Saturday, September 8, 2007

ஆசை தான் !! - இதை உங்களுக்குச் சொல்ல.

ஆமாம் இன்று செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி தேசிய கண் தான நாள்.
நமது விழிகளால் அவர்கள் சிரிக்கட்டும்.
அவர்களைக் கண்டு நம் வாரிசுகள் மகிழட்டும்.
கண் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இது வெளியிடப்படுகிறது. கண் தானம் ஏன் செய்ய வேண்டும் ? கண் தானத்தினால் எப்படி உதவி செய்யமுடியும் ? செய்ய வேண்டியது என்ன ? என்பதைப் பற்றிய சிறிய விழிப்புணர்வு தகவல்தான் இது.

1) எப்படி உதவி செய்ய முடியும் ?
*************************

மரணமடைந்தவர்களுடைய கண்களை, அவர் இறந்த ஆறு மணிநேரத்திற்குள், கண் வங்கிகளைத் தொடர்புக் கொண்டு தானமாக அளிக்கலாம். அதற்காக காலம் தாழ்தாமல் எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் தொடர்புக் கொண்டு தானமாகக் கொடுங்கள்.

2) ஏன் கண் தானம் செய்ய வேண்டும் ?
*****************************

கார்னியா பார்வைக் கோளாறினால் பார்வையிழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்காது. கண் மாற்று அறுவை சிகிச்சை(ஆப்ரேஷன் ) மூலமாகத்தான், அவர்களுக்கு மீண்டும் பார்வைக் கிடைக்க சாத்தியமாகும். எனவே தான் நாம் கண் தானம் செய்யவேண்டும்.

3)கண் வங்கி என்பது என்ன ?
**********************

மரணமடைந்தவர்களுடைய கண்களை தானமாகப் பெற்று, மதிப்பீடு செய்து, முறைப்படி பாதுகாத்து, கார்னியா கண் மாற்று ஆப்ரேஷனுக்காக வினியோகிக்கும் அமைப்பே, கண் வங்கி என அழைக்கப்படுகிறது.

4) கார்னியா என்பது என்ன ?
**********************

நம் கண்களுக்கு முன்புறம், கருவிழிக்கும் முன்னால், ஒளி ஊடுருவிச் செல்லக் கூடிய, இரத்தக் குழாய்கள் எதுவுமில்லாத ஒரு மெல்லிய திசு கண்ணுக்கு ஒரு சன்னலைப் போல அமைந்துள்ளது. இதுவே கார்னியா என அழைக்கப்படுகிறது. தமிழில் 'விழி வெண்படலம்' எனலாம். இதை படித்தோ, கேட்டோ, அறிந்தோ இருப்பீர்கள்.

5) கார்னியா எவ்வாறு பாதிக்கப்படுகிறது ?
*****************************

தொற்றுநோய் கிருமிகள், விபத்துக்கள், ஊட்டச்சத்து குறைவு காரணமாக, கண் சிகிச்சை குறைப்பாடு காரணமாக, சிலருக்கு பிறவியிலேயோ அல்லது பரம்பரையாகவோ கார்னியாவானது பாதிக்கப்படுகிறது.

6) யார் கண் தானம் செய்யலாம் ?
*************************

ஒரு வயது நிரம்பிய குழந்தைகளிலிருந்து அதிகபட்ச வயது வரம்பின்றி அனைவரது கண்களும் தானமாகப் பெற்றுக் கொள்ளப்படும்.

7)உறவினர் செய்ய வேண்டியது என்ன ?
******************************

இறந்தவர்களின் கண்களை மூடி, இரண்டு கண்களின் மீதும் ஈரமான பஞ்சு அல்லது ஜஸ் கட்டிகளை, இமைகளின் மீது வைத்து கார்னியா ஈரப்பதமுடன் இருக்க உதவ வேண்டும். தலைக்கு நேராக, மேலாக சுழலும் மின்விசிறிகளை நிறுத்திவிடவேண்டும். தலையை (6) ஆறு அங்குல உயரத்திற்கு, இரண்டு தலையணைகளை வைத்து, உயர்த்தி வைக்க வேண்டும். முடிந்தால், மருத்துவர்கள் வரும்வரை, இரண்டு கண்களிலும் ஏதேனும் ஆண்டிபயாட்டிக் சொட்டு மருந்துகளை, குறிப்பிட்ட இடைவெளி நேரம் விட்டு போடலாம்

8) பொது மக்கள் அல்லது உறவினர் என்ற முறையில் கண்தான இயக்கத்திற்கு நாம் எவ்வாறு உதவி செய்வது ?
******************************

அ)நமக்கு தெரிந்து யாரேனும் மரணமடைந்தால், அவரது கண்களை தானம் செய்யும்படி அவரது நெருங்கிய உறவினரை ஊக்குவித்து, அவரது சம்மத்ததுடன் 044-28281919 மற்றும் 044-28271616 என்ற தொலைப்பேசி எண்களைத் தொடர்புக் கொண்டால், மருத்துவர்கள், மரணமடைந்தவரின் உடலிருக்கும் இடத்திற்கு வந்து கண்களை தானமாக பெற்றுக் கொள்வார்கள்.
ஆ)நம் கண்களையும், நமது குடும்பத்தார் கண்களையும் தானம் செய்ய உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம். நண்பர்களையும், தெரிந்தவர்களையும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளத் தூண்டலாம். நேரில் செல்லத் தேவையில்லாமலேயே, தொலைப்பேசி அல்லது இ-மெயில் மூலமாகவோ, நமது பெயர்,முகவரி,தொலைபேசி எண், இ-மெயில் முகவரி ஆகியவற்றைக் குறிப்பிட்டு பதிவு செய்துக் கொள்ளலாம்.
தொலைபேசி எண்கள் :: 044-28271616, 044-28271036.
இ-மெயில் முகவரி [e-mail]:: api@snmail.org,irungovel@gmail.com
இவ்வாறு சென்னை சங்கர நேத்ராலயா கண்வங்கி தலைவர் திரு.அ.போ.இருங்கோவேள்
கைதொலைபேசி எண் [mb.no:] 98408 21919 அவர்கள் தினமலர் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

நன்றி:: சென்னை தினமலர் . 06\ 09 \2007.

No comments: