Sunday, May 31, 2009

எனக்கும்-40

சென்ற பதிவிலே அறிவித்த மாணவபருவ விளையாட்டைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு பக்கம் மனது துடித்துக் கொண்டிருக்கிறது அல்லவா. . பக்கத்து ஊர்களிலிருந்து வருகின்ற மாணவ மாணவியர் மதிய உணவை பள்ளிக்கு எடுத்து வந்து விடுவார்கள். மதிய நேரத்தில் வீட்டுக்கு சென்று வர முடியாத்தால் நானும் மதிய உணவை பள்ளிக்கு எடுத்து வந்து விடுவேன். அன்று ஒரு மாணவரின் ( பெயர் வேண்டாம். ஏனெனில் தற்போது அவர் வங்கி மேலாளராக பணிப்புரிகிறார் ) மதிய உணவை, பெஞ்சில் பக்கத்தில் அமர்ந்திருந்த மாணவர் வீரகேசவன் ( அமரர் ஆகி விட்டார் ) நண்பனுக்கு தெரியாதவாறு,வகுப்பிலே பாடம் நடந்துக் கொண்டிருக்கின்ற பொழுதே எடுத்து சாப்பிட்டு விட்டார். சில பல மாணவர்கள் மற்ற மாணவர்களின் உணவை எடுத்து ருசி பார்ப்பதும், டிபன் பாக்ஸை எடுத்து மறைத்து வைப்பதும் அடிக்கடி நடக்கும் விளையாட்டாகும். ஏனோ யாரும் என்னிடம் அது போல் விளையாடமாட்டார்கள். நானும் யாருடையதையும் எடுத்து சாப்பிட மாட்டேன். பிறகு மதிய உணவு சாப்பிட டிபன்பாக்ஸ் திறக்கும்போது தான் அவனுக்கு தெரிந்தது. அன்று அவர் பசி பட்டினியோடு இருந்த கோபம், மறுநாள் பலி வாங்கும் படலம் அரங்கேறியது. அன்றும் வகுப்பு நடந்துக் கொண்டிருக்கின்ற வேளையிலே, உணவை பறிகொடுத்த மாணவர், தன் உணவை சாப்பிட்டு விட்ட மாணவரின் கையை பிடித்து தன் பக்கம் இழுக்க, ஓஹோ,, ஏதோ தரப்போகிறார் என நினைத்து, பாடம் நடத்து ஆசிரியரை பார்த்தவறே கையை நிட்ட, மற்றொரு கையையும் இழுத்து சேர்த்து வைக்க ஓ.. நிறைய ஏதோ கொடுக்க போகிறான் என நினைத்துக் கொண்டு, கைகளை சேர்த்து நீட்ட, நாடகம் அரங்கேறியது. அப்பொழுது மாணவர்கள் 11 ஆம் வகுப்பு வரை அரைக்கால் சட்டை ( ட்ரவுசர் ) தான் அணிந்து பள்ளிக்கு வர வேண்டும். அதுவும் காக்கி யூனிபாரம். அதனால் மிக வசதியாக அமர்ந்த நிலையிலேயே, அவனின் கைகளில் சிறுநீர் கழித்து விட்டான். பாடம் கவணித்துக் கொண்டே கைகளை நீட்டிய அவனுக்கு சில நொடி கழிந்த பின் தான் கையில் ஈரத்தன்மையை உணர்ந்து பார்க்கையில் தான், இவருடைய செயல் தெரிந்தது. திருடனுக்கு தேள் கொட்டிய கணக்காக, ஆசிரியருக்கு தெரியாமல் மறைக்கவும், கைகளிலிருக்கும் சிறுநீரை எங்கே கொட்டுவது என தெரியாமல் தடுமாறினான். பெஞ்சுக்கு கீழேயே ஊற்றி விட்டான். வகுப்பாசிரியர் வெளியேறியதும், விபரமறிந்த வகுப்பறையே சிரிப்பலையிலும், கேலியிலும் அதிர்ந்ததை சொல்லத் தேவையில்லை.


சென்னையிலிருந்து இங்கு வந்த பிறகு முதன்முறையாக என்னை அறியாமலே வம்பில் மாட்டிக் கொண்ட நிகழ்ச்சியை அடுத்து பார்ப்போமா!

Saturday, May 30, 2009

எனக்கும்- 39

சென்னையிலிருந்து ரயிலில் புறப்பட்ட நாங்கள், எங்கள் ஊரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பொம்மிடி (பொன்முடி- )யில் இறங்கி, ஊருக்கு பேருந்தில் பயணம் செய்து சென்றடைந்தோம். அப்பொழுது சென்னைக்கு நேரடியாக பஸ் வசதிக் கூட கிடையாது. பஸ் ஸடாபிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவிலுள்ள எங்கள் வீட்டிற்கு நடந்து செல்வதற்குள் நான்கு வருடங்கள் கழித்து முதல் முறையாக ஊருக்கு வருவதுடன், பூட்ஸ் போட்டுக் கொண்டு நடப்பதையும் ஆச்சிரியத்துடன் பார்த்துக் கொண்டு பள்ளி சிறுவர்களுடன் பெரியவர்கள் ஒரு கூட்டம் பின்னால் தொடர, நலம் விசாரிப்புகளுடன் வீட்டை அடைந்தேன்.


என் இரண்டாவது பெரிய சகோதரியான செல்வி.வசந்தகுமாரி அவர்கள், திருமதி.வசந்தா ஹரிகிருஷ்ணன் ஆனார்கள். அவர்களின் திருமண விஷேசத்துடன், என்னைப் பற்றிய விசாரிப்புகளும் உறவினர்களிடம் இணையாக இருந்தது. ஏழாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால், மீண்டும் எங்களூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பில் சேர்க்கப் பட்டேன். சுமார் அரை கிலோமீட்டர் தொலைவிலுள்ள பள்ளிக்கு வேலையாட்கள் மூலமாக சைக்கிளில் அமர வைத்து, பள்ளிக்கு சென்று வந்தேன். அப்பொழுது என் சிறிய சகோதரி ஜெகதீஸ்வரியின் வகுப்பு மாணவனானேன். நான் ஊனமுற்றவனாக இருப்பினும், மற்றவர்கள் என்னுடன் பழகுவதில் எந்தவொரு பாகுபாடும் காட்டவில்லை. பக்கத்து வீட்டு பெண்ணும், வகுப்பு தோழி யுமான ( என் சிறிய சகோதரியின் நண்பி ) திருமதி. கெஜலட்சுமி மகாதேவன் ( எ ) கெஜலட்சுமி ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில், ஒரு சமயம் தேர்வுக்காக இரவு நேரம் எங்கள் வீட்டு ஒரு அறையில் படித்துக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் திடிரென மின்சார துண்டித்தது. சிம்னி, அரிகேன் விளக்கு கொண்டு வர சென்ற எனது சகோதரி, வர சிறிது நேரமானதால், நானும் எனது தங்கையை நாடி வந்து விட்டேன். காரணம் யாரிடமும் அவ்வளவாக பழகவுமில்லை, தோழியுடன்இருட்டிலே தனியாக அமர்ந்துக் கொண்டு என்ன பேசுவதென்று தெரியாமலும், ஒரு வித கூச்ச உணர்வினாலும் அவளை தனியாக அறையிலே விட்டு விட்டு வந்து விட்டேன். அம்மாவும் சகோதரிகளும் அதற்காக திட்டினார்கள். அன்றிலிருந்து இன்று வரை என் இனிய தோழியாக இருக்கிறார். ஏழாம் வகுப்பு கழிந்தது.


எட்டாம் வகுப்பில் நடந்த சில நிகழ்வுகள் ஞாபகத்திலிருக்கிறது. ஒரு சமயம் வகுப்பு நடந்துக் கொண்டிருந்த போது எனக்கு பின் பெஞ்சில் அமர்ந்திருந்த கலைச்செல்வன் என்னும் மாணவர், என்னை கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டே இருந்தார். ஆசிரியரோ பாடம் நடத்திக் கொண்டிருந்த சமயமாதலால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எங்கே ஆசிரியரிடம் மட்டிக் கொண்டு விடுவோமோ என்று பயமாகவே இருந்தது. ஆனால் அதற்குள் வகுப்பு நேரம் முடிந்ததால் ஆசிரியர் வெளியே சென்று விட்டார். அதுதான் சமயமென்று உடனே காரியத்தில் இறங்கினேன். அவன் கையை பிடித்து கீழே இழுத்தவாறு அக்குளில் விரல்களை வைத்து மேலே தூக்கினேன். அதனால் ஏற்பட்ட வலியால் விட்டுவிட கதறினான். என்னிடம் கிச்சு கிச்சு மூட்டும் விளையாட்டுகள் விளையாடமாட்டேன் என்ற உறுதிமொழியை வாங்கிய பிறகே விடுவித்தேன்.
அது குங்ஃபூ போல விரல்களை பயன்படுத்துவது. எப்படி அதை அறிந்துக் கொண்டேன் என்பது ஞாபகத்திலில்லை.. அடுத்த நினைவு சிறிது அசிங்கமாகத்தான் தெரியும். ஆனாலும் மாணவப்பருவ விளையாட்டல்லவா !
தொடரும்...

எனக்கும்-38

அங்கிருந்து நேராக சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசன் அருகில் ஒரு லாட்ஜூக்கு வந்து இறங்கினோம். உள் நுளைந்ததுமே மாடியில் ரூம் என அப்பா கூற, படிகட்டுகள் அருகில் நான் செல்லவும், அதே சமயத்தில் மாடியிலிருந்து ஆஜானுபாகுவான உருவத்துடன் வெள்ளை மீசையை முருக்கியபடி, பார்ப்பதற்கு ஓய்வு பெற்ற ஒரு இராணுவ அதிகாரியைப் போல் இருந்த ............. , இறங்குவதற்காக
வந்து நிற்கவும் சரியாக இருந்தது. அவர் கீழே இறங்குவதற்காக நான் தயங்க, அங்கு வந்த அப்பாவோ, திருமணம் நடைப்பெற உள்ள இரண்டாவது சகோதரியின் மாமனார் என்று அறிமுகம் செய்து வைத்தார். அன்று அவர் படியில் நின்ற தோற்றம் இன்றும் என் மனத்தில் பசுமரத்தாணிப் போல் பதிந்துள்ளது. அவரைப் பற்றி மேலும் சில தகவல்களை இந்த நேரத்தில் சொல்லி விடுவது பொருத்தமாக இருக்கும். ஆந்திராகாரரான அவர் குடும்பத்துடன் தமிழ்நாடு, சேலம் மாவட்டம் சேலம் மாநகரில் குடியேறியவர்கள். அவர் குடும்ப சூழ்நிலையால் பள்ளிப்படிப்பற்றவர். ஆனாலும் அனுபவ அறிவினாலும் விடாமுயற்சியினாலும் ஆங்கில நாளிதழான ''ஹிந்து'' வை படிக்கக் கூடிய தினசரி வாசகர் ஆவார். அத்துடன் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம்,ஹிந்தி மொழிகளை சரளமாக பேசக்கூடியவர். ஆனால் உணர்ச்சி பூர்வமாகவோ, வேகமாகவோ பேசும்போது பல மொழிகளிலும் கலந்து பேசுவார். அது கேட்பவர்களுக்கு ஒரு பிரமிப்பை ஏற்படுத்தும். அன்றிரவு ரயிலில் ஊருக்கு பயணமானோம். அதன் பிறகு பூட்ஸ்கள் ரிப்பேர் செய்வதற்கும், புதிதாய் மற்றுவதற்கும் அப்பாவுடன் ஓரிரு முறைகள் வந்தேன். பிறகு என் தனி ராஜியம் தான். அதற்கு பிந்தைய சென்னை அனுபவங்கள் அவ்வப்போது தொடரும்.....

Friday, May 29, 2009

வந்த கனவு -1

எல்லோருக்கும் வரும் பகல் கனவுகளை சொல்லவில்லை. இரவுகனவுகள் பலவிதமாக வரும். அப்படி எனக்கும் ஒரு இரவில் குறைந்தது இரண்டு கனவுகளாவது வந்து விடும். பல கனவுகள் நம்பமுடியாததாகவும், விச்சித்திரமாகவும் அமைந்திருக்கும். சில சமயங்களில் முழு இரவு தூக்கத்தையும் கெடுத்ததுண்டு. சிறுவயதிலிருந்தே அந்த கனவுகளை எழுதி வைக்க வேண்டும் என நினைத்ததுண்டு. எழுத வேண்டுமென்றாலே மிகவும் சோம்பல் எனக்கு. அப்படி பாதித்த கனவுகளை ஓறீரு நாட்கள் நினைவில் வைத்துக் கொண்டிருந்து விட்டு பிறகு மறந்து விடுவேன். ஆனால் திடிரென ஒரு எண்ணம் தோன்றியது, வந்த கனவுகளை பதிவிலே பதித்தாலென்ன என. அதன் தாக்கமே இது.
பொருமையாக படித்து விட்டு திட்டுங்களேன். ஆரம்பிப்போமா அறுவையை.ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருக்கிறேன். ஆரம்பிக்கிறது கனவுத் திரைப்படம். காணுங்களேன் நீங்களும் என்னுடன் சேர்ந்து.

ஒரு கட்டடத்தினுள்ளே மாடியிலிருந்து மூன்று இளைஞர்கள் கீழே இறங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் இருவர் வெளிநாட்டவரைப் போலவும், மற்றோருவன் இந்திய நாட்டை சேர்ந்தவன் போலவும் இருக்கிறார்கள். இறங்கி வந்த அவர்களோ, வெளி வாசலிலிருந்தோ, மாடியிலிருந்தோ, அந்த கட்டடத்தினுள் செல்ல வருபவர்களை வழிமறித்து நிற்பதைப்போல் நிற்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்ததைப் போலவே, மடியிலிருந்து மூன்று மாணவிகள் இறங்கி வருகிறார்கள். இவர்கள் அந்த மாணவிகளிடம் ஏதோ கூற, மாணவிகளில் இருவர் மன்னிப்பு கேட்கும் விதமாக, அந்த வெளி நாட்டு மாணவர்களின் காலில் விழுந்து வணங்கவும், அவர்களும் மன்னித்ததின் அடையாளமாக ஒருவருக்கொருவர் ஜாடைக் காட்டி புன்முருவல் பூத்தபடி வெளிநாட்டு பாணியில் அந்த இரு மாணவியரையும் கட்டியணைத்து அவர்கள் காதில் ஏதோ முனுமுனுத்தபடி தட்டிக் கொடுத்து விடுவிக்கிறார்கள். ஆனால் மற்றோரு மாணவியோ நம் நாட்டு மாணவனின் காலில் விழாததுடன், இவள் அவனை கட்டியணைத்து புன்னகை செய்தபடி அவன் காதில் ஏதோ முனுமுனுக்கிறாள்.

அந்த மாணவிகள் உள்ளேசெல்ல, மாணவர்கள் வெளி வாசலை நோக்கி அடியெடுத்து வைக்க முற்படுகையில், இந்த நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்த ஒரு மாணவன் கேலி சிரிப்பு சிரிக்கிறான். அதை உணர்ந்த இந்த மாணவர்கள், அவனை முறைத்து பார்கிறார்கள். ஆனால் அவனோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் " சர்தான்... போங்கடா" என்கின்றான். வெளிநாட்டு மாணவர்களோ, தமிழ் தெரியாத நம் நாட்டு மாணவனிடம், உன்னைத்தான் கேலி செய்கிறான் என சீண்டிவிடுகிறார்கள்.. அவனும் இவனும் வாய் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். தமிழ் மாணவனோ, அந்த சமயத்தில் மாடியிலிருந்து இறங்கி வந்துக் கொண்டிருந்த என் மனைவியை காட்டி, அவர்களிடம் புகார் செய்துக் கொள் என கை காட்டி விடுகிறான். இவன் என் மனைவியிடம் சொல்ல முயற்சிக்கிறான். ஆனால் என் மனைவிக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாததாலும், கேட்கக் கூடிய பொருமையும் இல்லாததாலும், அங்கு தொங்கிக் கொண்டிருந்த போர்டை சைகையில் காட்டி விட்டு சென்று விடுகிறாள். இவ்வளவையும் பார்த்துக் கொண்டு ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்த நான், அவனை அருகில் அழைத்து விவரம் கேட்க, நான் ஆந்திராவை சேர்ந்தவன். என் பெயருக்கு முன்னாள் தாத்தா, அப்பா பெயர்களின் இன்சியலை சேர்த்து வைத்துள்ளேன். அவர்களை நான் மிகவும் மதிக்கிறேன். அவர்களைக் கிண்டல் செய்வது போல் " சர்தான், போங்கடா" என்கின்றான். நீங்கள் அவனை தண்டிக்க வேண்டும் என கேட்கிறான். அப்பொழுதுதான் அவன் ஆந்திராகாரனென எனக்கு தெரிகிறது. அதனால் அவனை சமாதானப்படுத்தும் விதத்தில் உங்கள் வீட்டு பெறியவர்களை அவன் கேவலப்படுத்தவில்லையென எனக்கு தெரிந்த
ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் சொல்லி சமாதனப்படுத்தினேன். இப்படி பேசிக்கொண்டே தலை குனிந்திருந்த நான், அந்த மாணவிகளிடம் என்ன பிரச்சனை என கேட்டவாரே தலைத் தூக்கிப் பார்த்தால், அவனும் அங்கில்லை, என் தூக்கமும் கலைந்தது.

இன்னொரு வித்தியாசமான கனவை அடுத்தில் பார்ப்போமா..

Monday, May 4, 2009

நாட்குறிப்பு - 2009 -2

சேலம் ஆத்துரில் வசிக்கின்ற எனது நான்காவது சகோதரி ஸ்ரீமதி.பிரபாவதி, தாய் மாமா மகன் திரு.ஜெனார்தனம் அவர்களின் மகனான திருநிறைச்செல்வன்.பிரசன்னகுமார் திருமணத்திற்கு ஜனவரி 30 ந் தேதி சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை ஆத்துர் சென்றடைந்து, பிப்ரவரி 2 ஆம் தேதி வந்து சேர்ந்தோம். இந்த பயணம் வித்தியாசமான,சிரமம் நிறைந்த பயணமாக அமைந்தது. எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து சிலமுறை பயணம் செய்திருக்கிறேன். ஆனால் அங்கு போனதும் காத்திருந்தது முதல் இடி, மூன்று நான்கு பிளாட்பாரங்களை தாண்டி ரயில் ஏழாவது பிளாட்பாரத்தில் நிற்பது. அடுத்ததாய் அங்கு போவதற்கு வீல்சேர் கிடைக்கவில்லை, ஒரு வழியாய் பேட்டரிகார் வந்தது, ஆஹா என மிக்க மகிழ்ச்சியுடன் ஏறி அமர்ந்து சென்றால், ரயில் இருக்குமிடத்திற்கு எதிர்திசையில், சரக்கு டிராலிகள் தண்டவாளங்களுக்கு குறுக்கே அடுத்தடுத்த பிளாட்பாரங்களுக்கு செல்லும் வழியாக நடந்து சென்று விடுங்களென பிளாட்பாரம் கடைசில் யாருமில்லா இடத்தில் இறக்கி விட்டு, தூரத்தில் ஏதோ ஒரு புள்ளியாக தெரிந்த வெளிச்சத்தை காட்டி, அதுதான் ரயிலென பேட்டரிகார் ஓட்டுனர் சொல்ல அதிர்ந்து விட்டேன். ஒரு 50 அடி, 100 அடி நடப்பதற்கு கூட சிரமமாக உள்ள நிலையில், சரக்கு ஏற்றி செல்லும் டிராலி கிடைத்தால்கூட போதும் ஏற்பாடு செய்ய கேட்டேன். இலவச பயண பேட்டரிகாருக்கு ஒரு துகையையும் பெற்று கொண்டு, பார்த்து அனுப்புகிறெனென சென்றவர்தான். நேரமோ கடந்துக் கொண்டிருக்க, டிராலியோ வீல்சேரோ வருவதற்குறிய எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை.

நாட்குறிப்பு - 2009 - 1

எதேதோ எப்படி எப்படியோ எழுத நினைக்கிறேன். அதனால் சில விசயங்கள் விடுபட்டு விடுமோ என்ற ஒரு கலக்கமும் தோன்றுகிறது. ஆமாம் பெரிய சரித்திர சம்பவங்கள், விடுபட்டு விட்டால் பிற்கால சந்ததியருக்கு முழுமையான சரித்திரம் தெரியாமல் போய்விடும்பார் என நீங்கள் கிண்டல் அடிப்பதும் உணர்கின்றேன். ஆனாலும் என்ன செய்ய, எழுதவும் துவங்கி விட்டேனே, உங்களை படிக்கவும் செய்து விட்டேன். எல்லாம் நம் தலையெழுத்து. சரி சொல்ல வந்ததுக்கு போவோமா? இப்பொழுதுதான் உயர்னிலைப்பள்ளி வாழ்க்கை நிலைக்கே எழுத வந்திருக்கிறேன். இதற்குபின் கல்லூரி, திருமணம், தொழில் இப்படி எழுத நீண்டுக் கொண்டே போகும் இந்த நேரத்தில், சமிபத்தில் நடக்கின்ற நிகழ்வுகள் மறந்து விடுமோ என்ற எண்ணம் எற்ப்பட்டதால், அவ்வப்போது இந்த வருட நிகழ்ச்சிகளையும் எழுத நினைத்துவிட்டேன்.


ஆஹா, 2009 ம் வருடம் பிறக்கப் போகிறது, டைரி எழுத ஆரம்பித்து விட வேண்டுமென நினைத்தபடி, புத்தாண்டும் பிறந்தது, பொங்கல் நெருங்குகிற நேரத்தில் நண்பர் சரவனன் ஒரு டைரியை பரிசளித்தார். அவருடைய நினைவு இருக்க, அதில் ஆட்டோகிராப் கேட்டேன். தேவையில்லையென அவர் மறுக்க, நானோ பிடிவாதமாய் இன்று இல்லாவிடினும் பிறகு எழுதி கொண்டுவாருங்களென, டைரியை திருப்பி அவரிடமே கொடுத்து அனுப்பி விட்டேன். ஒரு மாதமாகியும் கொடுக்காததால், நானே கேட்டேன். வேறோரு நண்பருக்கு கொடுத்து விட்டேனென அப்பொழுது சொன்னார். டைரியும், எழுத நினைத்த என்னுடைய எண்ணமும் போனது போனதுதான். ஒரு வழியாக இந்த பதிவு முலமாகவே அவ்வப்போது பதித்து விடுவது என முடிவு செய்ததின் ஆரம்பம்தான் இது.
பால் பொங்கல், சக்கரைப்பொங்கல், வடை,அத்திரசம்,பாயாசம் செய்து ஒரு நாள் பொங்கல் கொண்டாடினோம். சென்னை மாநகருக்கு குடிபெயருவதற்கு முன், எங்கள் வீட்டில் நான்கு நாட்களும் பால் பொங்கலும் சக்கரை பொங்கலும் செய்வார்கள். திகட்ட திகட்ட சாப்பிடுவோம். ஆனால் இங்கு குழந்தைகளின் உணவு விருப்பத்தில் மாற்றம் ஏற்பட்டு விட்டதால் ஒரு முறை மட்டுமே பொங்கலென ஆகிவிட்டது. முக்கியமான நிகழ்வுகளாக இந்த 2009 ஜனவரி கடைசியில் தான். அதை அடுத்ததில்.......