Sunday, January 18, 2009

எனக்கும்-34

அனைவருக்கும் பொதுவான பொழுதுபோக்கு அரசு மற்றும் தனியார் டாக்குமென்டரி படங்கள்,ஸ்லைடு ஷோ.  இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது காட்டபடும்.வருகின்ற வி.ஐ.பி.களுக்கு எங்களை காட்டுவதற்கும், நாங்கள் விரும்பி படம் பார்க்க அமருமிடமாகவும் முன் கட்டடத்ததில் ஒரு ஹால் உள்ளது.

 ஒரு சமயம் சாய்பாபா அருளாசி வழங்க வந்திருந்தார். அந்த சமயத்தில் ஒரு மகானாக  அவரை உணராமல், அவரின் நடை உடை பாவனைகள் தான் என்னை கவர்ந்தது. அவர் காரிலிருந்து இறங்கி வந்து அருளாசி வழங்கி விட்டு  மீண்டும் காரில் ஏறி செல்லும் வரை அவரையும் , அவர் அருகில் வந்து கூழை கும்பிடு போட்டுக் கொண்டிருந்தவர்களின் செயல்களும், விபூதி மற்றும் பொருட்களை மாயமாக வரவழைத்து ஆசிர்வதித்து கொடுத்ததும் அவரின் உடையோ கழுத்திலிருந்து கனுக்கால் வரை மூடியிருந்ததும்,கால்கள் எடுத்து வைக்கும் போது மட்டும் அவர் அணிந்திருக்கும் பூட்ஸ்கள் (பாதரட்ச்சைகள்) சிறிது தெரிந்தத்தும், சுருண்ட தலைமுடியுடன் கூடிய முகமும், உள்ளங்கையுடன் விரல்களும் பார்வையில் பட்ட உருப்புகளாகும். அவருடைய நடையில் ஒரு நளினத்தையும் கண்டேன். இவை தான் என் கவனத்தை ஈர்த்ததே தவிர, வேறு பக்கம் என் கவனம் சிதறவில்லை. 

ஒரு நாட்டிய நிகழ்ச்சி,  எங்கள் கட்டடத்திக்கு பின்புறமிருந்த திறந்தவெளி அரங்கில்.நடிகை ராஜசுலோச்சனா அவர்களின் நாட்டியம் நடைப்பெற்றது. அதில் மறக்கமுடியாத நாட்டியத்துடனான பாடல்'' காக்கை சிறகினிலே நந்தலாலா.... உன்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா.. '' 

வி.ஐ.பி வெளி நோயாளியாக வந்து உடற்பயிற்சிக்கு வந்தவர், மறைந்த நடிகர் அசோகன் அவர்களின் மகன். பிறப்பிலேயே பாதிக்கப்பட்டவர். 99% செயழிழந்தவர். காரில் அழைத்து வருவார்கள்.  அவரால் எந்த ஒரு செயலையும் செய்துக்கொள்ளவோ, சொல்லக்கூடிய நிலையிலே இல்லாதவர். உதவியாளர்கள் தான் அவரின் அனைத்து தேவைகளையும் கவணித்து செய்ய வேண்டும். அவரை நினைக்கும் போதெல்லாம்,  நான் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்ட ஆரம்ப கட்டநிலையை நினைத்துக் கொள்வேன். ஒரு பிறந்த நாளுக்காக அனைவருக்கும் பழங்கள், பிஸகட்டுகள், சாக்லெட்டுகள் அனைவருக்கும் கொடுத்தார்கள். என்னுடைய உடற்பயிற்சி நேரமும் அவர் பயிற்சிக்கு வந்த நேரமும் அடிக்கடி பார்க்க கூடிய வகையில் அமையும்.

No comments: