Tuesday, September 25, 2007

நீங்களும் தெரிந்துக் கொள்ள.... !!!

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 24 ஆம் தேதி, உலக காது கேளாதோர் தினம் அனுசரிக்கப் படுகிறது. இதை ஒட்டி அப்பல்லோ இந்திர பிரஸ்தா மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ள தகவல்கள்,
1) சத்தமான இசை, நடன அரங்குகளின் காதைக்கிழிக்கும் சத்தம், அதிக சப்தம் ஏற்படுத்தும் இடத்தில் வேலை பார்ப்போர் காது கேளாமையால் பாதிக்கப் படுவது அதிகரித்து வருகிறது. பல்வேறு ஊனங்களில், திடிரென காது கேளாமை நோய் தான் உலகளவில் முதலிடத்தில் உள்ளது.
2) இலகம் முழுவதும் 50 கோடிப் பேர் காது கேளாமை நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட, சமீப காலமாக இளம் வயதிலேயே காது கேளாமை ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அதுவும் இளைஞர்கள் தான் பாதிக்கப் படுவதில் அதிகம் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
3)இந்தியாவில், ஆயிரத்தில் ஒன்று முதல் இரண்டு குழந்தைகள் பிறவியிலேயே காது கேளாமை ஊனத்துடன் பிறக்கின்றனர். இந்த விகிதம் மூன்று முதல் நான்கு வரை அதிகரிக்கும் அபாயமும் ஏற்ப்பட்டுள்ளது.
4)அதிக இரைச்சலால், காது கேளாமையால் பாதிக்கப் பட்டோரில் இந்தியாவில் மட்டும் 6.3 சதவீதம் பேர். தொலைப்பேசி மூலம் வழங்கப்படும் சேவைத்துறையில் ஈடுப்பட்டிருப்போர் தான் அதிக அளவில் திஇரென காது கேளாமைக்கு ஆளாகின்றனர். இளம் மாணவ,மாணவியரும் எந்த நேரமும் கைத்தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருப்பதும், அவர்களுக்கு காதுகேளாமை ஏற்ப்படுத்தி விடுகிறது. நீண்ட நேரம் அதிக சத்தத்துடன் இசைக்கேட்பதும், அவர்களுக்கு ஆபத்து என்று டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர்.

பின் குறிப்பு 1) இயற்கையாகவே உடல்நல குறைவினால் காது கேளாமை.
2)அதை உணராமலே, இளம் வயதில் நாள் முழுவதும், வானொலி, டேப்ரிகார்டரில் அதிக சத்தத்துடன் இசை கேட்டது.
3) காதைப் பிளக்கும், சத்தத்துடன் வெடிக்கும் வெடிகளையும் பயமின்றி, மிக அருகிலேயே,வைத்து வெடித்தது. போன்றவை இளம் வயதிலேயே காது கேளாமையால் நான் பாதிக்கப் பட்டுவிட்டேன். அனுபவபூர்வமாக,எனக்கு ஏற்பட்டதை இதன் மூலம் உங்களுக்கு தெரிவித்து எச்சரிக்க விரும்புகிறேன். சத்தத்தை குறையுங்கள், சந்தோசமாக வாழுங்கள்.

Monday, September 17, 2007

எனக்கும் !!!!!!!!!!-14

நான் ஆரம்பக்கல்வி தொடங்கியதே வீட்டில் தான். எங்கள் ஊருக்கு ஒட்டி இருக்கும் சிறு குன்றில் முருகன் சிலையை, நிறுவி வணங்க ஆரம்பித்ததால் முருகன் சாமியார் என அழைக்கப்பட்ட திரு.மாணிக்கம் என்பவர் தான் எனக்கு, மருத்துவத்தின் காரணத்தினால், வயது கூடிவிட்டதாலும், ஒரு வருடத்திலே ஒன்றாம் இரண்டாம் வகுப்புப் பாடங்களை, எங்கள் வீட்டிலேயே சொல்லிக் கொடுத்தார்.ஆசிரியர் திரு. மாணிக்கம் அவர்களை முருகன் வாத்தியார், முருகன் சாமியார் என்றே அழைப்போம். ஏனென்றால் எங்கள் அப்பா பெயரும் அதுவாகவே இருப்பதால்.

திரு.பங்காரு ஆசிரியரின் அறிவுறுத்தலின்படி மூன்றாம் வகுப்பை ஆரம்ப பள்ளியில் சேர்ந்து பயிலத் தொடங்கினேன். முன்றாம் வகுப்பை வீட்டில் படித்து விட்டு நான்காம் வகுப்பில், சட்ட விதிகளின்படி சேரமுடியாது என்பதால். இடப்பற்றாகுறையினால், எங்கள் கிராம பள்ளி இரண்டு இடங்களில் நடந்தது. எங்கள் வீட்டின் அருகிலேயே கிராமச்சாவடியில் முன்றாம் வகுப்பு நடந்தது. வகுப்பாசிரியராக திரு.பங்காரு அவர்கள் தான் இருந்தார். முதன்முதலாக் காளிப்பர் ()என்று அழைக்கப் படும் பூட்ஸூகளை இரண்டு கால்களுக்கு முழுமையாகவும்.உடல் முழுமைக்கும் இரும்புப் பட்டைகள் கொடுத்து தோலால் செய்யப்பட்ட கவசத்தை அணிந்துக் கொண்டு,
காந்தி தாத்தா கையில் உள்ள ஊன்றுக்கோளைப் போல, இரண்டு ஊன்றுக் கோள்களை,இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு, இயந்திர மனிதனைப்போல நடந்து பள்ளிக்குச் சென்றேன். சுயமாக உட்காரவோ, எழுந்து நிற்கவோ முடியாது. அதே போல நடக்கும் போது தவறி விழுந்து விட்டால், குறைந்தது மூன்று பேர் உதவியில்லாமல் எழுந்து நிற்க முடியாது. அடுத்ததாக நான்காம் வகுப்பு படிக்க மெயின் ஆரம்ப பள்ளிக்கு செல்ல நேர்ந்தது. பள்ளி சிறிது தூரமாக இருந்ததால், பூட்ஸ் போடும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி விழுந்தது. அப்பொழுது என்னை பள்ளிக்கு, என் பள்ளித் தோழர்களே, நான்கைந்து பேர், சிறிது தூரத்திற்கு ஒருவரென மாற்றிமாற்றி ,மூட்டைத் தூக்குவது போல தூக்கிக் கொண்டு ஓடுவார்கள். பள்ளிக்கு செல்லும் வழியில் எங்கள் கடையிருந்தத்தால், அவர்கள் அனைவருக்கும் பொட்டுக்கடலை @ வருகடலை, வெல்லம், வேர்கடலை, மிட்டாய்கள் ,பிஸ்கட்டுகள் என இலவசமாக வழங்கப்படும். தவிர காலையிலோ அல்லது மாலையிலோ உணவோ, சிற்றுண்டியோ கொடுப்பதும் உண்டு. அதனால் எப்பொழுதும் எனக்கு உதவ சிறு நன்பர் கூட்டம் இருந்துக் கொண்டே இருக்கும். என் புத்தகங்களை ஒருவர் உடனெடுத்து வர கிராம பள்ளி வாழ்க்கை நான்காம் வகுப்புடன் முடிந்தது. பிறகு சென்னை அடையாறில் ஆந்திர மகிள சபாவில் உள்ள ஈஸவர பிரசாத் தத்தாத்ரேயா மருத்துவமனையில் சிகிச்சையுடன் பள்ளி வாழ்க்கையும் தொடர்ந்தது. அது மேலே தொடரும்...

Saturday, September 8, 2007

ஆசை தான் !! - இதை உங்களுக்குச் சொல்ல.

ஆமாம் இன்று செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி தேசிய கண் தான நாள்.
நமது விழிகளால் அவர்கள் சிரிக்கட்டும்.
அவர்களைக் கண்டு நம் வாரிசுகள் மகிழட்டும்.
கண் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இது வெளியிடப்படுகிறது. கண் தானம் ஏன் செய்ய வேண்டும் ? கண் தானத்தினால் எப்படி உதவி செய்யமுடியும் ? செய்ய வேண்டியது என்ன ? என்பதைப் பற்றிய சிறிய விழிப்புணர்வு தகவல்தான் இது.

1) எப்படி உதவி செய்ய முடியும் ?
*************************

மரணமடைந்தவர்களுடைய கண்களை, அவர் இறந்த ஆறு மணிநேரத்திற்குள், கண் வங்கிகளைத் தொடர்புக் கொண்டு தானமாக அளிக்கலாம். அதற்காக காலம் தாழ்தாமல் எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் தொடர்புக் கொண்டு தானமாகக் கொடுங்கள்.

2) ஏன் கண் தானம் செய்ய வேண்டும் ?
*****************************

கார்னியா பார்வைக் கோளாறினால் பார்வையிழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்காது. கண் மாற்று அறுவை சிகிச்சை(ஆப்ரேஷன் ) மூலமாகத்தான், அவர்களுக்கு மீண்டும் பார்வைக் கிடைக்க சாத்தியமாகும். எனவே தான் நாம் கண் தானம் செய்யவேண்டும்.

3)கண் வங்கி என்பது என்ன ?
**********************

மரணமடைந்தவர்களுடைய கண்களை தானமாகப் பெற்று, மதிப்பீடு செய்து, முறைப்படி பாதுகாத்து, கார்னியா கண் மாற்று ஆப்ரேஷனுக்காக வினியோகிக்கும் அமைப்பே, கண் வங்கி என அழைக்கப்படுகிறது.

4) கார்னியா என்பது என்ன ?
**********************

நம் கண்களுக்கு முன்புறம், கருவிழிக்கும் முன்னால், ஒளி ஊடுருவிச் செல்லக் கூடிய, இரத்தக் குழாய்கள் எதுவுமில்லாத ஒரு மெல்லிய திசு கண்ணுக்கு ஒரு சன்னலைப் போல அமைந்துள்ளது. இதுவே கார்னியா என அழைக்கப்படுகிறது. தமிழில் 'விழி வெண்படலம்' எனலாம். இதை படித்தோ, கேட்டோ, அறிந்தோ இருப்பீர்கள்.

5) கார்னியா எவ்வாறு பாதிக்கப்படுகிறது ?
*****************************

தொற்றுநோய் கிருமிகள், விபத்துக்கள், ஊட்டச்சத்து குறைவு காரணமாக, கண் சிகிச்சை குறைப்பாடு காரணமாக, சிலருக்கு பிறவியிலேயோ அல்லது பரம்பரையாகவோ கார்னியாவானது பாதிக்கப்படுகிறது.

6) யார் கண் தானம் செய்யலாம் ?
*************************

ஒரு வயது நிரம்பிய குழந்தைகளிலிருந்து அதிகபட்ச வயது வரம்பின்றி அனைவரது கண்களும் தானமாகப் பெற்றுக் கொள்ளப்படும்.

7)உறவினர் செய்ய வேண்டியது என்ன ?
******************************

இறந்தவர்களின் கண்களை மூடி, இரண்டு கண்களின் மீதும் ஈரமான பஞ்சு அல்லது ஜஸ் கட்டிகளை, இமைகளின் மீது வைத்து கார்னியா ஈரப்பதமுடன் இருக்க உதவ வேண்டும். தலைக்கு நேராக, மேலாக சுழலும் மின்விசிறிகளை நிறுத்திவிடவேண்டும். தலையை (6) ஆறு அங்குல உயரத்திற்கு, இரண்டு தலையணைகளை வைத்து, உயர்த்தி வைக்க வேண்டும். முடிந்தால், மருத்துவர்கள் வரும்வரை, இரண்டு கண்களிலும் ஏதேனும் ஆண்டிபயாட்டிக் சொட்டு மருந்துகளை, குறிப்பிட்ட இடைவெளி நேரம் விட்டு போடலாம்

8) பொது மக்கள் அல்லது உறவினர் என்ற முறையில் கண்தான இயக்கத்திற்கு நாம் எவ்வாறு உதவி செய்வது ?
******************************

அ)நமக்கு தெரிந்து யாரேனும் மரணமடைந்தால், அவரது கண்களை தானம் செய்யும்படி அவரது நெருங்கிய உறவினரை ஊக்குவித்து, அவரது சம்மத்ததுடன் 044-28281919 மற்றும் 044-28271616 என்ற தொலைப்பேசி எண்களைத் தொடர்புக் கொண்டால், மருத்துவர்கள், மரணமடைந்தவரின் உடலிருக்கும் இடத்திற்கு வந்து கண்களை தானமாக பெற்றுக் கொள்வார்கள்.
ஆ)நம் கண்களையும், நமது குடும்பத்தார் கண்களையும் தானம் செய்ய உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம். நண்பர்களையும், தெரிந்தவர்களையும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளத் தூண்டலாம். நேரில் செல்லத் தேவையில்லாமலேயே, தொலைப்பேசி அல்லது இ-மெயில் மூலமாகவோ, நமது பெயர்,முகவரி,தொலைபேசி எண், இ-மெயில் முகவரி ஆகியவற்றைக் குறிப்பிட்டு பதிவு செய்துக் கொள்ளலாம்.
தொலைபேசி எண்கள் :: 044-28271616, 044-28271036.
இ-மெயில் முகவரி [e-mail]:: api@snmail.org,irungovel@gmail.com
இவ்வாறு சென்னை சங்கர நேத்ராலயா கண்வங்கி தலைவர் திரு.அ.போ.இருங்கோவேள்
கைதொலைபேசி எண் [mb.no:] 98408 21919 அவர்கள் தினமலர் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

நன்றி:: சென்னை தினமலர் . 06\ 09 \2007.

Monday, September 3, 2007

எனக்கும் !!!!!!!!!!-13

கோயம்புத்தூர் தெலுங்குபாளைய மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்கு திரும்பிய பிறகும் அந்த மருத்துவம் தொடர்ந்தது. அத்துடன் அரிசி கழுவிய கழுநீரை சூடாக்கி, இரண்டு தகர டின்களை ஒன்றுடன் ஒன்றிணைத்து ( எள்ளெண்ணை, தேங்காய் எண்ணை டின்களை,நீங்கள் பார்த்திருப்பீர்கள் ) அதில் என்னை நிற்க வைத்து, உடல் தாங்கும் அளவு சூடான கழுநீரை ஊற்றி, ஒரு மணி நேரம் நிற்க வைத்து விடுவார்கள். நிற்பதற்கு கால்களுக்கும் வலுவியின்றி, கைகளை ஊன்றிக் கொள்வதற்கோ, சாய்ந்துக் கொள்வதற்கோ வழியின்றி, தகர டின்னின் விழிம்புகளை கைகளால் பிடித்துக் கொண்டு, தடுமாறிக் கொண்டிருப்பேன் நிற்பதற்கு.எனக்கு முன்னால் யாரும் வரமாட்டார்கள், அப்படி வந்தாலும், என்னைப் பார்க்காதது போல் செல்வார்கள். ஏனென்றால் என்னை அதிலிருந்து தூக்கிவிடச் சொல்லி அழுவதால். அவர்களாக வந்து என்னை தூக்கிவிட்டால்தான். அதுவரை அனுபவித்துதான் ஆகவேண்டும்.பக்கத்து வீடுகளிலிருந்தும் என் தேவைக்காக கழுநீர் கொண்டு வந்து தினமும் கொடுப்பார்கள்.
இந்த சமயத்தில் மறக்க முடியாத நிகழ்ச்சியைச் சொல்ல வேண்டும். நமது பாரதத்தில் குழந்தைகள் அனைவராலும் 'மாமா' என அழைக்கப் பட்டவரும், படுகின்றவரும்,ரோஜா மலரால் உதாரணப்படுத்தபடுகின்றவரான, நமது முன்னால் பாரத பிரதமர் 'ஜவகர்லால் நேரு ' மறைவு செய்தியைக் கேட்டு, எங்கள் குடும்பத்தில் அனைவரும், வானொலி செய்திகளை தொடர்ந்து கேட்டவாறு, சோகத்தில் மூழ்கி கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்ததும், நானும் புரியாத நிலையில் அவர்களுடன் சேர்ந்து அழுத்தும் ஒருமறக்க முடியாத நிகழ்ச்சியாகும். அடுத்தது ஆரம்ப கல்வியைப் பற்றி...

Sunday, August 19, 2007

சந்தோசமே நிரந்தரமாகட்டும்.

விரல்கள் தவிர வேறெந்த உறுப்பும் இயங்காத, 'மஸ்குலர் டிஸ்ட்ரபி' என்ற தசை நலிவு நோயால் பாதிக்கப்பட்ட வானவன் மாதேவி கூறுகிறார்.
படிக்கிற வயதில் நிறைய கனவுகள் இருந்துச்சி. விழுந்து விழுந்து படிச்சேன். ஒரு நாள் நடந்து போய்க்கிட்டிருந்தபோது தவறி விழுந்து விட்டேன். அதிலே இருந்து உடம்பு இளச்சிக்கிட்டே வந்தது. சத்து இல்லாத்தால் விழுவதாக விட்டுடாங்க. கால் வலு குறைய ஆரம்பிச்சு, மாடியேற முடியாத நிலையேற்ப்பட்ட போது தான் விபரீதம் தெரிஞ்சது.
இந்த நோய் பாதித்த மற்ற குழந்தைகள் 18 வயதுக்கு மேல் உயிரோட இருக்கிறதே ஆச்சிரியமாம்.ஒவ்வொரு பாகமாய் செயலிழக்க வெச்சு, கடைசியிலே ஆளையே சாப்பிட்டு விடுமாம்.
ஆயுர்வேதம்,சித்தா, ஹோமியோபதின்னு ஊர் ஊரா அலைஞ்சோம்.பணம் தான் செலவாச்சு. என்னோட தங்கச்சிக்கும் நோய் அறிகுறி தெரியத்தொடங்குச்சி. திருநெல்வேலியிலே ஒரு டாக்டர், மணிக்கணக்கிலே ஒரு பலகையில் கையையும், காலையும் கட்டி இரண்டு பேரையும் நிக்க வெச்சார். மரண வேதனை.
அப்புறம் ஆயுர்வேத சிகைச்சையில் கொஞ்சம் முன்னேற்றம் கிடைச்சது. மருந்துக்கு மட்டும் ஒரு மாதத்திற்கு இரண்டாயிரம் செலவாச்சு. அந்த அளவு செலவு செய்யக் கூடிய நிலையிலே குடும்பம் இல்லை. அதையும் விட்டுடோம். மனசு சந்தோசமா இருந்தா, சாவை கொஞ்ச காலத்திற்கு தள்ளிப்போடலாம். அதைதான் இப்போ செய்யுறோம்.
----------------------------------------------------------
அடுத்ததா , வானவன் மாதேவியின் சகோதரி இயல் இசை வல்லபி சொல்வதை கேட்போமா!

எங்களைப் பார்த்து யாரும் பரிதாபப்படக் கூடாது. 10ம் வகுப்பு படித்த பிறகு வீட்டில் இருந்தபடியே பிளஸ் 2 பாஸ் பண்ணிட்டோம். அப்பா, அம்மாவுக்கு உபயோகமாய் இருக்கலாமுன்னு தான் கம்பியுட்டர் கத்துக்கிட்டு 'டிடிபி' வேலை செய்யுறோம். வேலைக் கொடுங்கன்னு பள்ளி, கல்லூரிகள்ல படிப்படியா ஏறி இறங்கினோம்.ஊனத்தைப் பார்த்து பரிதாபப் பட்டவங்க, வேலை கொடுக்கத் தயங்கினாங்க. ஒரு கட்டத்திலே எங்க ஆர்வத்தையும், உழைப்பையும் பார்த்தவங்க வேலைத் தரத்தொடங்கினாங்க.
இவ்வளவு பிரச்சனையுலும் நாங்க தன்னம்பிக்கையோட இருக்கக் காரணம், எங்க அத்தை. மூனு வயதிலே போலியோவில் பாதிக்கப்பட்டவங்க, அவங்க பள்ளியில் படித்ததே இரண்டாம் வகுப்பு வரைதாங்க. பிறகு பிரைவேட்டாவே படிச்சு, எம்.ஏ. (M.A.) முடிச்சாங்க. அவங்கதான் எங்களை உற்சாகப்படுத்தினவங்க.
-----------------------------------------------------------

இவர்களிருவரும் கூறியதைக் கேட்டீர்களல்லவா. அவர்களைப் பார்த்து நாம் பரிதாபப் பட வேண்டாம். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, வேலை வாய்ப்பைக் கொடுப்போம். அவர்களின் வாழ்நாள் முடிவு வரை நோயின் கடுமைத் தெரியாமல், மகிழ்ச்சியாகவே வாழ, இறைவனின் தாள் பணிந்து, நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.

பின்குறிப்பு; இவர்களின் முகவரிக்காக தவிப்பீர்களென எனக்குத் தெரியும். விசாரித்து கூடிய விரைவில் வெளியிட முயல்கிறேன்.

நன்றி; தினமலர், சென்னை. நாள்; 19\08\2007. 'சொல்கிறார்கள்' பகுதி.

Tuesday, August 14, 2007

இந்திய சுதந்திர தின வைரவிழா வாழ்த்து.

சுதந்திரம் என்பது நமக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய புதையல் ஆகும். அது சாதாரனமாக நமக்கு கிடைத்து விடவில்லை. அன்னியரிடம் அடிமைப் பட்டிருந்த நம் முன்னோர்கள், உடல், பொருள், ஆவியென மிகப் பெரியத் தியாகங்களைச் செய்து பெற்றதாகும்.அதை பெருமைப் படுத்தும் விதத்தில் பொருப்பாக காப்பாற்ற வேண்டியது நமது கடமை அல்லவா. நான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிப்பதைத் தான் காப்பாற்றுவேன் என்றும், நம் முன்னோர்கள் தியாகங்கள் பல செய்து பெற்றுத்தந்ததை, காப்பாற்றுவதில் பொருப்பில்லாமல் நடந்துக்கொள்வது வெட்கப்பட வேண்டியதும், கேவலப்பட வேண்டியதும் அல்லவா. தய்யை செய்து சிறிது சிந்தியுங்கள். இந்த சமயத்தில் ஒரு சிறு கதையைக் கூற விரும்புகிறேன். ஒரு குரு இருந்தார். அவருக்கு இரண்டு சீடர்கள். குருவிடம் மரியாதை இருந்தாலும், குருவுக்கு பணிவிடை செய்வதில், அவர்களுக்கிடையே அடிக்கடி பிணக்கு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. இதைப் பார்த்த குரு, அவர்களுக்குள் ஒழுக்கமும், கட்டுப்பாடும் ஏற்படவேண்டும் என நினைத்து, அனைத்து பணிகளையும் சரிசமமாகப் பிரித்துக் கொடுத்தார். அதே போல குரு ஓய்வெடுக்கும்பொது இதமாக கைகால்களை அழுத்தி விடுதலிலும் பங்கு கொடுத்தார்.அதிலும் யார் எந்த பக்கம் என்பது பிரச்சனை. அதனால் வலப்பக்கம் ஒரு சீடனுக்கும், இடப்பக்கம் ஒரு சீடனுக்குமென பிரித்துக் கொடுத்தார். சிறிது நாட்கள் சீராக நடந்தாலும், ஒரு நாள் ஒரு சீடனை, வேறு வேலையாய் குரு வெளியே அனுப்பி விட்டார். குரு ஓய்வெடுக்கும் நேரம் நெருங்கியபோது, அங்கிருந்த சீடனிடம் கால்களை அழுத்தி விடச் சொன்னார். அவனோ ஒரு காலை மட்டும் அழுத்தி விட்டுக் கொண்டிருந்தான். அதை கவணித்த குரு, மற்றொரு காலையும் அழுத்தி விடச் சொன்னார். அந்த சீடனுக்கு ஒதிக்கிய காலை, நான் அழுத்தி விட மாட்டேனென மறுத்ததுடன், அந்த சீடனின் மேலுள்ள கோபத்தினால், குருவின் மற்றொரு காலை ஓங்கி அடித்தான். குருவோ வலியால் அலறித்துடித்தார். அந்த சமயத்தில் வெளியே சென்றிருந்த சீடன் அங்கு வர, விபரம் அறிந்து, கோபமேலிட்டு, எனக்கு ஒதிக்கிய குருவின் காலை எப்படி அடிக்கலாம் என்று கூறிக்கொண்டே, மற்றொரு சீடன் அழுத்தி விட்ட குருவின் காலை, ஓங்கி மிதித்தான். குருவோ இரண்டு கால்களிலும் வலி ஏற்பட்டு அலறித்துடித்தார்.அது போல நம் நாடு ஒன்றாக இருந்தாலும், இந்த பகுதி, அதிலுள்ள வளங்கள் எமக்கு( எங்களுக்கு) மட்டுமே உரிமையென, நமது பாரத அன்னையை ஆளுக்கு ஒரு பகுதியாக கூறுப்போட்டு சிதைக்கப் பார்கிறார்கள்.அந்த முட்டாள் சீடர்களிடம் மாட்டிக்கொண்டு தவித்த குரு போல நாமும் மீண்டும் அடிமைப்பட்டு விடாமல், நமது பாரத அன்னையை சிறப்பாக வலுவடைய செய்வோமென இந்த 60 ஆம் ஆண்டு, வைரவிழா சுதந்திரதின நாளில் ஒருவருடன் ஒருவரென அனைவரும் கைகோர்த்து உறுதி எடுத்துக் கொள்வோம்.
வாழ்க பாரத தேசம்!
வளர்க பாரத்தின் புகழ் !!

Monday, August 13, 2007

எனக்கும் !!!!!!!!!!-12

காலையில் உடற்பயிற்சியாளர், உடற்பயிற்சி செய்து விடுவார். பிறகு காட் லிவர் ஆயில் (Cod Liver Oil) எனப்படும் ஒரு வகை மீனின் கல்லீரலில் இருந்து எடுக்கப்படும் எண்ணை (சிவப்பு கலரில் இருக்கும் ) உடல் முழுவதும் பூசி, இன்ஃபெரா லைட் (Infra Light) எனப்படும் சிவப்பு அகக்கதிர் வீச்சு விளக்கு (சுமார் 500 W - 1000 W இருக்கும்.ஞாபகமில்லை.விளக்கு கைவசம் இள்ளது. பல்பு (Bulb Fuse) ஃப்யூஸ் ஆகிவிட்டது.)மூலம் உடல் முழுவதும் வெப்பமூட்டுவார்கள். இதனால் நரம்புகள் வழுவடையுமாம். உடலில் எண்ணை ஊறியபிறகு, மதியம் மீண்டும் உடற்பயிற்சி. மாலை நேரத்தில் மண்ணெண்ணை அடுப்பிலே (Kerosene Stove) இரும்பு வானலியில், பச்சரிசி தவிடு போட்டு, அதிலே சிறிதுசிறிதாக பால் ஊற்றி வறுத்து,உடல் பொருக்கும் சூட்டிலே, துணியிலேப் போட்டு, சூடாக உடல் முழுவதும் ஒத்திடம் கொடுப்பார்கள். இரவு மீண்டும் உடற்பயிற்சியென்று ஒரு வருடம் காலம் கடந்தது. பிறந்து வளர்ந்த போது கொழுக்கொழு என்றிருந்த நான், அந்த சமயத்தில் எழும்பும் தோளுமாக இருந்தேன் என்று சொல்லக் கூடிய அளவுக்கு இல்லாவிட்டாலும், மிக ஒல்லியாக இருந்தேன். இரண்டு கால்களுக்கு பூட்ஸும் அத்துடன் அக்குள் வரை உள்ளே பட்டைக் கம்பிகள் பொருத்திய தோல்கவசமும்,(அதாவது சண்டைக்குச் செல்லும் வீரன் போல, அல்லது இயந்திர மனிதன் போல) பொருத்தி, காந்தி தாத்தா கையில் வைத்திருந்த கம்பு போல இரண்டு கைகளிலும் கொடுத்து நடைப்பயிற்சி கொடுத்தார்கள்.தப்பித்தவறி கீழே விழுந்தால், நெடுஞ்சான்கிடையாகத்தான் (மரம் சாய்வது போல) விழவேண்டியிருக்கும்.பிறருடைய உதவியில்லாமல் தனியாக எழுந்து உட்காரவோ, நிற்கவோ முடியாத சூழ்நிலை தான். இரண்டு பேர் தூக்கி நிறுத்த, ஒருவர் ஊன்று கோள்களை எடுத்து கொடுக்க வேண்டும். இப்படியே கோவை மருத்துவமனை வாசம் ஒன்னரை வருடங்கள் கழிந்தது. இந்த மருத்துவ முறையை வீட்டிலேயே தொடர்ந்துக் கொள்ளலாம் என்பதாலோ, மருத்துவரின் அலோசனையின் பேரிலோ, வீடு திரும்பி விட்டோம். அடுத்து வீட்டிலே தொடர்ந்த மருத்துவம். ஆரம்ப கல்வி பற்றி.......

Tuesday, August 7, 2007

எனக்கும் !!!!!!!!!!-11

தொடர்ந்தது மருத்துவம் யார்யார் சொன்னாலும் அதன்படியெல்லாம். நாங்கள் சைவ உணவு உண்பவர்களாய் இருப்பினும், மருத்துவம் என்பதற்காக,பச்சைக்கிளிகள் இரத்தம் என் உடலில் பூசப்பட்டது. பச்சையாக கோழிமுட்டைகளையும்,புறாக்கள் கறியும் வீட்டுவேலையாட்கள் மூலமாக வலுக்கட்டாயமாக எனக்கு ஊட்டப்பட்டது. அதற்காக நான் செய்த ஆர்பாட்டங்களும், எடுத்த வாந்திகளும், அழுத அழுகைகளும் மறக்க முடியாதவை.பாண்டி @ பாண்டிச்சேரி @ புதுவை @ புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் ஆறு மாதங்களும்,கோவை என அழைக்கப்படும் கோயமுத்தூர் தெலுங்கு பாளையத்தில் தற்போதும் இயங்கி வருகின்ற இயற்க்கை மருத்துவமனையில் ஒன்னரை வருடங்களும் தொடர்ந்தது. அங்கு மருத்துவமனையில் என் அம்மா மூன்று மாதங்களும், எம் பாட்டி.Late.செங்கவள்ளி அவர்களுடன்
எம் இரண்டாவது சகோதரி.Late.திருமதி.வசந்த குமாரி @ வசந்தா ஹரிகிருஷ்ணன் & அவர்களும் மூன்று மாதங்களும் மாறிமாறி என்னுடனிருந்து வைத்தியர் சொல்லிக் கொடுத்தப்படி எனக்குறிய மருத்துவங்களை நேரங்காலம் தவறாமல் எனக்கு செய்ததும், அதே சமயத்தில் என்னுடனிருந்த மற்ற நோயளிகள் அவர்களுடன் உதவியாக இருந்தவர்களுகும் பொழுது போவதற்காகவும் உற்சாகமாக இருப்பதற்காகவும் எம் பாட்டியார் அவ்வப்போது கூறிய நீதிக்கதைகள் நோயை மறக்கவும்,அனைவரையும் ஊக்கப்படுத்துபடியாகவும் இருந்ததை மறக்கவோ, மறுக்கவோ முடியாததாகும்.கோவை மருத்துவமனையில் எனக்கு அளிக்கப்பட்ட மருத்துவமுறைகள் அடுத்ததில்......

Monday, July 23, 2007

எனக்கும் !!!!!!!!!!-10

ஐந்து வயதிலே, என் வாழ்வின் பக்கமே, தலைகீழாக மாற்றி எழுதப்பட்டது. ஆம், சேலம் நகரிலே, எங்கள் உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு (யார் வீட்டுத்திருமணம், உறவுமுறை ஆகியவை நினைவுக்கு வரவில்லை.)சென்றிருந்தோம். முதல் நாள் அங்கும் ஆட்டம் பாட்டம் தான்.இரண்டாம் நாள் காலையிலிருந்தே, மணவறையிலே, பின்புறம் சுருண்டு படுத்துக்கொண்டே இருந்ததைப் பார்த்த எமது தாயார், பாட்டியிடம் வருத்தப்பட, அவரோ, நான் நேற்று முழுவதும் குதித்ததின் விளைவுயென சமாதானம் கூற, பிறகு அன்று மாலைப்பொழுது, சேலத்தில் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைப்பெரும் பொருட்காட்சிக்கு, எனது அப்பாவோ தோளிலே எனைச் சுமந்து சுற்றிக் காட்ட ( 1. கூட்டமுள்ள இடங்களில் குழந்தைகள் நன்றாகப் பார்க்க, 2.கூட்டத்தில் குழந்தைகள் தொலைந்து போய்விடாமலிருக்க, 3) குழந்தைகளுக்கு கால் வலிக்குமென, இப்படி மேலும் சில காரணங்களால் ), அது சமயம், குடிக்க தண்ணீர் கேட்டேன். வாங்கிக் கொடுத்த தண்ணிரை, தோளில் அமர்ந்தபடியே நான் குடித்தேன். நான் குடித்த நீர் வயிற்றுக்குள் சிறிது செல்ல, மூக்கின் வழியே வெளியே சிறிதும் சிந்தியது. கிழே சிந்தாமல் தண்ணீர் குடியென அப்பா கூற, மீண்டும் குடித்த நீர் மூக்கின் வழியே பைப்பிலே சிந்துவது போல, வெளியே சிந்த,மீண்டும் அப்பா கடிந்துக் கொள்ள, மூக்கிலே தண்ணீர் வருவதை கூறினேன். என் உடல் நிலை மாற்றத்தை உணர்ந்த அப்பா, திருமணமண்டபம் விரைந்து அம்மாவுடன் மருத்துவரை (டாக்டர்)காண அழைத்துச் சென்றார்கள். அம்மா, மருத்துவரிடம் (டாக்டரிடம்)நேரடியாகவே, எனக்கு டிப்டீரீயா ( தொண்டை அடைப்பான் )நோய் தாக்கியுள்ளது என கூறி பதற, மருத்தவரோ (டாக்டரோ ),பரிசோதனை செய்து விட்டு, உண்மையை அறிந்தவராக, அதிர்ந்து போய், பரிசோதனை செய்வதற்கு முன்பாகவே, மருத்துவரே( டாக்டரே ) உணரமுடியாத தொடக்க நிலையில்,தொடக்கப்பள்ளிப் படிப்பையே முடிக்காத, நீங்கள் எப்படி உணர்ந்தீர்களேன எனது தாயிடம் வினவ, வாரயிதழ்கள் படிப்பதையும், டிப்தீரீயா (தொண்டை அடைப்பான் ) நோயின் அறிகுறிகளைப் பற்றி படித்ததையும் கூற,மருத்துவர் (டாக்டர் ) ஊசி மருந்தை எழுதித்தர, அப்பா வாங்கி வர,உடனே ஊசியும் போடப்பட்டது எனது வலது இடுப்பிலே. அம்மா என்னுடனிருக்க,மீண்டும் வெளியே புறப்பட்டுச் சென்றார் அப்பா,மருந்து வாங்கிய கடை வழியாக. மருந்துக்கடைக்காரரோ, பதற்றத்துடன் அழைத்து, ஒரு குப்பியில் (பாட்டிலில்) உள்ள மருந்தில் பாதிமருந்து தான் ஊசி போடவேண்டுமென கூறி,மருந்தின் வீரியத்தை, மருத்துவருக்கு (டாக்டருக்கு) தகவல் தரச் சொல்ல, மருத்துவரும் ( டாக்டரும்)அவசரத்தில் ஏற்பட்ட தவறை உணர்தாலும், மாற்று மருந்தில்லாததால், சிறிது நேரத்தில் என் உடல் முழுவதும் உணர்வுகளின்றி செயலிழந்து விட்டது. பசித்தால் கேட்க தெரியாது. பேச்சு இல்லை. சிறுநீர், மலம் கழிப்பதோ,பூச்சிகள்,எறும்புகள் உடல் மேல் ஊர்வதோ,தொடுவதோ மற்ற எந்த உணர்வுகளும் இல்லை. அதனால் இச்சமயத்தில் நடந்த நிகழ்வுகளும் நினைவில்லை. தொடர்ந்த மருத்துவம் பற்றியும், என் உடல்நிலை மாற்றங்கள் பற்றியும், பிறகு......

Wednesday, July 18, 2007

ஏன் இப்படி ????

சென்ற வாரம் ஒரு செய்தியை வாசித்தேன். உடனே பதிவு செய்திட முடியவில்லை. எப்போதும் போல காரணங்கள்தான் வேண்டாமே அது. விசயத்திற்கு வருவோமா ? . செவிதிறன் குறைந்தோர் சிலர் குழுவாக, சில கோரிக்கைகளுடன், கோட்டைக்கு, நமது தமிழக முதல்வரை சந்திக்க சென்றிருக்கிறார்கள். அவர்களை அனுமதிக்க காவலர்கள் மறுத்ததுடன், கலைந்துச் செல்லவும் வற்புறுத்தியிருக்கிறார்கள். பார்த்து மனு கொடுக்காமல் அகலமாட்டோமென கூற, அதனால் கோபமடைந்த காவலர்கள் விரட்டி அடித்திருக்கிறார்கள்.

அவர்களின் கோரிக்கைகள் என்ன ?

1) ஊனமுற்றோருக்கான வேலை வாப்பிலே இட ஒதுக்கீடு.
2) அரசு அமைத்துள்ள ஊனமுற்றாருக்கான நலவாரியத்திலே, இவர்களின் கருத்தை வெளியிட சைகை மொழியாளர் நியமிக்க கோரி.
3) மோட்டார் வாகனங்களை ஓட்ட ட்ரைவிங் லைசன்ஸ் வழங்க கோரி.
இப்படி மேலும் சில கோரிக்கைகள் தான்.

காவலர்கள் என்ன செய்திருக்கலாம்

1) உடனடியாக முதலமைச்சரின் உதவியாளர்களிடம் ஆலோசனைப்பெற்று உதவி இருக்கலாம்.
2) சமுகநலத்துறை அமைச்சர் அல்லது அவரின் உதவியாளர்களிடம் தகவல் தெரிவித்து உதவியிருக்கலாம்.
3) ஊனமுற்றோர் நலவாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உதவி இருக்கலாம்.
அதைவிடுத்து வலுக்கட்டாயமாக விரட்டி அடிப்பதில் என்ன சாதித்து விடப் போகிறார்கள் ? நாம் இரானுவ ஆட்சியிலா இருந்துக் கொண்டிருக்கிறோம்.
பொறுப்பிலுள்ளவர்கள் பொறுப்பாக இருந்தால், தமிழகத்தில் பொன்னல்லவா!!
விளையும்.


இப்படி நடக்க காரணமென்ன?
1) கோரிக்கை வைப்பவர்கள் நேரடியாக முதல்வரையே பார்க்க வருவதின் காரணமென்ன ?
பதில்: கீழ்மட்டத்தில் பொருப்பிலுள்ள அதிகாரிகள் தேவையான உதவிகள் புரிவதுடன், சரியான வழிமுறைகளை காட்டி செயல் படாதது தான் மிக முக்கியமான காரணமாக கருதுகிறேன். அப்படி அவர்களால் முடிவுகாண முடியாத பட்சத்தில், தேவையில்லாமல் அலையவிடுவதை தவிர்த்து, அவர்களின் மேல் அதிகாரிகளை தங்களே தொடர்புக்கொண்டு, விபரம் அறிந்து எந்த மட்டத்தில், யாரை சந்திப்பது, முறையானது என்று சரியான வழிகாட்டுதலை செய்தால், மக்களும் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக அனுகுவதுடன், தேவையின்றி போராடவுமாட்டார்கள்.
அப்படி ஒரு காலம் பிறக்குமா?

இது குறித்து கருத்துகளையும், தீர்வுகளையும் எழுதுங்களேன்.

Monday, July 16, 2007

எனக்கும் !!!!!!!!!!-9

நான் நன்றாக நடக்க ஆரம்பித்த பிறகு, சிறிது தொலைவிலிருந்த எங்கள் கடைக்கு, ஒரே ஓட்டமாக ஓடுவேனாம்,ஏனென்றால் வழியில் பார்க்கின்ற, செல்கின்ற தெரிந்தவர்கள், என்னைப் பிடித்துக் கொண்டு, என் கைகளில் இருப்பதை பிடுங்கிக் கொண்டோ அல்லது நீ போட்டிருக்கும் நகைகள் எங்களுடையது,கழட்டிக கொள்கிறோம் என்றோ, இப்படி ஏதாவது சொல்லி வேண்டுமென்றே சீண்டுவார்களாம். தவிர என்னுடைய கைங்காரியமாக, கடையிலிருந்து விற்பனைக்கு இருக்கும் சாட்டைகளில் ஒன்றை (மனிதர்களை அடிக்கும் சாட்டை அல்ல, மாடுகளை,பொதிசுமக்கும் கழுதைகளை ஓட்ட பயன் பட்டது ) யாருக்கும் தெரியாமல் உருவிக்கொண்டு, வழியில் வரும்போது, என்னை பிடிக்க முயற்சிப்பவர்களை மிரட்டுவதற்காகவும், வழியில் மேய்ந்துக்கொண்டிருக்கும் கழுதைகளை விரட்டிக் கொண்டு ஓடியதும் தான் ஐந்து வயது வரை நினைவிலே நிற்கும் இனிமையான நிகழ்வுகளாகும். அதற்கு பின் நடந்தது காலத்தின் கோலமா?, விதியின் விளையாட்டா?......

Saturday, July 14, 2007

எனக்கும் !!!!!!!!!!-8

நினைவிலே உள்ள துள்ளிக் குதித்த நிகழ்வுகள்

1) நான் 6 பெண்மகவுகளுக்கு பிறந்ததாலும்,
2) பிறக்கும் போதே சுருட்டை முடியுடனும் கொழுக்கொழுவென்று இருந்ததாலும்
3) வீட்டில் உள்ளவர்களும்
4) கிராமத்தைச் சேர்ந்தவர்களும்
5) வணிக சம்பந்தமாக அருகிலுள்ள கிராமங்களிலிருந்து வருபவர்களும்
கொஞ்சி, கொஞ்சி மகிழ, நானும் செழிப்பாக வளர்ந்தேன் 5 வயது வரை. இதிலே சில சொல்லக் கேட்டவை, சில நினைவிலே உள்ளவை. எங்கள் குடும்பமும், பெரியப்பா குடும்பமும் பெரிய கூட்டுக்குடும்பமாக இருந்ததால், என்னை விட 1 1/2 வயதே பெரியவரான எனது சகோதரன். ரமேஷ் பாபு (பெரியப்பாவின் மகன்), நான் சிறுகுழந்தையாக இருந்தபோது, எனது தம்பி,எனது தம்பி என்றும், எவ்வளவு அழகாக இருக்கிறான் என்று என்னையே சுற்றிக் கொண்டும், தூக்கமுடியாமல் தூக்கிக் கொண்டும் அலைவாராம். எங்கள் பெரிய அண்ணியார்.Late.திருமதி. கோகிலா அவர்களின் திருமணத்திற்கு( பெரியப்பாவின் பெரிய, முதல் மருமகள் ) பிறகு தான் நான் பிறந்ததாலும், என்னை கொழுந்தினார் என்றுதான் அழைப்பார்கள். அவரின் கடைசி கொழுந்தனாரான ரமேஷ் பாபுவிடம், சின்ன கொழுந்தினாரே... 'குட்டி கொழுந்தினாரை' ( அதாவது என்னைத் தான்) கீழே போட்டுவிடாதீர்கள், என்று பதறுவார்களாம். எவ்வளவுதான் எல்லோரும் என்னைத் தூக்கிக் கொஞ்சினாலும், முறைப்படி குப்புற விழ, தவழ, தட்டுத்தடுமாறி கிழே விழுந்து எழுந்து நடக்க வாய்ப்புக் கொடுத்துள்ளார்கள். மிக விரைவிலே எழுந்து நடந்த நான், 1.1\2 வயதிலே 3 வயது பையன் போல் இருந்துள்ளேன். நடக்க ஆரம்பித்தபின் நடந்த சொல்ல கேட்ட, நினைவிலுள்ள சில........

Wednesday, July 11, 2007

எனக்கும் !!!!!!!!!!-7

எங்களுடைய தாத்தா,பாட்டி(அம்மாவின் அப்பா,அம்மா\Late. மஹாராஜ ராஜஸ்ரீ.S.ராஜகோபால் செட்டியார்,Late.ஸ்ரீமதி. செங்கவல்லி) காசி,பத்ரிநாத், கேதாரிநாத் புனிதபயணம் சென்றபோது, ஆண் வாரிசுகளே இல்லாமலிருந்த எங்கள் தாய் மற்றும் சித்திக்காகவும் (தாயின் சகோதரி.ஸ்ரீமதி.Rவிடோபாய்), ஆண்மகவு பிறந்தால் ''பத்ரி'' என்ற பெயர் வைப்பதாக வேண்டுதல் செய்துக் கொண்டு ஊர் திரும்பிய பின் சில மாதங்களில் எனது தாய் என்னையும், மேலும் சில மாதங்களுக்கு பிறகு எமது சித்தியும் ஆண்மகவுகளாகப் பெற்றெடுக்க எனக்கு ''பத்ரி நாராயணன்'' என்ற நாமகரணமும் (பெயரும்), எமது சித்தியின் மகனுக்கு
''பத்ரி குமார்'' என்ற திருநாமத்தையுமிட்டு மகிழ்ந்தார்கள். எங்கள் குடும்பம் வணிகக்குடும்பமாக இருந்தாலும், தவமிருந்து பெற்றப் பிள்ளையாகையால், ராஜா வீட்டு கன்னுக்குட்டிப் போல, கைகளில் தங்கவளையல்களும், பத்து விரல்களிலும் வளையல்களுடன் சங்கிலிகளால் இணைந்த மோதிரங்களையும், கழுத்திலே தங்கச்சங்கிலிகளும், காதிலே கற்கள் பதித்த கடுக்கண்களும், இடுப்பிலே ஆலிலை கிருஷ்ன்னுடன் கூடிய (மானத்தைக் காக்க) அரைஞாண்கொடி, கால்களில் தண்டைகளுடன் சர்வ அழங்காரத்துடன் துள்ளிக் குதித்த நாட்கள் நிழலுருவமாய் நினைவிலே நிழலாடுகிறது. நினைவிலே உள்ள துள்ளிக் குதித்த நிகழ்வுகள் அடுத்து.....

Friday, June 29, 2007

ஊக்கம் பெறுவோம் இதைப் பார்த்து - 3

இந்தியாவின் 94 வருட திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக வாய் பேச முடியாத, காது கேளாத வாலிபர் ஒரு ஹீரோவாக நடித்துள்ளார். அவரது செயல் பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இந்தியாவில் ஆரம்ப கால திரைப்படங்களில், சொந்தக் குரலில் பேச, பாட தெரிந்தவர்கள் மட்டுமே நடிக்க முடியும். ஏனெனில் படப்பிடிப்பு தளத்திலேயே, படம் பிடிக்கும் போதே
பேசுவது, பாடுவது பதிவு செய்தாக வேண்டும். தற்போதைய நடைமுறை படி நடிப்பவர்களுக்கு அழகு மட்டும் இருந்தால் போதும், பிறகு டப்பிங் என்னும் முறையில் வேறொருவர் குரலை பதிவு செய்து விடுகிறார்கள். எப்படியிருப்பினும் படப்பிடிப்பின் போது வசனங்களுக்கு ஏற்றவாறு வாய் அசைத்தாக வேண்டும். அதற்கு காது கேட்க வேண்டுமே.
கர்நாடக தொழிலதிபரும், நடிகருமான சுரேஷ் சர்மாவின் இரண்டாவது மகன் துருவ் பிறப்பிலேயே காது கேளா, வாய் பேசா குறையுடையவர். தற்போது 25 வயதாகிறது. ஆசிரியர்கள் கூறுவது புரியாததால் PUC படிக்கும் போது கல்லூரி வாழ்வை துறந்தார். பிறகு கம்ப்யூட்டர் வகுப்புகளுக்கு செல்ல ஆரம்பித்துள்ளார். 2005 ஆண்டு நடந்த காது கேளாதோர் உலக கோப்பை கிரிக்கெட் பங்கேற்றார். ஒரு தணியாத தாகம் துருவை வாட்டிக் கொண்டேயிருந்தது. ஒரு நாள் தந்தையுடன் டப்பிங் தியேட்டருக்கு சென்றிருந்த போது, அங்கு திரைப்படத்தை ஓடவிட்டு, திரையில் நடிக்கும் நடிகர்களின் வாய் அசைப்பிற்கு ஏற்ற வகையில் டப்பிங் பேசுவதை பார்த்த துருவ் பரபரப்புஅடைந்தார். தன்னாலும் நடிக்க முடியும் என்ற எண்ணம் தோன்றியவுடன், தந்தையிடம் வெளியிட, அவர் ஜோக் எனக்கருதி அந்த விசயத்தை நிராகரித்து விட்டார். சுரேசின் நண்பரும், திரைப்பட தயாரிப்பாளருமான சித்தராமுவுக்கு துருவின் விருப்பம் தெரியவர, வசனத்தை புரிந்து வாய் அசைக்க வைத்தால் போதுமானது என கூறி, துருவ் ஹூரோவாக நடிக்க சினேகாஞ்சலி என்ற கன்னடதிரைப்படம் தயாரிக்கி வருகிறது. அடுத்த நாளுக்கான வசனத்தை முதல் நாள் இரவே தந்தை விளக்கி கூறிவிட, முதல் நாள் தடுமாறினாலும் பிறகு மற்றவர்கள் கூறுவதை விரைவாக புரிந்துகொள்வதாகவும், வசனத்திற்கேற்றபடி சர்யான நேரத்தில் வாய் அசைப்பதாகவும் திரைப்படக் குழுவினர் வியப்புடன் கூறுகிறார்கள். அவர் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துவதுடன்,நாமும் ஊக்கம் பெறுவோம் இதைப் பார்த்து.

ஏக்கங்கள்-1 (அரசியல் அல்ல !! )

தமிழகத்தில் காது கேளாதவர்களுக்கு இரு சக்கர வாகனம் ஓட்ட லைசென்ஸ் வழங்க முன்வரவேண்டும், என டில்லியில் உள்ள காது கேளாதவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டமைப்பின் சார்பில், தமிழ் மாநில காது கேளாதவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் சென்ற ஜுன் 24 \2007 அன்று சென்னையில் நடந்துள்ளது. அமைப்பின் தேசிய செயளாளர் நாராயணன் தலைமையில், துணைத்தலைவர். சோனின் சின்கா, பொருளாளர் சந்தீப், சைகைமொழி பெயர்பாளர் சுந்தர் ஆகியோருடன் சென்னை,திருச்சி,தஞ்சாவூர், காஞ்சிபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்தும் உருப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
1) தமிழக ஊனமுற்றோர் ஆணையக் குழுவில், காது கேளாதவர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துக் கூற ஒரு பிரதிநிதி நியமிக்கவும், 2) வேலை வாய்ப்பில் காது கேளாதவர்களுக்கும் முன்னுரிமைத் தரவேண்டும், 3) வாகன லைசென்ஸ் பல நாடுகளில் வழங்குவது போல, தமிழகத்திலும் லைசென்ஸ் வழங்க உத்திரவு பிறப்பிக்க வேண்டும், 4) ஆந்திராவில் உள்ளது போல, தமிழகத்திலும் காது கேளாதவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும், 5) காது கேளாதவர்கள் பள்ளிகளில் சைகை மொழிகளையும் கற்பிக்கும் வகையில் ஆசிரியர்கள் நியமிக்கப் படவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளதாக அறிகிறோம்.
நன்றி::சென்னை. தினமலர் நாளிதழ். 25\6\07.
=========================================
அரசியல் அல்ல !!

இதனை அரசியல் பிரச்சனையாக கருதாமல், தமிழகத்தில் உள்ள காது கேளாதவர்களுக்கு, அவர்களின் கோரிக்கைகளை தகுந்தவர்களுடன் கலந்தாய்ந்து, தேவையான உத்தரவுகளை வழங்கி உதவும்படி கேட்டுக்கொள்கிறோம்.
==========================================

Tuesday, June 26, 2007

ஊக்கம் பெறுவோம் இதைப் பார்த்து - 2

மன வலிமையால் விதியை வெல்லும் சிவராமன்

திருச்சூர் மாவட்டம் ஒல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராமன். இவர், டில்லி இ.எஸ். இ., அலுவலகத்தில் தட்டெழுத்தராக வேலைப் பார்த்து வந்த போது, இரு சக்கர வாகன விபத்தில் முதுகெழும்பு ஒடிந்ததில்,இடுப்புக்கு கீழ் பகுதி முழுவதும் செயல்படாமலும், முதுகெழும்பில் புற்றுநோயும் தாக்கியதால், படுத்த படுக்கையாகிவிட்டார்.
இரு சக்கர நாற்காலியில் கூட உட்கார முடியாத நிலையில், தனது வேலையை ராஜினாமா செய்து விட்டார். வருங்கால வாழ்க்கையைப் பற்றி யோசித்தவேலையில் மனவலிமையுடனும், மருத்துவர்களின் உதவியுடனும் உட்கார முயற்சி செய்து வெற்றிக் கண்ட அவர், கை, கால் இல்லாதவர்கள் கார் ஓட்டுவதை நாளிதழ்களில் படித்து அறிந்து, மலப்புரத்திலுள்ள முஸ்தபா என்னும் கார் மெக்கானிக்கை அழைத்து, தன்னுடைய காரில் உட்காரும் போது, பக்கவாட்டில் சரிந்து விடாதிருக்கவும், கையை மட்டுமே பயன் படுத்தி கார் ஓட்டவும் தேவையான மாற்றங்களை வடிவமைத்து, கடும் முயற்சிக்கு பின் நல்ல முறையில் கார் ஓட்டத் துவங்கி விட்டார்.
காரில் அமர்வதற்கு மட்டும் மகனின் உதவியை நாடுவதாகவும், அலுவலகத்தில் பணிபுரியும் மனைவியை தினமும் காரிலே அழைத்துச் செல்வதாகவும், மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட போது தனி ஆளாக சென்னை வரை கார் ஓட்டி வந்ததாக அறிகிறோம், இவரின் மனவலிமையைக் கண்டு கேரள மக்களுடன் நாமும் அதிசயம் அடைகிறோம்.
****
இவர்களைப் போன்றவர்களைப் பார்த்தாவது நாமும் ஊக்கம் பெறுவோம்.
******

Friday, June 22, 2007

எனக்கும் !!!!!!!!!!-6

மேலும் எனது கவிதைகள் மூலமாகவும், தமிழ் இணையதளங்கள் மற்றும் வலைப்பதிவுகளின் மூலமாகவும் அறிமுகமானவர்களைப் பற்றி ஒரு தனி குறிப்பு வரைய நினைத்துள்ளேன். அதனால் என்னுடைய வரலாறுக்கு போவோமா?
நம்ம குடும்பம் ரொம்ப பெறுசுங்க! ஆமாங்க!! எங்க பெற்றோருக்கு மொத்தம் 10 வாரிசுங்க. அதிலே 6 பொண்ணுகளுக்கு பின்னாடி ஏழாவதா தவமிருந்து பெத்ததாலே எனக்கு, நானே வெச்சுகிட்ட பெயருங்க 'தவப்புதல்வன்'. பொண்ணுங்களிலே ஒரு அக்கா நான் பொறக்கறத்துக்கு முன்னாடியே காலமாயிட்டாங்க. அதுவொரு தனி கதைங்க. எங்க குடும்பம் வியாபாரக்குடும்பங்க.

Wednesday, June 20, 2007

எனக்கும் !!!!!!!!!!-5

கம்போஸ் தமிழ்.காமில் கவிதைகள் தலைப்பிலே{Badrinarayanan.A}என்ற பெயரில் சில கவிதைகளையும் எழுதியுள்ளேன். நான் தெரிந்துக் கொள்ளும் தமிழ் வலைப்பதிவுகளை, மற்றவர்களும் அறிந்துக் கொள்ளட்டும் என்கின்ற ஆர்வத்தினால் வலையப்பா மற்றும் அரட்டை பகுதிகளிலும் சில கருத்துக்களை பதிவு செய்துள்ளேன். அந்த சமயத்தில் அறிமுகமானவர்தான் நண்பர் திரு. பால சுப்ரமணியம் கணபதி. இவர் ஆங்கிலத்தில் (http://madscribblings.blogspot.com) என்ற வலைப்பதிவை இயக்கி வந்தவர், என்னுடைய தமிழ் வலைப்பதிவை அறிந்ததும், அதன் பற்றிய விபரங்களை விரைவிலே சேகரித்து தமிழிலும் (http://madscribbler-kirukan.blogspot.com/) 'கிறுக்கல்கள்' என்ற வலைப்பதிவை சிறப்பாக துவங்கியிருக்கிறார் ( இது மட்டும் போதுமா? இன்னும் கொஞ்சம் சொல்லட்டுமா ? பாலசுப்ரமணியம் கணபதி). பிறகு தொடர்வோமே.....

Saturday, June 16, 2007

ஊக்கம் பெறுவோம் இதைப் பார்த்து - 1

பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியில் 5 உடல் ஊனமுற்றவர்கள் இணைந்து ஒரு வருடத்திற்கு முன் அங்கு செயல்பட்டு வருகின்ற ' ஹை-கிளாஸ்' அமைப்பு மூலம் தொழிற்ப்பயிற்சிப் பெற்று, மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் ரூ.10 ஆயிரம் மான்யத்துடன் ரூ.25 ஆயிரம் கடன் பெற்று கடலைமிட்டாய் மற்றும் தின்பண்டங்களை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர்.

மேலும் தொழிலை விரிவு படுத்தும் நோக்கத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு செய்ததில், மனு பரிசீலனை செய்யப்பட்டு, மேலும் ரூ.50 ஆயிரம் அரசு சார்பிலும், ரூ.50 ஆயிரம் 'ஹை-கிளாஸ்' அமைப்பு சார்பிலும் நிதி ஒதுக்கி வழங்கப்பட்டுயுள்ளது. இவர்கள் தயாரிக்கும் பொருட்களை கேரளாவுக்கு விற்பனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவர்களுக்கென தனி கட்டடம் கட்டி, மெழுகுவத்தி மற்றும் பிற தொழில்களுக்கான பயிற்சியும் வழங்கப்பட உள்ளதாக அறிந்தோம். உயர்ந்த
நிலை அடைய வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன், தரமான பொருட்களை தயாரித்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

Friday, June 15, 2007

எனக்கும் !!!!!!!!!!-4

கம்போஸ் தமிழ்.காமின் படைப்பாளிகளையும் விமர்சகர்களையும் தான், எந்த ஒரு கட்டுபாடுகளுமற்ற, சுதந்திரமான வாய்ப்பிருந்தும் நடைமுறைக்கு ஒவ்வாத விசயங்களை தவிர்த்து, கம்போஸ தமிழ்.காம் இணையத்தளத்தை பயன்படுத்தி எழுதி வருவதை பாராட்டாமல் இருக்க முடியாது. கம்போஸ் தமிழ்.காம் நிர்வாகிகளையும், படைப்பாளிகளையும்,அவர்களின் படைப்புகளும் மேலும் பல்வேறு வசதிகளுடனும் பகுதிகளுடனும் விரிவடையவும் வாழ்க! வெல்க!! என மகிழ்ச்சியுடன் வாழ்த்தி பயணத்தைத் தொடர்கிறேன்.

பின் குறிப்பு..\\compose tamil நம்மையும் அறிமுகப்படுத்தியுள்ளதே....அதையும் குறிப்பிடுங்களேன்....madscribbler said... \\

Dhavapudhalvan said...
file://எண்ணங்களின்// வேகத்தை ஈடு செய்ய வடிப்புகளால் முடியவில்லையே.

Thursday, June 14, 2007

எனக்கும் !!!!!!!!!!-3

அட! இது என்ன சுயசரிதையா ? இருக்கக்கூடாதா! என்னையும் தெரிந்துக் கொள்ளட்டுமே 4 பேர். எனது சகோதரன், நான் தமிழில் எழுத,படிக்க, மற்றவருடன் அளவுலாவ, ஒரு இனியத் துவக்கத்தை அறிமுகம் செய்து வைத்ததுதான் கம்போஸ் தமிழ்.காம் (http://www.composetamil.com/) நம்மை பதிவு செய்துக் கொள்ளவும்,
இயக்கவும் தமிழில் சுலப வழிகளும், நமது எண்ணங்களை உடனுக்குடன்,
எந்த கட்டுபாடுமில்லாமல் வெளியிடவும் வாய்ப்பளித்துள்ள கம்போஸ் தமிழ்.காம் (http://www.composetamil.com/ ) நிர்வாகிகளுக்கு, இந்த நேரத்தில் நன்றி கூறக் கடமைப்
பட்டிருக்கிறேன். ஏனென்றால் பல்வேறு இணையதளங்களில் நிர்வாகிகளின்
ஒப்புதல் பெற்றப்பின் தான் நம் பதிப்புகள் வெளியிடப்படுகிறது. இச்சமயத்தில்
மற்றொன்றையும் தவறவிடக்கூடாது. அதாவது.......

Friday, June 8, 2007

எனக்கும் !!!!!!!!!!-2

சுமார் 13 வருடங்களுக்கு முன்பு வாழ்விலே சாதனையோட்டம் என நினைத்து சோதனை ஓட்டத்தைத் துவங்கினேன். பிறந்து வளர்ந்த ஊரை விட்டு மாநகருக்கு குடிப்பெயர்ந்து, 3 வருடங்களுக்கு முன் வீட்டிலேயே கணனியை வாங்கிய பிறகு, மீண்டும் அதனுடனான தொடர்பு புதுபிக்கப் பட்டது. மீண்டும் அதில் விளையாட்டுக்கள் தான். இணையத்தொடர்பு பெற்றபின் சிறிது மாற்றம். E Mail முகவரியை துவக்கிக்கொண்டு, Forward Messages அனுப்பிக் கொண்டிருந்தேன். நமக்குத்தான் போதுமான ஆங்கில அறிவு இல்லாதது தெரிந்த விசயமாயிற்றே ! . கணனியை தமிழிலும் பயன்படுத்தலாம் என்பதை முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனாலும் எப்படி உபயோகிப்பது என தெரியாததால் எனது மகள்களிடம் அதைப்பற்றி குடைந்துக்கொண்டே இருந்தேன். இதனால் எனது மகள் தமிழில் படிப்பதற்கு' நிலாசாரல்' இணையதளத்தினை எனக்கு அறிமுகம் செய்து கொடுத்தாள். ஆனால் என் கருத்துக்களை (படைப்புகளை) வெளியிட முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது.........

எனக்கும் !!!!!!!!!!-1

எனக்கு ஆசைதாங்க! ஏதோதோ எழுத நினைக்கிறேன், எது முதலில் எழுதுவதுயென தெரியாமல். சுமார் 15 வருடத்துக்கு முன்னாலேயே எனது சகோதரரின் அலுவலகத்தில் கணனியின் அறிமுகம் ஆனது. போதுமான ஆங்கில அறிவு இல்லாததால் ' பட்டிகாட்டான் மிட்டாய் கடையை வாய் பிளந்து பார்த்துப் போல' நானும் பார்த்துக் கொண்டிருந்தேன் கணனியின் இயக்கங்களையும் இயக்குவதையும். எவ்வளவு நேரம் அப்படியே பார்த்துக் கொண்டிருப்பது?. சோர்ந்து போய் உட்கார்ந்தபடியே கண்களை மூடி,வாயை பிளந்து விடுவேன். அதைப் பார்த்து எனது சகோதரனும், 'அண்ணா, உங்களுக்குத்தான் செஸ் விளையாடத்தெரியுமே! கணனியுடன் விளையாடுங்களென சொல்லிக்கொடுத்தான். அன்று தான் முதல்முதலாக கணனியுடன் தொடர்பு ஏற்பட்டது. On/Offசெய்வதற்கும், செஸ் விளையாட்டை கண்டுபிடித்து இயக்குவதற்கும், இடையில் ஏற்படும் தடங்கல்களை நீக்குவதற்கும் அலுவலக உதவியாளர்களை அடிக்கடி தொந்தரவு செய்தேன்.
பிறகு.......

Thursday, June 7, 2007

தெரியாததை.........!!!!!!!!!

ஹல்லோ ! தெரியாததை தெரித்துக் கொள்வோமே 4 பேரிடம். நல்லதை மட்டும். அனுப்புங்களேன் உங்களுக்கு தெரிந்ததை.

வாழ்க! வளமுடன்!!

அன்புடன்,
அம்பி.
07/06/2007.