Monday, July 23, 2007

எனக்கும் !!!!!!!!!!-10

ஐந்து வயதிலே, என் வாழ்வின் பக்கமே, தலைகீழாக மாற்றி எழுதப்பட்டது. ஆம், சேலம் நகரிலே, எங்கள் உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு (யார் வீட்டுத்திருமணம், உறவுமுறை ஆகியவை நினைவுக்கு வரவில்லை.)சென்றிருந்தோம். முதல் நாள் அங்கும் ஆட்டம் பாட்டம் தான்.இரண்டாம் நாள் காலையிலிருந்தே, மணவறையிலே, பின்புறம் சுருண்டு படுத்துக்கொண்டே இருந்ததைப் பார்த்த எமது தாயார், பாட்டியிடம் வருத்தப்பட, அவரோ, நான் நேற்று முழுவதும் குதித்ததின் விளைவுயென சமாதானம் கூற, பிறகு அன்று மாலைப்பொழுது, சேலத்தில் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைப்பெரும் பொருட்காட்சிக்கு, எனது அப்பாவோ தோளிலே எனைச் சுமந்து சுற்றிக் காட்ட ( 1. கூட்டமுள்ள இடங்களில் குழந்தைகள் நன்றாகப் பார்க்க, 2.கூட்டத்தில் குழந்தைகள் தொலைந்து போய்விடாமலிருக்க, 3) குழந்தைகளுக்கு கால் வலிக்குமென, இப்படி மேலும் சில காரணங்களால் ), அது சமயம், குடிக்க தண்ணீர் கேட்டேன். வாங்கிக் கொடுத்த தண்ணிரை, தோளில் அமர்ந்தபடியே நான் குடித்தேன். நான் குடித்த நீர் வயிற்றுக்குள் சிறிது செல்ல, மூக்கின் வழியே வெளியே சிறிதும் சிந்தியது. கிழே சிந்தாமல் தண்ணீர் குடியென அப்பா கூற, மீண்டும் குடித்த நீர் மூக்கின் வழியே பைப்பிலே சிந்துவது போல, வெளியே சிந்த,மீண்டும் அப்பா கடிந்துக் கொள்ள, மூக்கிலே தண்ணீர் வருவதை கூறினேன். என் உடல் நிலை மாற்றத்தை உணர்ந்த அப்பா, திருமணமண்டபம் விரைந்து அம்மாவுடன் மருத்துவரை (டாக்டர்)காண அழைத்துச் சென்றார்கள். அம்மா, மருத்துவரிடம் (டாக்டரிடம்)நேரடியாகவே, எனக்கு டிப்டீரீயா ( தொண்டை அடைப்பான் )நோய் தாக்கியுள்ளது என கூறி பதற, மருத்தவரோ (டாக்டரோ ),பரிசோதனை செய்து விட்டு, உண்மையை அறிந்தவராக, அதிர்ந்து போய், பரிசோதனை செய்வதற்கு முன்பாகவே, மருத்துவரே( டாக்டரே ) உணரமுடியாத தொடக்க நிலையில்,தொடக்கப்பள்ளிப் படிப்பையே முடிக்காத, நீங்கள் எப்படி உணர்ந்தீர்களேன எனது தாயிடம் வினவ, வாரயிதழ்கள் படிப்பதையும், டிப்தீரீயா (தொண்டை அடைப்பான் ) நோயின் அறிகுறிகளைப் பற்றி படித்ததையும் கூற,மருத்துவர் (டாக்டர் ) ஊசி மருந்தை எழுதித்தர, அப்பா வாங்கி வர,உடனே ஊசியும் போடப்பட்டது எனது வலது இடுப்பிலே. அம்மா என்னுடனிருக்க,மீண்டும் வெளியே புறப்பட்டுச் சென்றார் அப்பா,மருந்து வாங்கிய கடை வழியாக. மருந்துக்கடைக்காரரோ, பதற்றத்துடன் அழைத்து, ஒரு குப்பியில் (பாட்டிலில்) உள்ள மருந்தில் பாதிமருந்து தான் ஊசி போடவேண்டுமென கூறி,மருந்தின் வீரியத்தை, மருத்துவருக்கு (டாக்டருக்கு) தகவல் தரச் சொல்ல, மருத்துவரும் ( டாக்டரும்)அவசரத்தில் ஏற்பட்ட தவறை உணர்தாலும், மாற்று மருந்தில்லாததால், சிறிது நேரத்தில் என் உடல் முழுவதும் உணர்வுகளின்றி செயலிழந்து விட்டது. பசித்தால் கேட்க தெரியாது. பேச்சு இல்லை. சிறுநீர், மலம் கழிப்பதோ,பூச்சிகள்,எறும்புகள் உடல் மேல் ஊர்வதோ,தொடுவதோ மற்ற எந்த உணர்வுகளும் இல்லை. அதனால் இச்சமயத்தில் நடந்த நிகழ்வுகளும் நினைவில்லை. தொடர்ந்த மருத்துவம் பற்றியும், என் உடல்நிலை மாற்றங்கள் பற்றியும், பிறகு......

3 comments:

Anonymous said...

குழந்தைகளுக்குத்தான் ஏதாவது உடல் சுகமில்லையென்றால் பெற்றோர் எவ்வளவு துடித்துவிடுகிறார்கள்!.....அப்புறம்? காத்திருக்கிறேன்....ப. நா.

vetha (kovaikkavi) said...

oh!....i am reading.....very deep sad.....

Dhavappudhalvan said...

@ avithai said...
///oh!....i am reading.....very deep sad.....///





எம்மை விட அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருக்கலாம், இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியெல்லாம் அறிந்துக் கொள்ளமுடியாமல் இருக்கிறது.