Thursday, August 15, 2013

தோன்றுகிறதோ புதிதாய்?



சென்னையில் ஓரிரு நாட்கள் தங்கி சில நண்பர்களை சந்தித்து விட்டு வரவே திட்டமிட்டிருந்தோம். ஆனால் எம்முடன் துணைக்கு வந்த நண்பர் உடனடியாக ஊர் திரும்ப வேண்டும் என கூறியதால், திட்டங்களை மாற்றிக் கொண்டு 10ம் தேதி இரவே ஊர் திரும்ப முடிவு செய்து புறப்பட்டோம். புகைவண்டியில் இடம் பதிவு செய்யயியலவில்லை. உடன் எடுத்து சென்ற மூன்று சக்கர மோட்டார் வண்டி இருந்ததால் பேருந்திலும் திரும்பயியலாது. எனவே முன்பதிவில்லா பயணசீட்டை வாங்கி, ஒரு முன்பதிவில்லா பயணப்பெட்டியில் ஏறினோம்.
இருக்கைகளும் நிரம்பி, பேட்டியின் மீதி இடைவெளிகளிலும் பயணிகள் நிரம்பியிருக்க, நாங்களும் இருக்கின்ற இடத்தை பகிர்ந்துக் கொள்ள ஏறினோம்.

ஆனால் அங்கு நிகழ்ந்த நிகழ்வை என்னவென்று கூற. மூன்று பயணிகளுடன் சில ஆண் பெண் பயணிகள், அதிலும் இரண்டு பெண்களின் சொற்பிரயோகம் அதிர்ச்சி அளித்தது உண்மையே.

உங்களுக்காத்தான் ஊனமுற்றோர் பெட்டியென தனியாக ஒதிக்கி இருக்கிறார்களே, அங்கே போய் ஏறிக்கொள்ளுங்கள். முதலில் இங்கிருந்து இறங்குங்கள் என்று, குழாயடி சண்டைப்போல உயர்ந்த குரலில் திரும்ப திரும்ப கூறியது ஒருவித அருவருப்பையும் அவமானத்தையும் ஏற்படுத்தியது.

இருப்பினும் எமது கோபத்தையும், உரிமையையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், ஒன்றுமே தெரியாதவரைப்போல, அம்மா, போர்ட்டர் இந்த பெட்டியில் ஏற்றிவிட்டதால் ஏறிக்கொண்டு விட்டோம். வண்டி புறப்படும் நேரமும் ஆகிவிட்டது. எனவே இறங்கி எங்களுக்கு உரிய பெட்டியில் ஏறவும் முடியாது. அடுத்த முறை கவனித்துக் கொள்கிறேன் என கூறி அமைதியாகி விட்டோம். இருப்பினும் அப்பெண்மணியும் அவருடன் பேசிய ஆண்களும் முணுமுணுத்துக் கொண்டே ஏறினார்கள்.

இதை பிரிவு என்பதா? தீண்டாமை என்பதா? என்னவென்று கூற.

* மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பெட்டியில், மற்ற பயணிகளும் ஏறிக் கொண்டு, மாற்றுத்திறனாளிகள் பயணிக்கவும், ஏறியிறங்கவும் மிகவும் சிரமத்தைக் கொடுப்பதால், ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் காவல்காரரோ அல்லது வண்டியில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகளோ, அப்பேட்டியில் ஏற அனுமதிப்பதில்லை. அதில் பாதிக்கப்பட்டதின் கோபமோ இவர்களுக்கு எனவும் எமது எண்ணத்தில் ஒரு நிழலோடியது.



இனிய நாள் நல்வாழ்த்துக்கள்.


--
உங்கள்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

Tuesday, August 13, 2013

மகிழ்ச்சியாய் முடிந்த அதிர்ச்சி !



சென்னையிலிருந்து இன்று காலை (11/8/2013 ) சேலம் வந்து, புகைவண்டி நிலையத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். ஓரிடத்தில் பின்னால் வந்த லாரிக்கு வழி விடுவதற்காக சாலை ஓரம் ஒதுக்கியபோது, வண்டி நிலைத்தடுமாற, அச்சமயம் வண்டியை நிலை நிறுத்தி, யூடர்ன் அடித்து பாலத்தில் ஏற்றி ஓட்டுவதில் கவனமிருக்க, முன்பக்கம் மாட்டியிருந்த கைப்பை கிழே விழுந்து விட்டதை கவனிக்கவில்லை. சுமார் 15, 20 நிமிடங்களுக்கு பிறகுதான் பை தவறி போனதை அறிந்து, நினைவுகளை பின்னோக்கி ஓட்டியப்போது தான் அந்த இடத்தில் பின் வந்த லாரி நின்றதும், டிரைவர் இறங்கியதும், அதைப்பற்றி கவனத்தில் கொள்ளாமல் யான் விரைந்து வந்து விட்டதையும் உணர்ந்து, அங்கு சென்றபோது ஒரு பெண்மணியிடம் விசாரித்தபோதுதான் லாரி டிரைவர் எடுத்து போனதை உறுதிப்படுத்திக் கொண்டு, அவர் கூறிய அடையாளங்களை வைத்துக் கொண்டு அலைந்தும் கிடைக்காமல், ஏமாற்றத்துடன் வீடு திரும்பினோம். அந்த பையில் பெருவாரியான மாற்றுத்திறனாளிகள் மற்றும் நண்பர்களின் தொடர்பு எண்கள் அடைங்கிய குறிப்பேடும், புகைப்படக்கருவியும், சிறிது பணமும் இருந்தது.

தவறவிட்டதில் மிக வருத்தத்துடன் இருந்த மதியபோழுதில் , ஒரு புதிய எண்ணிலிருந்து அழைப்பு, புகைப்படக்கருவியுடன் பை எங்கள் வசம் உள்ளது பெற்று செல்லுங்கள் என்று சொல்ல. கேட்க வேண்டுமா மகிழ்ச்சிக்கு, விரைந்தோம், நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். அந்த லாரி டிரைவர் அலெக்சாண்டர் கூறினார். அந்த பை தங்களுடையது என அறிந்தும், சரக்கு இறக்க வேண்டிய நிலையிலிருந்ததால், உடனே தொடர்புக் கொள்ள இயலவில்லை என வருத்தம் தெரிவித்தார்.

எமது மகிழ்வை இனிப்பு கொடுத்து, நன்றியைத் தெரிவித்து விடைப்பெற்றோம். 










நண்பர்களே 
உங்கள் வாழ்த்துகளுக்காக அவருடன் ( லாரி டிரைவர் அலெக்சாண்டர் ) யான்.



https://www.facebook.com/photo.php?fbid=626732797366366&set=a.572001146172865.1073741825.100000889537867&type=1&theater