, 2008

முதல் நண்பி

அடட!.. ஒரு முக்கியமான ஸ்வாரிஸ்யமான தகவலை, என் முதல் பெண் தோழியை அறிமுகம் செய்யாமல் விட்டுவிட்டேன்.ஆரம்பபள்ளியை நினைத்தாலே நினைவில் வரக்கூடிய நிகழ்ச்சியிது.மூன்றாம் வகுப்பில் நான் சேர்ந்த போது, எங்கள் எதிர்வீட்டு பெண் விஜயா @ விஜயலட்சுமியும் என் வகுப்பு தான். ஆனால் அவளுக்கு நாங்கள் வைத்த புனைப்பெயரோ ''சிட்டுக்குருவி''. ஏனென்றால் ஒரே துருதுரு. ஒரு நாள் என் ஊனத்தைச் சுட்டிக் காட்டி ''மொண்டி'' என்றழைத்தாள்.எனக்கு வந்த கோபத்தில் மூன்று கால் பாய்ச்சலில் ( இரண்டு கைகள், ஒரு கால் ) சென்று அவள் துடையில் 'நறுக்'கென்று கிள்ளி விட்டேன். அவளோ அழுது ஆர்ப்பாட்டம் செய்து, வகுப்பாசிரியர் மூலமாக தலைமையாசிரியருக்கு சென்றது. அவர் என்னை அழைத்து, பெண்பிள்ளையைக் கிள்ளியது தவறுயென கண்டித்தார். ஆனால் நானோ, அவள் என் ஊனத்தை குறிப்பட்டதால் தானே கிள்ளினேன். அதனால் தவறு அவள் மேல்தான், அவளையும் கண்டிக்க வேண்டுமென வாதிட, தலைமையாசிரியருக்கு வேறு வழியின்றி அவளையும் அழைத்து, யாரையும் அதுமாதிரி அழைக்கக்கூடாது பேசக்கூடாது என கூறி, சண்டைப்போடக்கூடாது நண்பர்களாக இருக்க வேண்டுமென சொல்லி அனுப்பி வைத்தார். சிறிது நாட்களில் நண்பர்களாகி விட்டோம். துவக்கப்பள்ளி படிப்புடன் அவளை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தி விட்டிருந்தனர். நான்காம் வகுப்பு முடிவில் சென்னை மருத்துவமனையில் இருந்து விட்டு, ஊருக்கு திரும்பும்போது, அவளும் அவள் சகோதரிகளும் அவர்கள் வீட்டு வாசற்கதவிற்கு பின்னிருந்து தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தனர். எப்போதாவது அப்படி எட்டிப்பார்க்கும்போது, நானாக வலிய பேசினால், ஒரு வார்த்தை அல்லது தலையசைப்பு மட்டுமே பதிலாக கிடைப்பதுடன் அடுத்த நொடி அவர்கள் வீட்டு கதவை மூடிவிடுவார்கள். அப்படி இருந்த நிலையில் நண்பிக்கு திருமணம் ஆனது, இந்த விசயம் இன்னும் ஹைலைட்டானது, அதாவது அவளுக்கு திருமணம் முடிந்து, இரண்டு நாட்களுக்கு பிறகு தாய்வீட்டிற்கு கணவருடன் வந்தாள். அப்படி வரும்போதே, அவள் தாய்வீட்டில் நுழைவதற்கு முன்பாகவே, சாலையில் நின்றபடியே, என்னைப் பார்த்து '' பத்ரி, எப்படியிருக்கிறே?, நல்லாயிருக்கிறாயா?'' என்று தலை நிமிர்ந்து துணிவாகவும் பலமாகவும் கேட்டாள். ஒரு நிமிடம் நான் அதிர்ந்த் விட்டேன். என்னடா, இரண்டு நாட்களுக்கு முன் திருமணத்திற்கு நம்மை தாண்டிச் செல்லும் போது கூட, ஒரு வார்த்தைப் பேசாதவள் எப்படி, பிரமிப்பிலிருந்து மீளமுடியாதனாய் தலையை மட்டும் ஆட்டி வைத்தேன். பிறகுதான் அவள் கணவருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தாள். ஆனால் அவரோ, உன்னை பெண் பார்க்க வரும்போதே அறிமுகமாகிவிட்டோம். என்று கூறி சிரித்தார். என் முதல் இனிய தோழி மூன்று, நான்கு வருடங்களுக்கு முன்பாகவே இறைவனடியை அடைந்து விட்டார் என்பதை கேள்விப்பட்டேன்,என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Saturday, November 29, 2008

எனக்கும்-16

ஓ.. நேற்று எந்த இடத்தில் விடைப்பெற்றேன்? ஆமாம் நண்பர்களின் அறிமுகப்படலம் அல்லவா! நண்பர்களென்றாலே ஆரம்பப் பள்ளியிலிருந்து தானே! மூன்று மற்றும் நான்காம் வகுப்புக்கு என்னை சுமந்து சென்றவர்களில் என் நினைவில் நிற்பவர்கள் கோவிந்தன் பூசாரியும், உடையானும் தான், இந்த இரண்டு வகுப்புகளுக்கு பிறகு என்னை பள்ளிக்கு தூக்கிச் செல்ல வேண்டிய நிலை யாருக்கும் எற்படவில்லை. ஏனென்றால் அடுத்து உயர்நிலைப்பள்ளி படிப்புக்குத்தான் எங்கள் ஊருக்கு வந்தேன். அது சமயம் கேளிப்பர்கள் அணிந்துக் கொண்டு ஊன்றுக்கோள்களின் உதவியுடன் நடந்தே பள்ளிக்குச் சென்று வந்தேன். சென்னை ஆந்திர மகிள சபா ஈஸ்வரி பிராசாத் மருத்துவ மனையிலிருந்து டிசார்ஜ் ஆகி ஊருக்கு வந்த புதிதிலும், அவசர சமயங்களிலும் எங்கள் வேலைக்காரர்கள் மூலமாக சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்று வந்திருக்கிறேன். சரி நண்பர்களின் அறிமுகம் எங்கோ நழுவிக்கொண்டு போகிறது. எனது புத்தகப்பையை அதிகம் தூக்கி வந்தது கேசவன் @ வீரகேசவன் மற்றும் சிலர். புத்தகப்பை என்றதும் இப்பொழுது ஆரம்பப்பள்ளி மாணவர்கள் சுமக்கக் கூடிய புத்தகப்பையை நினைத்து விடாதீர்கள். அப்பொழுது மூன்று புத்தகங்கள், இரண்டு நோட்டுகள், ஒரு சிலேட் மட்டும்தான். ; 1) தமிழ், 2) கணக்கு, 3) வரலாறும் புவியலும் சேர்ந்து ஒன்று ஆக மூன்று புத்தகங்கள் மட்டுமே. என்னையும், என் பையையும் தூக்கிச் சென்றதாக பின்னாளில் பலர் உரிமைக் கொண்டாடி இருக்கிறார்கள். எனக்கு ஞாபகத்துக்கு வராததாலும் அவர்கள் ஆத்ம திருப்திக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் மறுப்பு தெரிவிக்காமல் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அடுத்ததில் சென்னையில் பள்ளி, மருத்துவமனை நண்பர்களின் அறிமுகம்....

Friday, November 28, 2008

எனக்கும்!!!!!!!!!!-15

இது வரை என் வாழ்வில் சிறு வயதிலிருந்து பல்வேறு காலகட்டங்களில் பலர் நண்பர்களாக இருந்துள்ளனர். ஏனோ உயிர்தோழன் அல்லது தோழி என்று சொல்லக் கூடியவகையில் எனக்கு இருப்பதாக தோன்றவில்லை. ஏன் இப்படி கூறுகின்றேனென்றால் பலரிடம் நான் மனம் விட்டு பேசியிருக்கிறேன். ஆனால் அவர்கள் அப்படி இருந்தார்களா என்றால், தெரியவில்லை என்பது தான் என் பதிலாக இருக்கிறது . இதை படிக்கக் கூடிய வாய்ப்பு என் நண்பர்கள் யாருக்காவது ஏற்பட்டால் வருத்தப் படவேண்டாம். அவர்களை அடையாளம் கண்டுக் கொள்ளக் கூடிய தகுதி எனக்கு இல்லையென்று எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் நான் மறக்காத நண்பர்கள் பலர் இருக்கின்றனர். சிறு வயதிலிருந்தே தொடரும் சில நண்பர்களின் நட்பு என கூறுவதென்றால் திரு.பங்காரு ஆசிரியர் மகன் திரு.விஸ்வநாதன் (விவசாயி ), தர்மபுரி மாவட்டத்தில் CBCID காவல் துறையில் பணியாற்றுகின்ற திரு.பாபு ( நாங்கள் செல்லமாக அழைப்பது குண்டு பாபு என்கின்ற குண்டு). இந்த இடத்தில் சிறு தயக்கம். எந்த நண்பர்களை முதலில் அறிமுகம் செய்வதென்று.சரி, சிறிய வயதிலிருந்தே ஆரம்பித்து விடுகிறேன். முதலிலேயே எழுதியிருக்கிறேனே, அந்த ஆரம்பப் பள்ளி நண்பர்களிலிருந்தே ஆரம்பித்து விடுவோமா? அடுத்த பதிவிலே தொடர்ந்து....