கோயம்புத்தூர் தெலுங்குபாளைய மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்கு திரும்பிய பிறகும் அந்த மருத்துவம் தொடர்ந்தது. அத்துடன் அரிசி கழுவிய கழுநீரை சூடாக்கி, இரண்டு தகர டின்களை ஒன்றுடன் ஒன்றிணைத்து ( எள்ளெண்ணை, தேங்காய் எண்ணை டின்களை,நீங்கள் பார்த்திருப்பீர்கள் ) அதில் என்னை நிற்க வைத்து, உடல் தாங்கும் அளவு சூடான கழுநீரை ஊற்றி, ஒரு மணி நேரம் நிற்க வைத்து விடுவார்கள். நிற்பதற்கு கால்களுக்கும் வலுவியின்றி, கைகளை ஊன்றிக் கொள்வதற்கோ, சாய்ந்துக் கொள்வதற்கோ வழியின்றி, தகர டின்னின் விழிம்புகளை கைகளால் பிடித்துக் கொண்டு, தடுமாறிக் கொண்டிருப்பேன் நிற்பதற்கு.எனக்கு முன்னால் யாரும் வரமாட்டார்கள், அப்படி வந்தாலும், என்னைப் பார்க்காதது போல் செல்வார்கள். ஏனென்றால் என்னை அதிலிருந்து தூக்கிவிடச் சொல்லி அழுவதால். அவர்களாக வந்து என்னை தூக்கிவிட்டால்தான். அதுவரை அனுபவித்துதான் ஆகவேண்டும்.பக்கத்து வீடுகளிலிருந்தும் என் தேவைக்காக கழுநீர் கொண்டு வந்து தினமும் கொடுப்பார்கள்.
இந்த சமயத்தில் மறக்க முடியாத நிகழ்ச்சியைச் சொல்ல வேண்டும். நமது பாரதத்தில் குழந்தைகள் அனைவராலும் 'மாமா' என அழைக்கப் பட்டவரும், படுகின்றவரும்,ரோஜா மலரால் உதாரணப்படுத்தபடுகின்றவரான, நமது முன்னால் பாரத பிரதமர் 'ஜவகர்லால் நேரு ' மறைவு செய்தியைக் கேட்டு, எங்கள் குடும்பத்தில் அனைவரும், வானொலி செய்திகளை தொடர்ந்து கேட்டவாறு, சோகத்தில் மூழ்கி கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்ததும், நானும் புரியாத நிலையில் அவர்களுடன் சேர்ந்து அழுத்தும் ஒருமறக்க முடியாத நிகழ்ச்சியாகும். அடுத்தது ஆரம்ப கல்வியைப் பற்றி...
Monday, September 3, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment