ஆந்திர மகிளசபாவிலிருந்து டிசார்ஜ் ஆகப்போகிறோம் என தெரிந்த உடன், துணிமணிகளையும், போர்வை, தட்டு டம்ளரையும் என் பெரிய தகர டிரங்க் பெட்டியில் அவசரமாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன். அதனால் யாரிடமும் நானாக சொல்வதற்கு முன்பாகவே ஆயாக்கள் ஆட்டண்டர்கள், உடனிருந்தவர்களும்` நண்பர்களும் மீண்டும் ஒருமுறை எங்கள் குடும்பத்தைப்பற்றியும் ஊரைப்பற்றியும் விசாரித்து தெரிந்துக் கொண்டார்கள். கீழே ஹாலுக்கு வந்ததும் வகுப்பறைகளிலிருந்து டீச்சர்களும் வந்து பேசிவிட்டு சென்றார்கள். அந்த சமயத்தில் ஊருக்கு செல்லப் போகிறோம் என்ற நினைவு மட்டுமே மனத்தில் நிறைந்திருந்ததால் மற்ற செயல்பாடுகளோ பேச்சுக்களோ நினைவிலில்லை. ஆனால் வெளியே வந்து டேக்ஸியில் கிளம்பும் போது அவசரமாக அந்த பிரம்மாண்டமான கட்டடத்தை ஒரு முறை மனதில் நிரப்பிக் கொண்டேன்.
அங்கிருந்து நேராக சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசன் அருகில் ஒரு லாட்ஜூக்கு வந்து இறங்கினோம். உள் நுளைந்ததுமே மாடியில் ரூம் என அப்பா கூற, படிகட்டுகள் அருகில் நான் செல்லவும், அதே சமயத்தில் மாடியிலிருந்து ஆஜானுபாகுவான உருவத்துடன் வெள்ளை மீசையை முருக்கியபடி, பார்ப்பதற்கு ஓய்வு பெற்ற ஒரு இராணுவ அதிகாரியைப் போல் இருந்த ............. , இறங்குவதற்காக
வந்து நிற்கவும் சரியாக இருந்தது. அவர் கீழே இறங்குவதற்காக நான் தயங்க, அங்கு வந்த அப்பாவோ, திருமணம் நடைப்பெற உள்ள இரண்டாவது சகோதரியின் மாமனார் என்று அறிமுகம் செய்து வைத்தார். அன்று அவர் படியில் நின்ற தோற்றம் இன்றும் என் மனத்தில் பசுமரத்தாணிப் போல் பதிந்துள்ளது. அவரைப் பற்றி மேலும் சில தகவல்களை இந்த நேரத்தில் சொல்லி விடுவது பொருத்தமாக இருக்கும். ஆந்திராகாரரான அவர் குடும்பத்துடன் தமிழ்நாடு, சேலம் மாவட்டம் சேலம் மாநகரில் குடியேறியவர்கள். அவர் குடும்ப சூழ்நிலையால் பள்ளிப்படிப்பற்றவர். ஆனாலும் அனுபவ அறிவினாலும் விடாமுயற்சியினாலும் ஆங்கில நாளிதழான ''ஹிந்து'' வை படிக்கக் கூடிய தினசரி வாசகர் ஆவார். அத்துடன் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம்,ஹிந்தி மொழிகளை சரளமாக பேசக்கூடியவர். ஆனால் உணர்ச்சி பூர்வமாகவோ, வேகமாகவோ பேசும்போது பல மொழிகளிலும் கலந்து பேசுவார். அது கேட்பவர்களுக்கு ஒரு பிரமிப்பை ஏற்படுத்தும். அன்றிரவு ரயிலில் ஊருக்கு பயணமானோம். அதன் பிறகு பூட்ஸ்கள் ரிப்பேர் செய்வதற்கும், புதிதாய் மற்றுவதற்கும் அப்பாவுடன் ஓரிரு முறைகள் வந்தேன். பிறகு என் தனி ராஜியம் தான். அதற்கு பிந்தைய சென்னை அனுபவங்கள் அவ்வப்போது தொடரும்.....
No comments:
Post a Comment