Sunday, August 19, 2007

சந்தோசமே நிரந்தரமாகட்டும்.

விரல்கள் தவிர வேறெந்த உறுப்பும் இயங்காத, 'மஸ்குலர் டிஸ்ட்ரபி' என்ற தசை நலிவு நோயால் பாதிக்கப்பட்ட வானவன் மாதேவி கூறுகிறார்.
படிக்கிற வயதில் நிறைய கனவுகள் இருந்துச்சி. விழுந்து விழுந்து படிச்சேன். ஒரு நாள் நடந்து போய்க்கிட்டிருந்தபோது தவறி விழுந்து விட்டேன். அதிலே இருந்து உடம்பு இளச்சிக்கிட்டே வந்தது. சத்து இல்லாத்தால் விழுவதாக விட்டுடாங்க. கால் வலு குறைய ஆரம்பிச்சு, மாடியேற முடியாத நிலையேற்ப்பட்ட போது தான் விபரீதம் தெரிஞ்சது.
இந்த நோய் பாதித்த மற்ற குழந்தைகள் 18 வயதுக்கு மேல் உயிரோட இருக்கிறதே ஆச்சிரியமாம்.ஒவ்வொரு பாகமாய் செயலிழக்க வெச்சு, கடைசியிலே ஆளையே சாப்பிட்டு விடுமாம்.
ஆயுர்வேதம்,சித்தா, ஹோமியோபதின்னு ஊர் ஊரா அலைஞ்சோம்.பணம் தான் செலவாச்சு. என்னோட தங்கச்சிக்கும் நோய் அறிகுறி தெரியத்தொடங்குச்சி. திருநெல்வேலியிலே ஒரு டாக்டர், மணிக்கணக்கிலே ஒரு பலகையில் கையையும், காலையும் கட்டி இரண்டு பேரையும் நிக்க வெச்சார். மரண வேதனை.
அப்புறம் ஆயுர்வேத சிகைச்சையில் கொஞ்சம் முன்னேற்றம் கிடைச்சது. மருந்துக்கு மட்டும் ஒரு மாதத்திற்கு இரண்டாயிரம் செலவாச்சு. அந்த அளவு செலவு செய்யக் கூடிய நிலையிலே குடும்பம் இல்லை. அதையும் விட்டுடோம். மனசு சந்தோசமா இருந்தா, சாவை கொஞ்ச காலத்திற்கு தள்ளிப்போடலாம். அதைதான் இப்போ செய்யுறோம்.
----------------------------------------------------------
அடுத்ததா , வானவன் மாதேவியின் சகோதரி இயல் இசை வல்லபி சொல்வதை கேட்போமா!

எங்களைப் பார்த்து யாரும் பரிதாபப்படக் கூடாது. 10ம் வகுப்பு படித்த பிறகு வீட்டில் இருந்தபடியே பிளஸ் 2 பாஸ் பண்ணிட்டோம். அப்பா, அம்மாவுக்கு உபயோகமாய் இருக்கலாமுன்னு தான் கம்பியுட்டர் கத்துக்கிட்டு 'டிடிபி' வேலை செய்யுறோம். வேலைக் கொடுங்கன்னு பள்ளி, கல்லூரிகள்ல படிப்படியா ஏறி இறங்கினோம்.ஊனத்தைப் பார்த்து பரிதாபப் பட்டவங்க, வேலை கொடுக்கத் தயங்கினாங்க. ஒரு கட்டத்திலே எங்க ஆர்வத்தையும், உழைப்பையும் பார்த்தவங்க வேலைத் தரத்தொடங்கினாங்க.
இவ்வளவு பிரச்சனையுலும் நாங்க தன்னம்பிக்கையோட இருக்கக் காரணம், எங்க அத்தை. மூனு வயதிலே போலியோவில் பாதிக்கப்பட்டவங்க, அவங்க பள்ளியில் படித்ததே இரண்டாம் வகுப்பு வரைதாங்க. பிறகு பிரைவேட்டாவே படிச்சு, எம்.ஏ. (M.A.) முடிச்சாங்க. அவங்கதான் எங்களை உற்சாகப்படுத்தினவங்க.
-----------------------------------------------------------

இவர்களிருவரும் கூறியதைக் கேட்டீர்களல்லவா. அவர்களைப் பார்த்து நாம் பரிதாபப் பட வேண்டாம். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, வேலை வாய்ப்பைக் கொடுப்போம். அவர்களின் வாழ்நாள் முடிவு வரை நோயின் கடுமைத் தெரியாமல், மகிழ்ச்சியாகவே வாழ, இறைவனின் தாள் பணிந்து, நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.

பின்குறிப்பு; இவர்களின் முகவரிக்காக தவிப்பீர்களென எனக்குத் தெரியும். விசாரித்து கூடிய விரைவில் வெளியிட முயல்கிறேன்.

நன்றி; தினமலர், சென்னை. நாள்; 19\08\2007. 'சொல்கிறார்கள்' பகுதி.

Tuesday, August 14, 2007

இந்திய சுதந்திர தின வைரவிழா வாழ்த்து.

சுதந்திரம் என்பது நமக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய புதையல் ஆகும். அது சாதாரனமாக நமக்கு கிடைத்து விடவில்லை. அன்னியரிடம் அடிமைப் பட்டிருந்த நம் முன்னோர்கள், உடல், பொருள், ஆவியென மிகப் பெரியத் தியாகங்களைச் செய்து பெற்றதாகும்.அதை பெருமைப் படுத்தும் விதத்தில் பொருப்பாக காப்பாற்ற வேண்டியது நமது கடமை அல்லவா. நான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிப்பதைத் தான் காப்பாற்றுவேன் என்றும், நம் முன்னோர்கள் தியாகங்கள் பல செய்து பெற்றுத்தந்ததை, காப்பாற்றுவதில் பொருப்பில்லாமல் நடந்துக்கொள்வது வெட்கப்பட வேண்டியதும், கேவலப்பட வேண்டியதும் அல்லவா. தய்யை செய்து சிறிது சிந்தியுங்கள். இந்த சமயத்தில் ஒரு சிறு கதையைக் கூற விரும்புகிறேன். ஒரு குரு இருந்தார். அவருக்கு இரண்டு சீடர்கள். குருவிடம் மரியாதை இருந்தாலும், குருவுக்கு பணிவிடை செய்வதில், அவர்களுக்கிடையே அடிக்கடி பிணக்கு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. இதைப் பார்த்த குரு, அவர்களுக்குள் ஒழுக்கமும், கட்டுப்பாடும் ஏற்படவேண்டும் என நினைத்து, அனைத்து பணிகளையும் சரிசமமாகப் பிரித்துக் கொடுத்தார். அதே போல குரு ஓய்வெடுக்கும்பொது இதமாக கைகால்களை அழுத்தி விடுதலிலும் பங்கு கொடுத்தார்.அதிலும் யார் எந்த பக்கம் என்பது பிரச்சனை. அதனால் வலப்பக்கம் ஒரு சீடனுக்கும், இடப்பக்கம் ஒரு சீடனுக்குமென பிரித்துக் கொடுத்தார். சிறிது நாட்கள் சீராக நடந்தாலும், ஒரு நாள் ஒரு சீடனை, வேறு வேலையாய் குரு வெளியே அனுப்பி விட்டார். குரு ஓய்வெடுக்கும் நேரம் நெருங்கியபோது, அங்கிருந்த சீடனிடம் கால்களை அழுத்தி விடச் சொன்னார். அவனோ ஒரு காலை மட்டும் அழுத்தி விட்டுக் கொண்டிருந்தான். அதை கவணித்த குரு, மற்றொரு காலையும் அழுத்தி விடச் சொன்னார். அந்த சீடனுக்கு ஒதிக்கிய காலை, நான் அழுத்தி விட மாட்டேனென மறுத்ததுடன், அந்த சீடனின் மேலுள்ள கோபத்தினால், குருவின் மற்றொரு காலை ஓங்கி அடித்தான். குருவோ வலியால் அலறித்துடித்தார். அந்த சமயத்தில் வெளியே சென்றிருந்த சீடன் அங்கு வர, விபரம் அறிந்து, கோபமேலிட்டு, எனக்கு ஒதிக்கிய குருவின் காலை எப்படி அடிக்கலாம் என்று கூறிக்கொண்டே, மற்றொரு சீடன் அழுத்தி விட்ட குருவின் காலை, ஓங்கி மிதித்தான். குருவோ இரண்டு கால்களிலும் வலி ஏற்பட்டு அலறித்துடித்தார்.அது போல நம் நாடு ஒன்றாக இருந்தாலும், இந்த பகுதி, அதிலுள்ள வளங்கள் எமக்கு( எங்களுக்கு) மட்டுமே உரிமையென, நமது பாரத அன்னையை ஆளுக்கு ஒரு பகுதியாக கூறுப்போட்டு சிதைக்கப் பார்கிறார்கள்.அந்த முட்டாள் சீடர்களிடம் மாட்டிக்கொண்டு தவித்த குரு போல நாமும் மீண்டும் அடிமைப்பட்டு விடாமல், நமது பாரத அன்னையை சிறப்பாக வலுவடைய செய்வோமென இந்த 60 ஆம் ஆண்டு, வைரவிழா சுதந்திரதின நாளில் ஒருவருடன் ஒருவரென அனைவரும் கைகோர்த்து உறுதி எடுத்துக் கொள்வோம்.
வாழ்க பாரத தேசம்!
வளர்க பாரத்தின் புகழ் !!

Monday, August 13, 2007

எனக்கும் !!!!!!!!!!-12

காலையில் உடற்பயிற்சியாளர், உடற்பயிற்சி செய்து விடுவார். பிறகு காட் லிவர் ஆயில் (Cod Liver Oil) எனப்படும் ஒரு வகை மீனின் கல்லீரலில் இருந்து எடுக்கப்படும் எண்ணை (சிவப்பு கலரில் இருக்கும் ) உடல் முழுவதும் பூசி, இன்ஃபெரா லைட் (Infra Light) எனப்படும் சிவப்பு அகக்கதிர் வீச்சு விளக்கு (சுமார் 500 W - 1000 W இருக்கும்.ஞாபகமில்லை.விளக்கு கைவசம் இள்ளது. பல்பு (Bulb Fuse) ஃப்யூஸ் ஆகிவிட்டது.)மூலம் உடல் முழுவதும் வெப்பமூட்டுவார்கள். இதனால் நரம்புகள் வழுவடையுமாம். உடலில் எண்ணை ஊறியபிறகு, மதியம் மீண்டும் உடற்பயிற்சி. மாலை நேரத்தில் மண்ணெண்ணை அடுப்பிலே (Kerosene Stove) இரும்பு வானலியில், பச்சரிசி தவிடு போட்டு, அதிலே சிறிதுசிறிதாக பால் ஊற்றி வறுத்து,உடல் பொருக்கும் சூட்டிலே, துணியிலேப் போட்டு, சூடாக உடல் முழுவதும் ஒத்திடம் கொடுப்பார்கள். இரவு மீண்டும் உடற்பயிற்சியென்று ஒரு வருடம் காலம் கடந்தது. பிறந்து வளர்ந்த போது கொழுக்கொழு என்றிருந்த நான், அந்த சமயத்தில் எழும்பும் தோளுமாக இருந்தேன் என்று சொல்லக் கூடிய அளவுக்கு இல்லாவிட்டாலும், மிக ஒல்லியாக இருந்தேன். இரண்டு கால்களுக்கு பூட்ஸும் அத்துடன் அக்குள் வரை உள்ளே பட்டைக் கம்பிகள் பொருத்திய தோல்கவசமும்,(அதாவது சண்டைக்குச் செல்லும் வீரன் போல, அல்லது இயந்திர மனிதன் போல) பொருத்தி, காந்தி தாத்தா கையில் வைத்திருந்த கம்பு போல இரண்டு கைகளிலும் கொடுத்து நடைப்பயிற்சி கொடுத்தார்கள்.தப்பித்தவறி கீழே விழுந்தால், நெடுஞ்சான்கிடையாகத்தான் (மரம் சாய்வது போல) விழவேண்டியிருக்கும்.பிறருடைய உதவியில்லாமல் தனியாக எழுந்து உட்காரவோ, நிற்கவோ முடியாத சூழ்நிலை தான். இரண்டு பேர் தூக்கி நிறுத்த, ஒருவர் ஊன்று கோள்களை எடுத்து கொடுக்க வேண்டும். இப்படியே கோவை மருத்துவமனை வாசம் ஒன்னரை வருடங்கள் கழிந்தது. இந்த மருத்துவ முறையை வீட்டிலேயே தொடர்ந்துக் கொள்ளலாம் என்பதாலோ, மருத்துவரின் அலோசனையின் பேரிலோ, வீடு திரும்பி விட்டோம். அடுத்து வீட்டிலே தொடர்ந்த மருத்துவம். ஆரம்ப கல்வி பற்றி.......

Tuesday, August 7, 2007

எனக்கும் !!!!!!!!!!-11

தொடர்ந்தது மருத்துவம் யார்யார் சொன்னாலும் அதன்படியெல்லாம். நாங்கள் சைவ உணவு உண்பவர்களாய் இருப்பினும், மருத்துவம் என்பதற்காக,பச்சைக்கிளிகள் இரத்தம் என் உடலில் பூசப்பட்டது. பச்சையாக கோழிமுட்டைகளையும்,புறாக்கள் கறியும் வீட்டுவேலையாட்கள் மூலமாக வலுக்கட்டாயமாக எனக்கு ஊட்டப்பட்டது. அதற்காக நான் செய்த ஆர்பாட்டங்களும், எடுத்த வாந்திகளும், அழுத அழுகைகளும் மறக்க முடியாதவை.பாண்டி @ பாண்டிச்சேரி @ புதுவை @ புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் ஆறு மாதங்களும்,கோவை என அழைக்கப்படும் கோயமுத்தூர் தெலுங்கு பாளையத்தில் தற்போதும் இயங்கி வருகின்ற இயற்க்கை மருத்துவமனையில் ஒன்னரை வருடங்களும் தொடர்ந்தது. அங்கு மருத்துவமனையில் என் அம்மா மூன்று மாதங்களும், எம் பாட்டி.Late.செங்கவள்ளி அவர்களுடன்
எம் இரண்டாவது சகோதரி.Late.திருமதி.வசந்த குமாரி @ வசந்தா ஹரிகிருஷ்ணன் & அவர்களும் மூன்று மாதங்களும் மாறிமாறி என்னுடனிருந்து வைத்தியர் சொல்லிக் கொடுத்தப்படி எனக்குறிய மருத்துவங்களை நேரங்காலம் தவறாமல் எனக்கு செய்ததும், அதே சமயத்தில் என்னுடனிருந்த மற்ற நோயளிகள் அவர்களுடன் உதவியாக இருந்தவர்களுகும் பொழுது போவதற்காகவும் உற்சாகமாக இருப்பதற்காகவும் எம் பாட்டியார் அவ்வப்போது கூறிய நீதிக்கதைகள் நோயை மறக்கவும்,அனைவரையும் ஊக்கப்படுத்துபடியாகவும் இருந்ததை மறக்கவோ, மறுக்கவோ முடியாததாகும்.கோவை மருத்துவமனையில் எனக்கு அளிக்கப்பட்ட மருத்துவமுறைகள் அடுத்ததில்......