Sunday, August 19, 2007

சந்தோசமே நிரந்தரமாகட்டும்.

விரல்கள் தவிர வேறெந்த உறுப்பும் இயங்காத, 'மஸ்குலர் டிஸ்ட்ரபி' என்ற தசை நலிவு நோயால் பாதிக்கப்பட்ட வானவன் மாதேவி கூறுகிறார்.
படிக்கிற வயதில் நிறைய கனவுகள் இருந்துச்சி. விழுந்து விழுந்து படிச்சேன். ஒரு நாள் நடந்து போய்க்கிட்டிருந்தபோது தவறி விழுந்து விட்டேன். அதிலே இருந்து உடம்பு இளச்சிக்கிட்டே வந்தது. சத்து இல்லாத்தால் விழுவதாக விட்டுடாங்க. கால் வலு குறைய ஆரம்பிச்சு, மாடியேற முடியாத நிலையேற்ப்பட்ட போது தான் விபரீதம் தெரிஞ்சது.
இந்த நோய் பாதித்த மற்ற குழந்தைகள் 18 வயதுக்கு மேல் உயிரோட இருக்கிறதே ஆச்சிரியமாம்.ஒவ்வொரு பாகமாய் செயலிழக்க வெச்சு, கடைசியிலே ஆளையே சாப்பிட்டு விடுமாம்.
ஆயுர்வேதம்,சித்தா, ஹோமியோபதின்னு ஊர் ஊரா அலைஞ்சோம்.பணம் தான் செலவாச்சு. என்னோட தங்கச்சிக்கும் நோய் அறிகுறி தெரியத்தொடங்குச்சி. திருநெல்வேலியிலே ஒரு டாக்டர், மணிக்கணக்கிலே ஒரு பலகையில் கையையும், காலையும் கட்டி இரண்டு பேரையும் நிக்க வெச்சார். மரண வேதனை.
அப்புறம் ஆயுர்வேத சிகைச்சையில் கொஞ்சம் முன்னேற்றம் கிடைச்சது. மருந்துக்கு மட்டும் ஒரு மாதத்திற்கு இரண்டாயிரம் செலவாச்சு. அந்த அளவு செலவு செய்யக் கூடிய நிலையிலே குடும்பம் இல்லை. அதையும் விட்டுடோம். மனசு சந்தோசமா இருந்தா, சாவை கொஞ்ச காலத்திற்கு தள்ளிப்போடலாம். அதைதான் இப்போ செய்யுறோம்.
----------------------------------------------------------
அடுத்ததா , வானவன் மாதேவியின் சகோதரி இயல் இசை வல்லபி சொல்வதை கேட்போமா!

எங்களைப் பார்த்து யாரும் பரிதாபப்படக் கூடாது. 10ம் வகுப்பு படித்த பிறகு வீட்டில் இருந்தபடியே பிளஸ் 2 பாஸ் பண்ணிட்டோம். அப்பா, அம்மாவுக்கு உபயோகமாய் இருக்கலாமுன்னு தான் கம்பியுட்டர் கத்துக்கிட்டு 'டிடிபி' வேலை செய்யுறோம். வேலைக் கொடுங்கன்னு பள்ளி, கல்லூரிகள்ல படிப்படியா ஏறி இறங்கினோம்.ஊனத்தைப் பார்த்து பரிதாபப் பட்டவங்க, வேலை கொடுக்கத் தயங்கினாங்க. ஒரு கட்டத்திலே எங்க ஆர்வத்தையும், உழைப்பையும் பார்த்தவங்க வேலைத் தரத்தொடங்கினாங்க.
இவ்வளவு பிரச்சனையுலும் நாங்க தன்னம்பிக்கையோட இருக்கக் காரணம், எங்க அத்தை. மூனு வயதிலே போலியோவில் பாதிக்கப்பட்டவங்க, அவங்க பள்ளியில் படித்ததே இரண்டாம் வகுப்பு வரைதாங்க. பிறகு பிரைவேட்டாவே படிச்சு, எம்.ஏ. (M.A.) முடிச்சாங்க. அவங்கதான் எங்களை உற்சாகப்படுத்தினவங்க.
-----------------------------------------------------------

இவர்களிருவரும் கூறியதைக் கேட்டீர்களல்லவா. அவர்களைப் பார்த்து நாம் பரிதாபப் பட வேண்டாம். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, வேலை வாய்ப்பைக் கொடுப்போம். அவர்களின் வாழ்நாள் முடிவு வரை நோயின் கடுமைத் தெரியாமல், மகிழ்ச்சியாகவே வாழ, இறைவனின் தாள் பணிந்து, நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.

பின்குறிப்பு; இவர்களின் முகவரிக்காக தவிப்பீர்களென எனக்குத் தெரியும். விசாரித்து கூடிய விரைவில் வெளியிட முயல்கிறேன்.

நன்றி; தினமலர், சென்னை. நாள்; 19\08\2007. 'சொல்கிறார்கள்' பகுதி.

No comments: