Sunday, January 11, 2009

எனக்கும்-31

சிறிது நாளில் பூட்ஸ் கொடுத்தார்கள். வலது காலுக்கு இடுப்பில் ஒரு பெல்ட்டுடன் இணைந்தது போல முழுமையாகவும், இடது காலுக்கு முழுமையாகவும், கை அக்குள்களில் வைத்து நடக்கும்படியான ஊன்றுகோள்களையும் கொடுத்தார்கள். மற்றவர்களெல்லாம் பூட்ஸ் போட்டுக் கொண்டு நடப்பதைப் பார்த்து, வெறியோடு காத்திருந்த எனக்கு, மதியம் கொடுத்த பூட்ஸ்களை அணிந்துக் கொண்டு, முதலில் கட்டிலைப் பிடித்துக் கொண்டும், சிறிது நேரத்தில் ஊன்றுகோள்களின் உதவியுடனும் அன்று மாலைக்குள் தனியாகவே நடக்க பழகி விட்டேன். பெரிய சாதனை செய்த மகிழ்ச்சியில் மிதந்தேன். சில நாட்களில் மற்றவர்கள் நடப்பது போல இரண்டு கால்களையும் ஒரே நேரத்தில் தூக்கி வைத்து விரைவாகவும் நடக்க பழகி விட்டேன். அவ்வப்போது டாக்டர் செக்கப் உண்டு. என்னுடைய முறை வந்தது. டாக்டர் என்னை நடந்து காட்ட சொன்னார். நானும் விரைவாக இரண்டு கால்களையும் ஒரே நேரத்தில் தூக்கி வைத்து நடந்து காட்டினேன். நன்றாக நடப்பவர்கள் நடப்பது போல் ஒவ்வொரு காலாக எடுத்து வைத்து நடக்க வேண்டும். அப்பொழுது தான் நோய் குணமாகும். நீயும் நன்றாக நடக்க முடியும் என்றதுடன் நடப்பதற்கும் சொல்லிக் கொடுத்தார். அன்றிலிருந்தே அதுபோல் நடக்க ஆரம்பித்து விட்டேன். சிலர் இரண்டு கால்களையும் தூக்கி வைத்து நடப்பார்கள். டாக்டர் பார்க்கும்போது மட்டும் ஒவ்வொரு காலாக எடுத்து வைத்து நடப்பார்கள். அதனால் அவர்கள் வேகத்திற்கு என்னால் நடக்கமுடியாது. மீண்டும் சில மாதங்களுக்கு பிறகு பரிசோதித்த டாக்டர் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. எனவே இனிமேல் வலைத்தடி (WALKING STICK ) உதவியுடன் நடந்து பழகுயென பரிந்துரைத்தபடி நடக்க ஆரம்பித்தேன்.  முதலில் மிகவும் சிரமமாக இருந்தாலும் நடக்க பழகி கொண்டு விட்டேன். மேலும் சிறிது நாட்களுக்கு பிறகு இடுப்பு பெல்ட்டையும் எடுத்து விட்டு நடக்கச் சொன்னார். ஆனால் அப்படி நடக்க முடியததால் ஊன்றுகோள்களையே கொடுத்து நடக்க பரிந்துரைத்தார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் இடதுகாலுக்கு முழுமையாக இருந்த பூட்ஸ் முழங்காலுக்கு கீழ்நிலைக்கு (below knee) மாற்றப்பட்டது.  இந்த நிலையே இன்று வரை அப்படியே நீடிக்கிது. முதலும் கடைசியுமான ஒரே ஒரு நடைப்போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்றதை முன்பே கூறியுள்ளேன்.  அடுத்த சாகசங்களையும் பொழுது போக்குகளையும் படித்து களிப்போமா!....

No comments: