Saturday, November 29, 2008

எனக்கும்-16

ஓ.. நேற்று எந்த இடத்தில் விடைப்பெற்றேன்? ஆமாம் நண்பர்களின் அறிமுகப்படலம் அல்லவா! நண்பர்களென்றாலே ஆரம்பப் பள்ளியிலிருந்து தானே! மூன்று மற்றும் நான்காம் வகுப்புக்கு என்னை சுமந்து சென்றவர்களில் என் நினைவில் நிற்பவர்கள் கோவிந்தன் பூசாரியும், உடையானும் தான், இந்த இரண்டு வகுப்புகளுக்கு பிறகு என்னை பள்ளிக்கு தூக்கிச் செல்ல வேண்டிய நிலை யாருக்கும் எற்படவில்லை. ஏனென்றால் அடுத்து உயர்நிலைப்பள்ளி படிப்புக்குத்தான் எங்கள் ஊருக்கு வந்தேன். அது சமயம் கேளிப்பர்கள் அணிந்துக் கொண்டு ஊன்றுக்கோள்களின் உதவியுடன் நடந்தே பள்ளிக்குச் சென்று வந்தேன். சென்னை ஆந்திர மகிள சபா ஈஸ்வரி பிராசாத் மருத்துவ மனையிலிருந்து டிசார்ஜ் ஆகி ஊருக்கு வந்த புதிதிலும், அவசர சமயங்களிலும் எங்கள் வேலைக்காரர்கள் மூலமாக சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்று வந்திருக்கிறேன். சரி நண்பர்களின் அறிமுகம் எங்கோ நழுவிக்கொண்டு போகிறது. எனது புத்தகப்பையை அதிகம் தூக்கி வந்தது கேசவன் @ வீரகேசவன் மற்றும் சிலர். புத்தகப்பை என்றதும் இப்பொழுது ஆரம்பப்பள்ளி மாணவர்கள் சுமக்கக் கூடிய புத்தகப்பையை நினைத்து விடாதீர்கள். அப்பொழுது மூன்று புத்தகங்கள், இரண்டு நோட்டுகள், ஒரு சிலேட் மட்டும்தான். ; 1) தமிழ், 2) கணக்கு, 3) வரலாறும் புவியலும் சேர்ந்து ஒன்று ஆக மூன்று புத்தகங்கள் மட்டுமே. என்னையும், என் பையையும் தூக்கிச் சென்றதாக பின்னாளில் பலர் உரிமைக் கொண்டாடி இருக்கிறார்கள். எனக்கு ஞாபகத்துக்கு வராததாலும் அவர்கள் ஆத்ம திருப்திக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் மறுப்பு தெரிவிக்காமல் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அடுத்ததில் சென்னையில் பள்ளி, மருத்துவமனை நண்பர்களின் அறிமுகம்....

No comments: