Thursday, December 25, 2008

எனக்கும் ஆசை தான் - 27

ஒவ்வொரு வகுப்புக்கும் ஐந்தாறு மாணவர்களே இருந்ததால், நான்கு வகுப்பு மாணவர்களையும் ஒரே வகுப்பறையில் ஒரு ஆசிரியரே பாடம் நடத்துவார்கள். ஒரு வகுப்புக்கு பாடம் நடத்தும்போது, மற்றவர்கள் எழுதுவதோ மனப்பாடமோ செய்ய சொல்லியிருப்பார்கள். தவிர மருத்துவ சிகிச்சைக்கும் உடற்பயிற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம், ஒரு மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரம் வரை நீடிக்கும். அந்த நேரம் வகுப்பறையில் இருக்க முடியாது. எப்படியோ பாடங்களும் முடிந்துவிடும். காலாகாலத்தில் தேர்வுகளும் நடந்து, விடுமுறையும் விடப்படும். முடிவுகள் எவ்வாறாயினும் தண்டனைகள் எதுமில்லை. ஒரு வழியாய் நாலாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை அங்கு படித்தேன்.  ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, எனது இடதுகால் பாதம் வளைந்திருப்பதாய், நேராக்குவதற்கு ''மேஜர்'' ஆப்ரேசன் (அறுவை சிகிச்சை) நடைப்பேற்றது. இந்த சமயம் நடந்த சில நிகழ்வுகள் நினைவுக்கு வருகிறது. அறுவை சிகிச்சை நடந்து படுக்கையில் இருந்த சமயத்தில் எனது பாட்டி ( அம்மாவை பெற்றவர் ) இறைவனடி அடைந்து விட்டார். அது குறித்து கடிதம் எனக்கு வந்தது. அதை படித்த நான், அம்மா.. அம்மா... என்று பலமாக அழுதேன்.  நான் மட்டும் கட்டிலில் இருந்தேன். மற்றவர்கள் வகுப்புக்கு சென்றிருந்தார்கள். எனக்கு ஆறுதல் சொல்ல வந்த ஆயாக்களுக்கு பதிலே சொல்லாமல் அழுதுக் கொண்டிருந்தேன். என்னிடமிருந்து கடித்ததை வாங்கி படித்த பின், ஏன்டா, பாட்டி இறந்ததற்கு யாராவது அம்மாவென்று அழுவார்களா என்று கூறி திட்டினார்கள். அதற்குபின் பாட்டி.. பாட்டி என்று அழுததுடன், ஓரிரு நாட்களில் அந்த சோக நினைவுகளிலிருந்தும் மீண்டுவிட்டேன். அறுவை சிகிச்சை நடந்து படுக்கையிலிருந்த நேரத்தில் தேர்வு ஒன்று நடந்தது, எதனால் என்று ஞாபகமில்லை, தேர்வு விடைத்தாட்களில் ஒன்றும் எழுதாமல் வெற்றுதாளாக கொடுத்தேன் அல்லது சில எழுத்துக்களை மட்டும் கிறுக்கி கொடுத்தேன். படிக்கச் சொல்லியும் எழுதச் சொல்லியும் வீம்பாக மறுத்து விட்டேன். மற்றொன்று அறுவை சிகிச்சை காயம் ஆறுவதற்காக, காலுக்கு மாவுகட்டு போட்டிருந்தார்கள். அறுவை சிகிச்சையின் வலி மறைந்த சில நாட்களுக்கு பின், அந்த மாவுகட்டில் பூச்சி நுழைந்தது போல் ஒரே குறுகுறுப்பு, இதை பற்றி எனக்கு மருந்து கொடுக்க வரும் நர்ஸ்களிடமும், அட்டண்டர்களிடமும் தினமும் சொல்ல ஆரம்பித்தேன். அவர்களும் டாகடரிடம் சொன்னதாகவும், ஆப்ரேசன் புண் ஆறுவதால் அப்படி தான் இருக்கும், பொருத்துக்கொள் என்று சொன்னார்கள். அப்படியிருந்தும் பொருத்துக் கொள்ளமுடியாததால், ஆப்ரேசன் செய்த இடத்திலில்லை வேறிடத்திலென்றும் டாக்டரை பார்க்க வேண்டுமென்றும் நச்சரித்ததால், ஒரு வழியாக டாக்டரிடம் அழைத்து சென்றார்கள். என்னிடம் பேசியபின் டாக்டர் சொன்னது என்ன? முடிவு என்ன?....

No comments: