Sunday, November 30, 2008
முதல் நண்பி
அடட!.. ஒரு முக்கியமான ஸ்வாரிஸ்யமான தகவலை, என் முதல் பெண் தோழியை அறிமுகம் செய்யாமல் விட்டுவிட்டேன்.ஆரம்பபள்ளியை நினைத்தாலே நினைவில் வரக்கூடிய நிகழ்ச்சியிது.மூன்றாம் வகுப்பில் நான் சேர்ந்த போது, எங்கள் எதிர்வீட்டு பெண் விஜயா @ விஜயலட்சுமியும் என் வகுப்பு தான். ஆனால் அவளுக்கு நாங்கள் வைத்த புனைப்பெயரோ ''சிட்டுக்குருவி''. ஏனென்றால் ஒரே துருதுரு. ஒரு நாள் என் ஊனத்தைச் சுட்டிக் காட்டி ''மொண்டி'' என்றழைத்தாள்.எனக்கு வந்த கோபத்தில் மூன்று கால் பாய்ச்சலில் ( இரண்டு கைகள், ஒரு கால் ) சென்று அவள் துடையில் 'நறுக்'கென்று கிள்ளி விட்டேன். அவளோ அழுது ஆர்ப்பாட்டம் செய்து, வகுப்பாசிரியர் மூலமாக தலைமையாசிரியருக்கு சென்றது. அவர் என்னை அழைத்து, பெண்பிள்ளையைக் கிள்ளியது தவறுயென கண்டித்தார். ஆனால் நானோ, அவள் என் ஊனத்தை குறிப்பட்டதால் தானே கிள்ளினேன். அதனால் தவறு அவள் மேல்தான், அவளையும் கண்டிக்க வேண்டுமென வாதிட, தலைமையாசிரியருக்கு வேறு வழியின்றி அவளையும் அழைத்து, யாரையும் அதுமாதிரி அழைக்கக்கூடாது பேசக்கூடாது என கூறி, சண்டைப்போடக்கூடாது நண்பர்களாக இருக்க வேண்டுமென சொல்லி அனுப்பி வைத்தார். சிறிது நாட்களில் நண்பர்களாகி விட்டோம். துவக்கப்பள்ளி படிப்புடன் அவளை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தி விட்டிருந்தனர். நான்காம் வகுப்பு முடிவில் சென்னை மருத்துவமனையில் இருந்து விட்டு, ஊருக்கு திரும்பும்போது, அவளும் அவள் சகோதரிகளும் அவர்கள் வீட்டு வாசற்கதவிற்கு பின்னிருந்து தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தனர். எப்போதாவது அப்படி எட்டிப்பார்க்கும்போது, நானாக வலிய பேசினால், ஒரு வார்த்தை அல்லது தலையசைப்பு மட்டுமே பதிலாக கிடைப்பதுடன் அடுத்த நொடி அவர்கள் வீட்டு கதவை மூடிவிடுவார்கள். அப்படி இருந்த நிலையில் நண்பிக்கு திருமணம் ஆனது, இந்த விசயம் இன்னும் ஹைலைட்டானது, அதாவது அவளுக்கு திருமணம் முடிந்து, இரண்டு நாட்களுக்கு பிறகு தாய்வீட்டிற்கு கணவருடன் வந்தாள். அப்படி வரும்போதே, அவள் தாய்வீட்டில் நுழைவதற்கு முன்பாகவே, சாலையில் நின்றபடியே, என்னைப் பார்த்து '' பத்ரி, எப்படியிருக்கிறே?, நல்லாயிருக்கிறாயா?'' என்று தலை நிமிர்ந்து துணிவாகவும் பலமாகவும் கேட்டாள். ஒரு நிமிடம் நான் அதிர்ந்த் விட்டேன். என்னடா, இரண்டு நாட்களுக்கு முன் திருமணத்திற்கு நம்மை தாண்டிச் செல்லும் போது கூட, ஒரு வார்த்தைப் பேசாதவள் எப்படி, பிரமிப்பிலிருந்து மீளமுடியாதனாய் தலையை மட்டும் ஆட்டி வைத்தேன். பிறகுதான் அவள் கணவருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தாள். ஆனால் அவரோ, உன்னை பெண் பார்க்க வரும்போதே அறிமுகமாகிவிட்டோம். என்று கூறி சிரித்தார். என் முதல் இனிய தோழி மூன்று, நான்கு வருடங்களுக்கு முன்பாகவே இறைவனடியை அடைந்து விட்டார் என்பதை கேள்விப்பட்டேன்,என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment