Monday, December 1, 2008

ஆந்திர மகிளசபா- நண்பர்கள்,-2

ஆந்திர மகிளசபா- நண்பர்கள்-2
நான் அங்கு சேர்ந்த போது 12 வயதுக்குள் உள்ளவர்களை மட்டுமே சேர்ப்பார்கள். அதிகபட்சம் 15 வயது வரை இருக்கலாம். சிலருக்கு சிறப்பு சலுகை இருந்தது. ஏனென்று தெரியாது. கேரளா.பால்ராஜ், திண்டுக்கல்.கனகசபை, தற்போது இறைவனடி அடைந்து விட்ட திரு.முத்துசாமி, திருமதி.கிருஷ்ணவேணி முத்துசாமி மற்றும் சிலர். பையன்கள் மேலே ஹால் மற்றும் 2 ரூம்களிலும், பெண்பிள்ளைகள் கீழே 2 ஹால்களிலும் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். என்னை விட வயதில் மூத்தவர்கள் ( பையன்கள் ) சிலர் சேர்ந்து ஒரு ''கேங்'' குழுவாக இருந்தார்கள். அவர்கள் சொல்படிதான் அனைத்து பையன்களும் நடக்க வேண்டும். பால்ராஜ், கனகசபை இவர்கள் தலைவர்கள் போலவும், துணையாக முத்துசாமியும் உதவியாளர்களாக மனோகரன் மற்றும் சிலருமிருந்தனர். நான் இவர்களை நினைத்து பயப்பட்டதுமில்லை, எதிர்க்க வேண்டுமென நினைத்ததுமில்லை. என்னுடன் பேசுபவர்கள் அனைவரிடமும் கிண்டலும் கேலியுமாக பொழுதை கழித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான் அவர்களை மதிக்காதது போலவும்,தனியாக குழு ஒன்று ஏற்படுத்துவது போலவும் அவர்களுக்கு எண்ணம் ஏற்பட்டு, ஒரு சமயம் என்னை அழைத்து, எங்களை மதிப்பதில்லை, எங்களுக்கு எதிராக குழு சேர்க்கிறாயா'' என மிரட்டலாக கேட்டார்கள்.எனக்கு அந்த எண்ணமும் இல்லை, அவசியமும் இல்லை, நீங்கள் என்னிடம் பேசியதில்லை,அதனால் உங்களிடம் நானும் பேசவில்லை என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்தவரை எங்களுக்குள் எந்த மோதலும் ஏற்பட்டதில்லை. பால்ராஜ்,கனகசபை, முத்துசாமி இம்முவரும் மருத்துவமனையிலிருந்து டிசார்ஜ் ஆனதும் மனோகரனும் அவர்களுடன் இருந்தவர்களும் என்னுடன் நண்பர்கள் ஆகிவிட்டார்கள்.
இவர்களைத் தவிர மேலும் சில நண்பர்களையும், நினைவில் நிற்கும் சிலரையும் அறிமுகப்படுத்த விரும்புகிறேன். முதலில் நண்பிகள் கீதா, மாலதி. இவர்கள் எனக்கு முன்பாகவே அங்கிருந்தவர்கள்.இதில் கீதா கொல்கத்தாவை சேர்ந்தவள். என் வகுப்பு தோழி. தமிழ் நன்றாக தெரியும். சில வருடங்கள் கழித்து ஆந்திர மகிளசபா மருத்துவமனைக்கு வந்த போது, அலுவலகத்தில் தயங்கி தயங்கி ஒரு வழியாக ரிஜிஸ்டரிலிருந்து அவள் விலாசத்தை வாங்கி விட்டேன். அவர்கள் அந்த விலாசத்திலிருப்பார்களா என்பது தெரியாது என்று கூறியதாலும், ஆங்கிலத்தில் கடிதம் எழுத சரிவர தெரியாததாலும் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக அந்த விலாசக்காகிதத்தை அவள் நினைவாக பாதுகாத்து வருகிறேன். அடுத்த நண்பி, நண்பர்கள் பற்றி அடுத்ததில் தொடர்கிறேனே.....

No comments: