Wednesday, January 20, 2016

அட, போயா.. போயா.... – இன்றொரு தகவல்.



இந்த பொங்கல் திருநாளுக்கு முன், ஒரு தகவல் அல்லது புகார் என்றும் எடுத்துகொள்ளலாம். அது சம்மந்தமாக வட்டாச்சியரை (தாசில்தார்) சந்திக்க சென்றேன். தாசில்தார் அலுவலக கட்டடத்தின் கேட்டில் வழி மறித்துக்கொண்டு ஒருவர், வருவோரையெல்லாம் யாரை சந்திக்க வேண்டும் என்று கேட்டு, கட்டடத்தின் வெளியிலுள்ள அலுவலக அறைகளுக்கு துரத்திக் கொண்டு இருந்தார். அதேபோல் என்னையும் கேட்டு, இங்கேயே இருங்கள் என கூறி விட்டார்.
தாசில்தார் அறைக்கு செல்ல வேண்டுமென கேட்டதற்கு, வெளியில் வரும்போது உங்கள் கோரிக்கையை கூறுங்களேன அனுமதிக்க மறுத்து விட்டார். அமைச்சர்கள் அலுவலகங்களில் தான் இந்த கெடுபிடி என்றால், இங்கேயும் வந்துவிட்டதா இச்சீர்கேடு என நினைத்துக்கொண்டு காத்திருந்தேன். தாசில்தார் வெளியே வர, நான் ஐயாவென, அவர் கண்டுக்கொள்ளாமல் செல்ல, அவர் காருக்கு அருகில் மற்றொருவருடன் நின்று பேசும் சமயத்தில், எனது கோரிக்கையை கூற ஆரம்பிக்கும் முன்பாகவே, கணினியும் தோற்கும் வேகத்தில், அட, போயா.. போயா.... என்கிட்டே கிடையாது என கூறியபடியே சென்றுவிட்டார்.
பல அலுவலக அரசு பணியாளர்கள் கூடியிருந்த வெளி இடத்தில் நானொரு ஒரு குடிமகன், ஒரு மாற்றுத்திறனாளி என்ற நினைவுக்கூட தோன்றாமல்,  அத்தாசில்தார் நடந்துக் கொண்ட அவமரியாதையான அச்செயலால், ஒரு நிமிடம்  திகைத்து விட்டேன். அச்சூழ்நிலையில் அங்கிருந்த ஒரு அரசு பணியாளர், மனம் வெதும்பி, என்ன மனுஷன் அவர் என கூறிவிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரிக்கு தொடர்புக் கொள்ளுங்கள் என கூறி, தொலைப்பேசி எண் ஒன்று கொடுத்தார்.

அங்கு நடந்த கூத்தை என்ன சொல்ல? என் அழைப்பை ஏற்றவர், எடுத்த எடுப்பிலேயே யாரிடம் பேசுகிறீர்கள் தெரியுமாவென கேட்க, ( அன்பே வா திரைப்படத்தில், எம்.ஜி.யார் போனில் நாகேஷிடம் நான் யார் தெரியுமா என கேட்க, என்னய்யா போனில் படமா காட்டுறாங்க என நாகேஷ் சொல்வதை நினைத்துக் கொண்டு)  நானும் மக்கள் தொடர்பு அதிகாரியிடம் பேச வேண்டுமென கூற, அது நானில்லை என்றபடி, நான் அடுத்தது என்ன கூற அல்லது கேட்கிறேன் என்பதைக்கூட பொருட்படுத்தாமல் இணைப்பை துண்டித்து விட்டார். இவர்களை போன்றவர்களை என்வென்று கூற?  

No comments: