Tuesday, September 25, 2007

நீங்களும் தெரிந்துக் கொள்ள.... !!!

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 24 ஆம் தேதி, உலக காது கேளாதோர் தினம் அனுசரிக்கப் படுகிறது. இதை ஒட்டி அப்பல்லோ இந்திர பிரஸ்தா மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ள தகவல்கள்,
1) சத்தமான இசை, நடன அரங்குகளின் காதைக்கிழிக்கும் சத்தம், அதிக சப்தம் ஏற்படுத்தும் இடத்தில் வேலை பார்ப்போர் காது கேளாமையால் பாதிக்கப் படுவது அதிகரித்து வருகிறது. பல்வேறு ஊனங்களில், திடிரென காது கேளாமை நோய் தான் உலகளவில் முதலிடத்தில் உள்ளது.
2) இலகம் முழுவதும் 50 கோடிப் பேர் காது கேளாமை நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட, சமீப காலமாக இளம் வயதிலேயே காது கேளாமை ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அதுவும் இளைஞர்கள் தான் பாதிக்கப் படுவதில் அதிகம் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
3)இந்தியாவில், ஆயிரத்தில் ஒன்று முதல் இரண்டு குழந்தைகள் பிறவியிலேயே காது கேளாமை ஊனத்துடன் பிறக்கின்றனர். இந்த விகிதம் மூன்று முதல் நான்கு வரை அதிகரிக்கும் அபாயமும் ஏற்ப்பட்டுள்ளது.
4)அதிக இரைச்சலால், காது கேளாமையால் பாதிக்கப் பட்டோரில் இந்தியாவில் மட்டும் 6.3 சதவீதம் பேர். தொலைப்பேசி மூலம் வழங்கப்படும் சேவைத்துறையில் ஈடுப்பட்டிருப்போர் தான் அதிக அளவில் திஇரென காது கேளாமைக்கு ஆளாகின்றனர். இளம் மாணவ,மாணவியரும் எந்த நேரமும் கைத்தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருப்பதும், அவர்களுக்கு காதுகேளாமை ஏற்ப்படுத்தி விடுகிறது. நீண்ட நேரம் அதிக சத்தத்துடன் இசைக்கேட்பதும், அவர்களுக்கு ஆபத்து என்று டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர்.

பின் குறிப்பு 1) இயற்கையாகவே உடல்நல குறைவினால் காது கேளாமை.
2)அதை உணராமலே, இளம் வயதில் நாள் முழுவதும், வானொலி, டேப்ரிகார்டரில் அதிக சத்தத்துடன் இசை கேட்டது.
3) காதைப் பிளக்கும், சத்தத்துடன் வெடிக்கும் வெடிகளையும் பயமின்றி, மிக அருகிலேயே,வைத்து வெடித்தது. போன்றவை இளம் வயதிலேயே காது கேளாமையால் நான் பாதிக்கப் பட்டுவிட்டேன். அனுபவபூர்வமாக,எனக்கு ஏற்பட்டதை இதன் மூலம் உங்களுக்கு தெரிவித்து எச்சரிக்க விரும்புகிறேன். சத்தத்தை குறையுங்கள், சந்தோசமாக வாழுங்கள்.

Monday, September 17, 2007

எனக்கும் !!!!!!!!!!-14

நான் ஆரம்பக்கல்வி தொடங்கியதே வீட்டில் தான். எங்கள் ஊருக்கு ஒட்டி இருக்கும் சிறு குன்றில் முருகன் சிலையை, நிறுவி வணங்க ஆரம்பித்ததால் முருகன் சாமியார் என அழைக்கப்பட்ட திரு.மாணிக்கம் என்பவர் தான் எனக்கு, மருத்துவத்தின் காரணத்தினால், வயது கூடிவிட்டதாலும், ஒரு வருடத்திலே ஒன்றாம் இரண்டாம் வகுப்புப் பாடங்களை, எங்கள் வீட்டிலேயே சொல்லிக் கொடுத்தார்.ஆசிரியர் திரு. மாணிக்கம் அவர்களை முருகன் வாத்தியார், முருகன் சாமியார் என்றே அழைப்போம். ஏனென்றால் எங்கள் அப்பா பெயரும் அதுவாகவே இருப்பதால்.

திரு.பங்காரு ஆசிரியரின் அறிவுறுத்தலின்படி மூன்றாம் வகுப்பை ஆரம்ப பள்ளியில் சேர்ந்து பயிலத் தொடங்கினேன். முன்றாம் வகுப்பை வீட்டில் படித்து விட்டு நான்காம் வகுப்பில், சட்ட விதிகளின்படி சேரமுடியாது என்பதால். இடப்பற்றாகுறையினால், எங்கள் கிராம பள்ளி இரண்டு இடங்களில் நடந்தது. எங்கள் வீட்டின் அருகிலேயே கிராமச்சாவடியில் முன்றாம் வகுப்பு நடந்தது. வகுப்பாசிரியராக திரு.பங்காரு அவர்கள் தான் இருந்தார். முதன்முதலாக் காளிப்பர் ()என்று அழைக்கப் படும் பூட்ஸூகளை இரண்டு கால்களுக்கு முழுமையாகவும்.உடல் முழுமைக்கும் இரும்புப் பட்டைகள் கொடுத்து தோலால் செய்யப்பட்ட கவசத்தை அணிந்துக் கொண்டு,
காந்தி தாத்தா கையில் உள்ள ஊன்றுக்கோளைப் போல, இரண்டு ஊன்றுக் கோள்களை,இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு, இயந்திர மனிதனைப்போல நடந்து பள்ளிக்குச் சென்றேன். சுயமாக உட்காரவோ, எழுந்து நிற்கவோ முடியாது. அதே போல நடக்கும் போது தவறி விழுந்து விட்டால், குறைந்தது மூன்று பேர் உதவியில்லாமல் எழுந்து நிற்க முடியாது. அடுத்ததாக நான்காம் வகுப்பு படிக்க மெயின் ஆரம்ப பள்ளிக்கு செல்ல நேர்ந்தது. பள்ளி சிறிது தூரமாக இருந்ததால், பூட்ஸ் போடும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி விழுந்தது. அப்பொழுது என்னை பள்ளிக்கு, என் பள்ளித் தோழர்களே, நான்கைந்து பேர், சிறிது தூரத்திற்கு ஒருவரென மாற்றிமாற்றி ,மூட்டைத் தூக்குவது போல தூக்கிக் கொண்டு ஓடுவார்கள். பள்ளிக்கு செல்லும் வழியில் எங்கள் கடையிருந்தத்தால், அவர்கள் அனைவருக்கும் பொட்டுக்கடலை @ வருகடலை, வெல்லம், வேர்கடலை, மிட்டாய்கள் ,பிஸ்கட்டுகள் என இலவசமாக வழங்கப்படும். தவிர காலையிலோ அல்லது மாலையிலோ உணவோ, சிற்றுண்டியோ கொடுப்பதும் உண்டு. அதனால் எப்பொழுதும் எனக்கு உதவ சிறு நன்பர் கூட்டம் இருந்துக் கொண்டே இருக்கும். என் புத்தகங்களை ஒருவர் உடனெடுத்து வர கிராம பள்ளி வாழ்க்கை நான்காம் வகுப்புடன் முடிந்தது. பிறகு சென்னை அடையாறில் ஆந்திர மகிள சபாவில் உள்ள ஈஸவர பிரசாத் தத்தாத்ரேயா மருத்துவமனையில் சிகிச்சையுடன் பள்ளி வாழ்க்கையும் தொடர்ந்தது. அது மேலே தொடரும்...

Saturday, September 8, 2007

ஆசை தான் !! - இதை உங்களுக்குச் சொல்ல.

ஆமாம் இன்று செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி தேசிய கண் தான நாள்.
நமது விழிகளால் அவர்கள் சிரிக்கட்டும்.
அவர்களைக் கண்டு நம் வாரிசுகள் மகிழட்டும்.
கண் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இது வெளியிடப்படுகிறது. கண் தானம் ஏன் செய்ய வேண்டும் ? கண் தானத்தினால் எப்படி உதவி செய்யமுடியும் ? செய்ய வேண்டியது என்ன ? என்பதைப் பற்றிய சிறிய விழிப்புணர்வு தகவல்தான் இது.

1) எப்படி உதவி செய்ய முடியும் ?
*************************

மரணமடைந்தவர்களுடைய கண்களை, அவர் இறந்த ஆறு மணிநேரத்திற்குள், கண் வங்கிகளைத் தொடர்புக் கொண்டு தானமாக அளிக்கலாம். அதற்காக காலம் தாழ்தாமல் எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் தொடர்புக் கொண்டு தானமாகக் கொடுங்கள்.

2) ஏன் கண் தானம் செய்ய வேண்டும் ?
*****************************

கார்னியா பார்வைக் கோளாறினால் பார்வையிழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்காது. கண் மாற்று அறுவை சிகிச்சை(ஆப்ரேஷன் ) மூலமாகத்தான், அவர்களுக்கு மீண்டும் பார்வைக் கிடைக்க சாத்தியமாகும். எனவே தான் நாம் கண் தானம் செய்யவேண்டும்.

3)கண் வங்கி என்பது என்ன ?
**********************

மரணமடைந்தவர்களுடைய கண்களை தானமாகப் பெற்று, மதிப்பீடு செய்து, முறைப்படி பாதுகாத்து, கார்னியா கண் மாற்று ஆப்ரேஷனுக்காக வினியோகிக்கும் அமைப்பே, கண் வங்கி என அழைக்கப்படுகிறது.

4) கார்னியா என்பது என்ன ?
**********************

நம் கண்களுக்கு முன்புறம், கருவிழிக்கும் முன்னால், ஒளி ஊடுருவிச் செல்லக் கூடிய, இரத்தக் குழாய்கள் எதுவுமில்லாத ஒரு மெல்லிய திசு கண்ணுக்கு ஒரு சன்னலைப் போல அமைந்துள்ளது. இதுவே கார்னியா என அழைக்கப்படுகிறது. தமிழில் 'விழி வெண்படலம்' எனலாம். இதை படித்தோ, கேட்டோ, அறிந்தோ இருப்பீர்கள்.

5) கார்னியா எவ்வாறு பாதிக்கப்படுகிறது ?
*****************************

தொற்றுநோய் கிருமிகள், விபத்துக்கள், ஊட்டச்சத்து குறைவு காரணமாக, கண் சிகிச்சை குறைப்பாடு காரணமாக, சிலருக்கு பிறவியிலேயோ அல்லது பரம்பரையாகவோ கார்னியாவானது பாதிக்கப்படுகிறது.

6) யார் கண் தானம் செய்யலாம் ?
*************************

ஒரு வயது நிரம்பிய குழந்தைகளிலிருந்து அதிகபட்ச வயது வரம்பின்றி அனைவரது கண்களும் தானமாகப் பெற்றுக் கொள்ளப்படும்.

7)உறவினர் செய்ய வேண்டியது என்ன ?
******************************

இறந்தவர்களின் கண்களை மூடி, இரண்டு கண்களின் மீதும் ஈரமான பஞ்சு அல்லது ஜஸ் கட்டிகளை, இமைகளின் மீது வைத்து கார்னியா ஈரப்பதமுடன் இருக்க உதவ வேண்டும். தலைக்கு நேராக, மேலாக சுழலும் மின்விசிறிகளை நிறுத்திவிடவேண்டும். தலையை (6) ஆறு அங்குல உயரத்திற்கு, இரண்டு தலையணைகளை வைத்து, உயர்த்தி வைக்க வேண்டும். முடிந்தால், மருத்துவர்கள் வரும்வரை, இரண்டு கண்களிலும் ஏதேனும் ஆண்டிபயாட்டிக் சொட்டு மருந்துகளை, குறிப்பிட்ட இடைவெளி நேரம் விட்டு போடலாம்

8) பொது மக்கள் அல்லது உறவினர் என்ற முறையில் கண்தான இயக்கத்திற்கு நாம் எவ்வாறு உதவி செய்வது ?
******************************

அ)நமக்கு தெரிந்து யாரேனும் மரணமடைந்தால், அவரது கண்களை தானம் செய்யும்படி அவரது நெருங்கிய உறவினரை ஊக்குவித்து, அவரது சம்மத்ததுடன் 044-28281919 மற்றும் 044-28271616 என்ற தொலைப்பேசி எண்களைத் தொடர்புக் கொண்டால், மருத்துவர்கள், மரணமடைந்தவரின் உடலிருக்கும் இடத்திற்கு வந்து கண்களை தானமாக பெற்றுக் கொள்வார்கள்.
ஆ)நம் கண்களையும், நமது குடும்பத்தார் கண்களையும் தானம் செய்ய உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம். நண்பர்களையும், தெரிந்தவர்களையும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளத் தூண்டலாம். நேரில் செல்லத் தேவையில்லாமலேயே, தொலைப்பேசி அல்லது இ-மெயில் மூலமாகவோ, நமது பெயர்,முகவரி,தொலைபேசி எண், இ-மெயில் முகவரி ஆகியவற்றைக் குறிப்பிட்டு பதிவு செய்துக் கொள்ளலாம்.
தொலைபேசி எண்கள் :: 044-28271616, 044-28271036.
இ-மெயில் முகவரி [e-mail]:: api@snmail.org,irungovel@gmail.com
இவ்வாறு சென்னை சங்கர நேத்ராலயா கண்வங்கி தலைவர் திரு.அ.போ.இருங்கோவேள்
கைதொலைபேசி எண் [mb.no:] 98408 21919 அவர்கள் தினமலர் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

நன்றி:: சென்னை தினமலர் . 06\ 09 \2007.

Monday, September 3, 2007

எனக்கும் !!!!!!!!!!-13

கோயம்புத்தூர் தெலுங்குபாளைய மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்கு திரும்பிய பிறகும் அந்த மருத்துவம் தொடர்ந்தது. அத்துடன் அரிசி கழுவிய கழுநீரை சூடாக்கி, இரண்டு தகர டின்களை ஒன்றுடன் ஒன்றிணைத்து ( எள்ளெண்ணை, தேங்காய் எண்ணை டின்களை,நீங்கள் பார்த்திருப்பீர்கள் ) அதில் என்னை நிற்க வைத்து, உடல் தாங்கும் அளவு சூடான கழுநீரை ஊற்றி, ஒரு மணி நேரம் நிற்க வைத்து விடுவார்கள். நிற்பதற்கு கால்களுக்கும் வலுவியின்றி, கைகளை ஊன்றிக் கொள்வதற்கோ, சாய்ந்துக் கொள்வதற்கோ வழியின்றி, தகர டின்னின் விழிம்புகளை கைகளால் பிடித்துக் கொண்டு, தடுமாறிக் கொண்டிருப்பேன் நிற்பதற்கு.எனக்கு முன்னால் யாரும் வரமாட்டார்கள், அப்படி வந்தாலும், என்னைப் பார்க்காதது போல் செல்வார்கள். ஏனென்றால் என்னை அதிலிருந்து தூக்கிவிடச் சொல்லி அழுவதால். அவர்களாக வந்து என்னை தூக்கிவிட்டால்தான். அதுவரை அனுபவித்துதான் ஆகவேண்டும்.பக்கத்து வீடுகளிலிருந்தும் என் தேவைக்காக கழுநீர் கொண்டு வந்து தினமும் கொடுப்பார்கள்.
இந்த சமயத்தில் மறக்க முடியாத நிகழ்ச்சியைச் சொல்ல வேண்டும். நமது பாரதத்தில் குழந்தைகள் அனைவராலும் 'மாமா' என அழைக்கப் பட்டவரும், படுகின்றவரும்,ரோஜா மலரால் உதாரணப்படுத்தபடுகின்றவரான, நமது முன்னால் பாரத பிரதமர் 'ஜவகர்லால் நேரு ' மறைவு செய்தியைக் கேட்டு, எங்கள் குடும்பத்தில் அனைவரும், வானொலி செய்திகளை தொடர்ந்து கேட்டவாறு, சோகத்தில் மூழ்கி கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்ததும், நானும் புரியாத நிலையில் அவர்களுடன் சேர்ந்து அழுத்தும் ஒருமறக்க முடியாத நிகழ்ச்சியாகும். அடுத்தது ஆரம்ப கல்வியைப் பற்றி...