Thursday, January 8, 2009

எனக்கும் -28

டாக்டரின் ஆலோசனைபடி ஆப்ரேசன் செய்யப்பட்ட இடது கால் மாவுகட்டை முழங்கால் பக்கத்திலிருந்து சிறிது சிறிதாக அறுத்து கிழித்து இங்கே பூச்சியில்லையே, இங்கே பூச்சியில்லையே என சொல்லியவாறு, எவ்வளவு பஞ்சு வைத்து கட்டியிருக்கிறோம் பார்த்தாயா? இதில் பூச்சி நுழையவே முடியாது என சொல்லி முக்கால் பகுதியில் நிறுத்தி விட்டார்கள். பிறகு பார்க்க வந்த டாக்டர், இவ்வளவு திறந்தாகிவிட்டது. ஆப்ரேசன் செய்த பகுதியையும் பார்த்து விடலாமென கூறி, மீதியையும் திறந்து பார்த்தார்கள். அப்பொழுதுதான் தெரிந்தது.  ஆப்ரேசன் செய்த இடத்தில் செப்டிக் ஆகி சீவு பிடித்திருந்தது. நல்ல நேரம், இவனுடைய தொந்தரவை பொருட்படுத்தாமல் விட்டிருந்தால் நிலமை மோசமாகியிருக்கும் என கூறியதுடன், ஆப்ரேசன் தையல்களை பிரித்து விட்டு சுத்தம் செய்து மீண்டும் மாவுகட்டு போட்டார்கள். ஏன் இப்படி அலட்சியமாக செயல்படுகிறார்கள் அரசு மருத்துவமனை டாக்டர்கள் என டாக்டர் நர்ஸிடமும் அட்டண்டரிடமும் வருத்தத்துடன் பேசிக்கொண்டது, இன்னும் நினைவில் நிற்கிறது. டாக்டர் என் முதுகில் தட்டி கொடுத்ததுடன், விரைவில் சுமாராகி விடும். எதேனும் சிரமம் இருந்தால் சொல்லிவிடு உடனே பார்த்து விடலாம் என அனுப்பி வைத்தார். பெரிய ஆப்ரேசன்கள் செய்யவேண்டியிருந்தால் பொது அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பார்கள். அதனால் நானும், சென்னை அரசு பொது மருத்துவமனையில் ஆப்ரேசன் செய்துக் கொண்டேன். அங்கு சில நாட்கள் உள் நோயாளியாக வைத்திருந்து, பிறகு ஆப்ரேசன் செய்வார்கள். அப்படி நான் இரண்டு முறை தங்க நேரிட்டது. முதல்முறை ஒரு பத்து நாட்களுக்கு பிறகு ஏனோ திருப்பி அனுப்பி விட்டார்கள். இரண்டாவது முறை தான் ஆப்ரேசன் செய்தார்கள். ஆனால் அங்கிருந்த நாட்கள் கொடுமையானது. ஏனேன்றால் உள்நோயளிகளுடன் யாராவது ஒருவராவது உடனிருப்பார்கள். எனக்கு உதவியாளர்கள் இல்லாமல் நான் தனியாக இருக்க வேண்டியிருந்தது. பாத்ரூம் டாய்லெட் போய்வரவே முடியாது. மல, சிறுநீர் எல்லா இடங்களிலும் சிதறிக் கிடக்கும், நிரம்பி வழியும். நன்றாக நடப்பவர்களுக்கே கால் வைக்க முடியாது. கைகளையும் ஊன்றி செல்லவேண்டிய நிலையில் நான். இதற்கு மேல் சொல்லதேவையில்லை. காலை உணவோ இட்லி அல்லது தோசை அல்லது குண்டு பண் (ரொட்டி ) பொட்டலமாக அத்துடன் பால் ஒரு டம்ளர் வரும்.  மதியமோ அளவு சாதம் அதில் மேல் சாம்பார் ஊற்றி பொரியலுடன், ஒரு டம்ளர் நீர்மோர். மாலையில் ஒரு பண்ரொட்டி, டம்ளர் பால், இரவு சப்பாத்தி அல்லது சாதம். சாப்பாடு, பண்ரோட்டி சாப்பிடவே மாட்டேன். பால், மோர் குடித்து விடுவேன். இட்லி தோசை சப்பாத்தி முடிந்தவரை கையில் படாமல் கட்டி கொடுத்த காகிதத்திலே வைத்தபடியே வாயில் கடித்து சாப்பிட்டு விடுவேன். நான் அங்கிருந்தவரை குளிக்கவோ பல் விளக்கவோ முடியவில்லை. சாப்பாட்டை பக்கத்தில் யாருக்காவது கொடுத்து விடுவேன். அங்கும் எனக்கு ஒரு நண்பர் கிடைத்தார். என்னை விட வயதில் மிகவும் மூத்தவர். அவர் ஒரு தொழுநோயாளி. சிறந்த ஓவியரும் கூட. அவரிடம் புகைபடம் கொடுத்தால், அதை பார்த்து தத்ரூபமாக பெரிய அளவில் பென்சில் ஓவியங்களை வரைந்து கொடுப்பார். அதில் அவருக்கு சிறிது வருமானம் கிடைக்கும். எனக்கு கிடைக்கும் பண்ரொட்டிகளை அவருக்கு கொண்டு சென்று கொடுத்து விடுவேன். என்னையே சாப்பிட சொல்லி வற்புறுத்துவார். என்னால் சாப்பிடமுடியவில்லை என கூறி கொடுத்து விடுவேன். மிக்க மகிழ்ச்சி அடைவார். என்னுடைய புகைப்படத்தையும் வரைந்து தருவதற்கு கேட்டார். என்னிடம் புகைப்படம் இல்லை, எனவே என்னை பார்த்தே வரைந்து கொடுங்களென கேட்டேன். நீ நீண்டநேரம் அடாமல் அசையாமல் அமரவேண்டும், என்னாலும் விரைவாக வரையமுடியாது என கூறிவிட்டார். அங்கிருந்தபோது இரும்பு சக்கரநாற்காலியை (BIG IRON WEEL CHAIR ) எடுத்து கொண்டு மருத்துவமனைக்குள் முடிந்த இடங்களிலெல்லாம் சுற்றுவதும், ஓவியர் ஓவியம் வரைவதை பார்த்துக் கொண்டிருப்பதுமே என்னுடைய மிக பெரிய பொழுதுபோக்கு.  அதுவுமில்லாமல் அரசு பொது மருத்துவமனைகளின் நிலை உங்களுக்கு சொல்ல தேவையில்லை. 

2 comments:

vetha (kovaikkavi) said...

முடிந்த இடங்களிலெல்லாம்

சுற்றுவதும், ஓவியர் ஓவியம் வரைவதை பார்த்துக் கொண்டிருப்பதுமே

என்னுடைய மிக பெரிய பொழுதுபோக்கு.

nalla suru suruppu.....

Dhavappudhalvan said...

kavithai said...
///nalla suru suruppu.....///

வேறென்ன செய்ய, அருவை சிகிச்சை முடியாத போது படுக்கையிலேயே செருண்டு கிடக்க முடியுமா சகோதரி.