Tuesday, January 27, 2009

எனக்கும்-36

ஆனால் இதை படித்த நீங்கள் நினைக்கலாம். உன் மீது மட்டும் வார்டன் அம்மாவுக்கு ஏன் இவ்வளவு கோபமும் பழி வாங்க எண்ணம் தோன்ற காரணம் என்ன என தோன்றலாம். இது ஒரு சத்திய சோதனை தான். அன்று மாட்டிக் கொண்டவர்களில் சிலர் வார்டன் அம்மா செல்லம்.  சிலர் அப்பாவிகள் போல் இருப்பவர்கள். மற்றும் என்னையும் சேர்த்து சிலர் குறும்புகாரர்கள். அதில் நான் நேரடி கவனத்துக்கு உள்ளானவன்.  ஓ..ஹோ... அப்படியா!  என நினைப்பது தெரியுதுங்க. ஆனா நீங்க நினைக்கிற மாதிரி இல்லைங்க. நான் விசயம் சொன்னப் பின்னாடி உங்க முடிவை சொல்லுங்க. ஏனென்றால் முதலில் விட்டுவிட்ட முட்டை கதைக்கு மீண்டும் போகலாமா?  அந்த வார்டன் அம்மா செல்லமா இரண்டு நாய்களை வளர்த்தாங்க. அதிலே ஒன்னு போமேரியன் ஆண் நாய். அதுக்கு பேரு ராம். மற்றொன்று ராஜபாளையம் வகை பெண் நாய். அதுக்கு பேரு சீத்தா( தமிழில்-சீதை). இது ஒரு ராட்ச்சசி போல் இருக்கும். காலையிலும் மாலையிலும் ஒரு ரவுண்ட் சங்கிலி பிடித்துக் கொண்டுச் செல்வார்கள். அவர்கள் எங்கே பிடித்துக் கொண்டு செல்வது. அது அவர்களை இழுத்துக் கொண்டு ஓடும். அவர்களைப் பார்க்க பாவமாய் இருக்கும். எங்களுக்கு பரிமாற வைத்திருக்கும் உணவுகளை நேரடியாக அந்த பாத்திரங்களில் வாய் வைத்து சாப்பிட,இந்த இரண்டு நாய்களையும் அனுமதிப்பார் வார்டன் அம்மா. முட்டைப் பொரியல் பெரும் பகுதி அவைகளுக்குத்தான். அதனால் பல முறை எதிர்த்து கேட்டிருக்கிறேன், சாப்பிட மறுத்திருக்கிறேன். தவிர இந்த இரண்டு நாய்களையும் வெவ்வேறு இடங்களில் கட்டி வைத்திருப்பார்கள். சித்தா நாய் ராட்ச்சசி போலிருப்பதால் , அதனிடம் யாரும் குரும்பு வைத்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால் போமேரியன் நாயை கைத்துப்பாக்கியால் சுடுவது போல கைவிரல்களை மடக்கி டிஸ்யும்...   டிஸ்யும்... என ஒலி எழுப்பினால் போதும் குரைக்க ஆரம்பித்து விடும். வார்டன் அம்மாவிடம் இருந்த கோபத்தை, பாவம் அந்த சின்ன நாயிடம் காட்டுவோம். மேலும் என்னைக் கண்டாலே குலைக்கக் கூடிய அளவுக்கு செய்து விட்டேன்.  பல முறை என்னை வார்டன் அம்மா, டே உன்னைப் பார்த்தாலே குலைக்கிறது. நீ அந்த பக்கம் போ என விரட்டி விடுவார்கள் அல்லது வேறு இடத்தில் கட்டி வைத்து விடுவார்கள். இவைகளும் என்னை பலி வாங்கக் கூடிய அளவுக்கு மாறியிருக்குமென கருதுகிறேன். இந்த இரண்டு விசயங்களுக்கு தவிர, வேறு எதற்கும் கோபப்படும்படி நேரிட்டதில்லை. எதற்கு என்று ஞாபகமில்லை. ஒரு சமயம் ஏழெட்டு பேர் எங்கள் ஹாலிலேயே தங்கியிருந்தோம்.  ஒரு நாள் காலை டிபன் ( சப்பாத்தி )  கொண்டுவந்தவர்கள்,யார் விரைவாக பனிரெண்டு சப்பாத்தியையும் சாப்பிட்டு முடிக்கிறவர்களுக்கு நூறு ரூபாய் பரிசு தருவதாக போட்டி வைத்தார்கள். ஆனால் கன்டிசன் ,முன்னதாகவும், பனிரெண்டு சப்பாத்தியையும் சாப்பிட்டு விடவேண்டும். பிறகு பாத்ரூம் சென்று வாந்தி எடுத்துக் கொள்ளலாம். அந்த போட்டியில் அனைவரும் ஆறு ஏழு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, நான் முன்னதாகவும், பதினோரு சப்பாத்திகளையும் சாப்பிட்டு விட்டேன். ஆனால் பனிரெண்டு சாப்பிட்டால் தான் பரிசு என கூறி விட்டார்கள். நான் வாந்தி எடுக்க விரும்பாததால் அத்துடன் நிறுத்திக் கொண்டுவிட்டேன். என்னுடைய இரண்டாவது பெரிய சகோதரியின் திருமணத்திற்காக அழைத்துச் செல்ல வந்து டாக்டரிடம் அனுமதி கேட்டதற்கு, உங்கள் பையன் நடக்கக் கூடிய அளவுக்கு வந்து விட்டான். இதற்கு மேல் இங்கு  மருத்துவம் தேவையில்லை. எனவே ஊருக்கே டிசார்ஜ் செய்து அழைத்து சென்று விடுங்கள் என டிசார்ஜ் செய்து அனுப்பி விட்டார். இத்துடன் ஆந்திரமகிளசபா மருத்துவமனை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்து விட்டதாக கருதுகிறேன். ஏதேனும் ஞாபகம் வந்தால் அவ்வப்போது பதிவு செய்கிறேன். அடுத்து.....

No comments: