Tuesday, January 27, 2009

எனக்கும்-35

இதில் என்னுடைய சோகங்களும் வருத்தங்களும். போட்டியில் பரிசு கிடைத்து இழந்ததையும், எனது பாட்டியின் இழப்பையும் முன்பே குறிப்பிட்டு விட்டேன். ஒரு சமயம் திருச்சிக்கு சுற்றுளா சென்றோம். திருச்சியா, லால்குடியா என சரியாக நினைவுக்கு வரவில்லை. லால்குடிஎன்று தான் ஞாபகம். ஒரு அரிசி அறவை ஆலையில் (ரைஸ் மில் குடோனில்) தங்க வைக்கப்பட்டோம். அங்கிருந்து திருச்சி மற்ற இடங்களுக்கும் அழைத்து சென்றார்கள். ஆனால் அதில் மறக்க முடியாத இரண்டு சம்பவங்கள், ஒன்று திருச்சி விமான நிலையத்திற்கு சென்றபோது, நான் வர மறுத்து விட்டு, நெல் காய வைக்கும் களத்தில் புட்பால் அல்லது வாலிபால் பந்தை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தது. மற்றொன்று அவர்கள் விமான நிலையத்திற்கு சென்றதுடனில்லாமல் விமானத்திலும் ஏறி அமர்ந்ததையும், பழங்களும் குளிர்பானங்களும் கேக் சாக்லெட் போன்றவையும் கொடுத்ததையும்,விமானத்தின் அமைப்பை பற்றியும் சென்றவர்கள் மாறிமாறி சொன்னதை கேட்டு, ஐயோ! தவற விட்டு விட்டோமே என ஏங்கியது. அறியாத வயதில் நடந்துருந்தாலும்,ஆந்திர மகிளசபா வாழ்வில் ஆறாத சுட்டபுண்  ஒன்று உண்டு. அன்றும் இன்றும் நண்பர்களாக கருதப்படக் கூடிய சிலர் ( பெயர்கள் நினைவிலே இருப்பினும் சொல்ல விரும்பவில்லை) ஒன்று கூடி,  வார்டன் அம்மாவுக்கு கெட்டபெயர் உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு திட்டத்தை ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள். உடனிருந்து கேட்டுக் கொண்டிருந்த நான் அப்படி செயல்படாதீர்கள், அது உங்கள் உயிருக்கு ஆபத்து, வேறு வழியை யோசனை செய்யுங்கள் என்று கூறியதின் பேரில் நானும் கூட்டாளியாக கருதப்பட்டு விட்டேன். ஆனால் அவர்களோ ஒரே முடிவுடனிருக்க,  தடுத்து நிறுத்த வழித்தோன்றாத நான், ஒருவர் மூலமாக வார்டன் அம்மாவுக்கு தகவல் தெரிவித்து விட்டேன். ஆனால் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. சம்மந்தப்பட்டவர்கள் அனைவரையும் தனித்தனியாக அழைத்து விசாரித்தவர்கள், தகவல் தெரிவித்த என்னை அழைக்காமலேயே எம் பெற்றோருக்கு தந்தி அனுப்பி, என் அப்பாவும் பெரிய அத்தையின் பெரிய மகனும் வந்த பிறகுதான் என்னை குற்றவாளியாக முடிவு செய்து விட்டார்கள் என்பது தெரிந்தது. என் அப்பாவிடம் என்ன கூறினார்கள் என்பதும் எனக்கு தெரியாது. அப்பாவும், அத்தையின் மகனும் என்ன நடந்தது என்று அவர்கள் என்னிடம் கேட்கவேயில்லை.  பேசிய வார்த்தைகளோ மூன்று நான்கு தான். அவை '' உன்னை டிசார்ஜ் செய்து அழைத்து போகச் சொன்னார்கள்'' '' சமாதனம் சொல்லியிருக்கிறோம்'' நல்ல பிள்ளையாக நடந்துக் கொள்''  ''போய் வருகிறோம்''   இவ்வளவுதான். இவர்கள் வரும் முன்பாவது, அழைத்து கேட்பார்கள், நடந்ததைச் சொல்லலாம் என்றிருந்த நான், இவர்களும் என்னை குற்றவாளியாகவே நினைத்து விட்டார்களே என உணர்ந்ததும் கூனிக்குருகி தலைக் குனிந்தவன் தான். தலை நிமிர்ந்து யாரையும் பார்க்கமாட்டேன் பேசமாட்டேன், தனிமை தனிமைதான். வகுப்பில் கூட தனியாக மாணவர்களுக்கு எதிர்புறத்தில் கதவுக்கு அருகில் மூலையில் அமர்ந்துக் கொள்வேன். டீச்சர் கேட்கின்ற கேள்விகளுக்கு கூட தலை குனிந்தவாறே பதில். நானிருக்கும் நிலையைக் கண்டு, உன் தன்னிச்சையான செயலே உன் மேல் தவறுயில்லையென காட்டுகிறது. தலையைத் தூக்கி பேசு, அனைவருடனும் சேர்ந்து அமர்ந்து கொள், யாராவது சொன்னால் எங்களிடம் கூறு என்று பலவாறாக, பல நாட்களாக டீச்சர்கள் சொல்லியும் கேட்காததால், எப்படி நடக்கவேண்டுமென்று உத்தரவே போட்டுவிட்டார்கள். அதன்படி மாணவர்களுடன் சேர்ந்து அமர வேண்டியதாகிவிட்டது.  அடிக்கடி என்னிடம் கேள்வி கேட்டு, அதற்கு தலைத் தூக்கி பதில் சொல்லும் வரை விடமாட்டார்கள். இப்படியே சிறிதுசிறிதாக சகஜநிலைக்கு தயார்படுத்தினார்கள். எப்படி நான் மட்டும் குற்றவாளியானேன் என்ற உறுத்துதல் இருந்துக் கொண்டேயிருந்தது. எனவே அறிந்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுடன் பழகியதில்,  ஆரம்பத்தில் யார் மாட்டிவிட்டார்கள் என தெரியாமல், மாட்டிக் கொண்டுவிட்டோமே என்ற பயத்தில் அழுது இருந்திருக்கிறார்கள். ஆனால் வார்டன் அம்மா விசாரிக்க ஆரம்பிக்கும்போது,என் பெயரும் அடிப்பட்டதால் அவன்தான் செய்திருக்க வேண்டும். நீங்கள் அவனிடம் சேரக்கூடாது. நான் சொன்னேனென்று யாரிடமும் எதுவும் பேசவேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்கள். 

No comments: