Saturday, January 10, 2009

எனக்கும்-29

2009 வருடமாகிய இந்த நேரத்தில் எப்படி இருக்கிறது என்பது  எனக்கு தெரியாது. நான் சொல்லியிருப்பது சுமார் 40 வருடங்களுக்கு முன்பானது. ஆனாலும் பெரிய அளவில் மாற்றமிருக்காது என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால் நான்கைந்து வருடங்களுக்கு முன் MRI ஸ்கேன் எடுத்துக் கொள்ள சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். MRI SCAN எடுக்குமிடம் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். ஆனால் உள்ளுக்கும் வெளியில் நடப்பதற்கும் ஒரே செருப்புகளையும் பூட்ஸ்களையும் பயன்படுத்தினார்கள். தரை முழுவதும் புழுதியாகவே இருந்தது. ஸ்கேன் எடுப்பதிலும் மிகவும் அலட்சியமாக நடந்து கொண்டார்கள். நோயாளிகளை ஸ்கேன் மிஷினில் படுக்க வைக்கும்போது நன்றாக படுத்துள்ளாரா என்று ஒரு முறைக்கு இரு முறையாக சரி பார்க்க வேண்டும். நோயாளியிடமும்  கேட்க வேண்டும். தவிர ஸ்கேன் செய்யும் போது, காது செவிடாகும்படியாக இரைச்சலிருக்கும். அதற்காக நோயாளிக்கு காதில் பஞ்சு வைக்க வேண்டும். அதுவும் வைப்பதில்லை. அதை அவர்களுக்கு சுட்டி காட்டலாமென நினைத்தேன். ஆனால் எனது மனைவி தடுத்து விட்டார்.   அப்பொழுது நினைத்து கொண்டேன். நோயாளி யாராவது மிஷினில் படுத்திருக்கும் போது, சரியான பராமரிப்பில்லாத்தால் கெட்டு விட்டால், நோயாளியின் பாடு அவ்வளவுதான். அதே போல ஓரிரு மாதங்களுக்குள் மிஷின் கெட்டுபோய் நான்கைந்து மணி நேரம் அவதி பட்டு தற்காலிகமாக சரி செய்துள்ளதாகவும், மிஷின் தயாரித்த டெக்னிசியன்கள் வெளிநாட்டிலிருந்து வந்து சரி செய்ய இருக்கிறார்கள் என செய்தியை படித்தேன். அப்படியென்றால் நிலமையை பார்த்துக் கொள்ளுங்களேன். ஆப்ரேசன் தியேட்டரில் எனக்கு நர்ஸ் ஊசி போட வந்தார். கண்ணை மூடிக்கொள், வலியிருக்காது என்றார். என்ன ஊசி என்றேன். மயக்க ஊசி என்றதும், எனக்கு பயமில்லை.இதற்கு முன்பாகவே ஆப்ரேசன் செய்துக் கொண்டுள்ளேன சொன்னதும், வலது முழங்கையில் இரத்தநாளத்தில் ஊசியை குத்தி மருந்தை உட்செலுத்தி சிரஞ்சை வெளியில் உருவுவதற்கு முன்பாகவே மயக்கத்தில் ஆழ்ந்து விட்டேன்.இந்த மேஜர் ஆப்ரேசன் முடிந்த ஓரிரு நாட்களில் ஆந்திர மகிளசபாவுக்கு அழைத்து வந்து விட்டார்கள். இந்த ஆப்ரேசன் செய்த சமயத்தில் நடந்த நிகழ்சிகளை முன்பே சொல்லியதை படித்திருப்பீர்களே. இதற்கு முன்பாகவே நடந்த மைனர் ஆப்ரேசனைப் பற்றி சொல்லாமல் விட்டுவிட்டேன். அதை பற்றி அடுத்து பார்போமா.....  

No comments: