Sunday, January 18, 2009

எனக்கும் -33

இங்கு பணிபுரிந்தவர்கள் என்றால், முதலில் ஆசிரியர்களைத்தான் சொல்ல வேண்டும் . அவர்கள் தான் குருவாயிற்றே. முதலில் மூளைவளர்ச்சியின்மையால் செயல்பாடுகள் குறைந்தவர்களுக்கு தனியாக படம் நடத்த ஒரு டீச்சரும், ஆந்திராவிலிருந்து வந்த தெலுங்கு மாணவர்களுக்காக  தெலுங்கில் பாடம் நடத்த ஒரு டீச்சரும், ஒன்றிலிருந்து நான்காம் வகுப்பு வரைக்கும் டீச்சர் திருமதி. கமலா அவர்கள், அடுத்து ஐந்தாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை  திருமதி.  ( பெயர் ஞாபகம் வந்ததும் எழுதுகிறேன்) அவர்கள். இவர்களிருவரும் எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்தவர்கள். இந்த நான்கு ஆசிரியர்களும் அன்பாக பழக கூடியவர்கள். ஆயாக்கள் கிருஷ்ணம்மா, வள்ளியம்மா மற்றும் சிலர். அட்டண்டர்கள் ராஜகோபால், சண்முகம், பாலையா( இவர் வார்டன் அம்மாவின் சகோதரராக இருப்பினும் மிகவும் வெகுளியானவர்).  டாக்டரை பார்க்க, உடற்பயிற்சி, ஆப்ரேசன் தியேட்டர்களுக்கு அழைத்து செல்வதும், ஆபீஸ் மற்றும் பல வேலைகள் அனைத்துக்கும் இவர்கள் தான். ஆப்ரேசன் தியேட்டரில் உதவியாளர்களாகவும் செயல்படுவார்கள். மீண்டும் சில முறை அங்கு சென்ற போது பழைய நினைவுகளை அசைப்போட உதவுபவர்கள். அங்கு எங்களுக்கு வழங்கப் பட்ட உணவுகளை பற்றி, இட்லி, தோசை, சப்பாத்தி, கோதுமைரவா உப்புமா( வெங்காயம் இருக்காது) இவை அனைத்துக்கும் சட்னியும் சாம்பாரும் வெறும் நீர் போல்தான் இருக்கும். வாரத்தில் ஒருநாள் ஆஃப் பாயில்டு முட்டை அல்லது முட்டை பொரியல் கொடுப்பார்கள். மதியம் சாதம், சாம்பார் அல்லது குழம்பு, ரசம், மோர், ஊறுகாய், பொரியல். ஆஃப் பாயில் முட்டை எனக்கு பிடிக்காது. எனவே வெள்ளைகரு பகுதியை சாப்பிட்டு விட்டு மஞ்சள் கருவை யாருக்காவது கொடுத்து விடுவேன். முட்டைப் பொரியலில் வெங்காயம் போடாமல் மிளகுத்தூள் மட்டும் போட்டுக் கொடுப்பார்கள். அதை சாப்பிட பழகிவிட்டேன். விசேஷ நாட்களில் அல்வா அல்லது பாயாசம் இருக்கும்.நாங்கள் சுத்த சைவம். திருமணத்துக்கு பின் ஒருமுறை நானும் , எனது மனைவியும் சென்னைக்கு டிரைனில் வந்து சேர்ந்ததும், அருகிலிருந்த ஒரு ஓட்டலுக்கு சென்று, சைவமும் அசைவமும் என போட்டிருந்தாலும், பசியின் காரணமாய்  ஆளுக்கு ஒரு பிளேட் இட்லி வாங்கி சாப்பிட வாயில் வைத்தோம். அப்போதுதான் தெரிந்தது மாமிச குளம்பு ஊற்றியிருக்கிறார்கள் என்பது. அன்று காலை உணவை சாப்பிடவேயில்லை. அட முட்டைக்குள் ஒரு கதையே இருக்கிறது. அதை அடுத்ததில்...

No comments: