Monday, August 13, 2007

எனக்கும் !!!!!!!!!!-12

காலையில் உடற்பயிற்சியாளர், உடற்பயிற்சி செய்து விடுவார். பிறகு காட் லிவர் ஆயில் (Cod Liver Oil) எனப்படும் ஒரு வகை மீனின் கல்லீரலில் இருந்து எடுக்கப்படும் எண்ணை (சிவப்பு கலரில் இருக்கும் ) உடல் முழுவதும் பூசி, இன்ஃபெரா லைட் (Infra Light) எனப்படும் சிவப்பு அகக்கதிர் வீச்சு விளக்கு (சுமார் 500 W - 1000 W இருக்கும்.ஞாபகமில்லை.விளக்கு கைவசம் இள்ளது. பல்பு (Bulb Fuse) ஃப்யூஸ் ஆகிவிட்டது.)மூலம் உடல் முழுவதும் வெப்பமூட்டுவார்கள். இதனால் நரம்புகள் வழுவடையுமாம். உடலில் எண்ணை ஊறியபிறகு, மதியம் மீண்டும் உடற்பயிற்சி. மாலை நேரத்தில் மண்ணெண்ணை அடுப்பிலே (Kerosene Stove) இரும்பு வானலியில், பச்சரிசி தவிடு போட்டு, அதிலே சிறிதுசிறிதாக பால் ஊற்றி வறுத்து,உடல் பொருக்கும் சூட்டிலே, துணியிலேப் போட்டு, சூடாக உடல் முழுவதும் ஒத்திடம் கொடுப்பார்கள். இரவு மீண்டும் உடற்பயிற்சியென்று ஒரு வருடம் காலம் கடந்தது. பிறந்து வளர்ந்த போது கொழுக்கொழு என்றிருந்த நான், அந்த சமயத்தில் எழும்பும் தோளுமாக இருந்தேன் என்று சொல்லக் கூடிய அளவுக்கு இல்லாவிட்டாலும், மிக ஒல்லியாக இருந்தேன். இரண்டு கால்களுக்கு பூட்ஸும் அத்துடன் அக்குள் வரை உள்ளே பட்டைக் கம்பிகள் பொருத்திய தோல்கவசமும்,(அதாவது சண்டைக்குச் செல்லும் வீரன் போல, அல்லது இயந்திர மனிதன் போல) பொருத்தி, காந்தி தாத்தா கையில் வைத்திருந்த கம்பு போல இரண்டு கைகளிலும் கொடுத்து நடைப்பயிற்சி கொடுத்தார்கள்.தப்பித்தவறி கீழே விழுந்தால், நெடுஞ்சான்கிடையாகத்தான் (மரம் சாய்வது போல) விழவேண்டியிருக்கும்.பிறருடைய உதவியில்லாமல் தனியாக எழுந்து உட்காரவோ, நிற்கவோ முடியாத சூழ்நிலை தான். இரண்டு பேர் தூக்கி நிறுத்த, ஒருவர் ஊன்று கோள்களை எடுத்து கொடுக்க வேண்டும். இப்படியே கோவை மருத்துவமனை வாசம் ஒன்னரை வருடங்கள் கழிந்தது. இந்த மருத்துவ முறையை வீட்டிலேயே தொடர்ந்துக் கொள்ளலாம் என்பதாலோ, மருத்துவரின் அலோசனையின் பேரிலோ, வீடு திரும்பி விட்டோம். அடுத்து வீட்டிலே தொடர்ந்த மருத்துவம். ஆரம்ப கல்வி பற்றி.......

No comments: