Saturday, May 30, 2009

எனக்கும்- 39

சென்னையிலிருந்து ரயிலில் புறப்பட்ட நாங்கள், எங்கள் ஊரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பொம்மிடி (பொன்முடி- )யில் இறங்கி, ஊருக்கு பேருந்தில் பயணம் செய்து சென்றடைந்தோம். அப்பொழுது சென்னைக்கு நேரடியாக பஸ் வசதிக் கூட கிடையாது. பஸ் ஸடாபிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவிலுள்ள எங்கள் வீட்டிற்கு நடந்து செல்வதற்குள் நான்கு வருடங்கள் கழித்து முதல் முறையாக ஊருக்கு வருவதுடன், பூட்ஸ் போட்டுக் கொண்டு நடப்பதையும் ஆச்சிரியத்துடன் பார்த்துக் கொண்டு பள்ளி சிறுவர்களுடன் பெரியவர்கள் ஒரு கூட்டம் பின்னால் தொடர, நலம் விசாரிப்புகளுடன் வீட்டை அடைந்தேன்.


என் இரண்டாவது பெரிய சகோதரியான செல்வி.வசந்தகுமாரி அவர்கள், திருமதி.வசந்தா ஹரிகிருஷ்ணன் ஆனார்கள். அவர்களின் திருமண விஷேசத்துடன், என்னைப் பற்றிய விசாரிப்புகளும் உறவினர்களிடம் இணையாக இருந்தது. ஏழாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால், மீண்டும் எங்களூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பில் சேர்க்கப் பட்டேன். சுமார் அரை கிலோமீட்டர் தொலைவிலுள்ள பள்ளிக்கு வேலையாட்கள் மூலமாக சைக்கிளில் அமர வைத்து, பள்ளிக்கு சென்று வந்தேன். அப்பொழுது என் சிறிய சகோதரி ஜெகதீஸ்வரியின் வகுப்பு மாணவனானேன். நான் ஊனமுற்றவனாக இருப்பினும், மற்றவர்கள் என்னுடன் பழகுவதில் எந்தவொரு பாகுபாடும் காட்டவில்லை. பக்கத்து வீட்டு பெண்ணும், வகுப்பு தோழி யுமான ( என் சிறிய சகோதரியின் நண்பி ) திருமதி. கெஜலட்சுமி மகாதேவன் ( எ ) கெஜலட்சுமி ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில், ஒரு சமயம் தேர்வுக்காக இரவு நேரம் எங்கள் வீட்டு ஒரு அறையில் படித்துக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் திடிரென மின்சார துண்டித்தது. சிம்னி, அரிகேன் விளக்கு கொண்டு வர சென்ற எனது சகோதரி, வர சிறிது நேரமானதால், நானும் எனது தங்கையை நாடி வந்து விட்டேன். காரணம் யாரிடமும் அவ்வளவாக பழகவுமில்லை, தோழியுடன்இருட்டிலே தனியாக அமர்ந்துக் கொண்டு என்ன பேசுவதென்று தெரியாமலும், ஒரு வித கூச்ச உணர்வினாலும் அவளை தனியாக அறையிலே விட்டு விட்டு வந்து விட்டேன். அம்மாவும் சகோதரிகளும் அதற்காக திட்டினார்கள். அன்றிலிருந்து இன்று வரை என் இனிய தோழியாக இருக்கிறார். ஏழாம் வகுப்பு கழிந்தது.


எட்டாம் வகுப்பில் நடந்த சில நிகழ்வுகள் ஞாபகத்திலிருக்கிறது. ஒரு சமயம் வகுப்பு நடந்துக் கொண்டிருந்த போது எனக்கு பின் பெஞ்சில் அமர்ந்திருந்த கலைச்செல்வன் என்னும் மாணவர், என்னை கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டே இருந்தார். ஆசிரியரோ பாடம் நடத்திக் கொண்டிருந்த சமயமாதலால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எங்கே ஆசிரியரிடம் மட்டிக் கொண்டு விடுவோமோ என்று பயமாகவே இருந்தது. ஆனால் அதற்குள் வகுப்பு நேரம் முடிந்ததால் ஆசிரியர் வெளியே சென்று விட்டார். அதுதான் சமயமென்று உடனே காரியத்தில் இறங்கினேன். அவன் கையை பிடித்து கீழே இழுத்தவாறு அக்குளில் விரல்களை வைத்து மேலே தூக்கினேன். அதனால் ஏற்பட்ட வலியால் விட்டுவிட கதறினான். என்னிடம் கிச்சு கிச்சு மூட்டும் விளையாட்டுகள் விளையாடமாட்டேன் என்ற உறுதிமொழியை வாங்கிய பிறகே விடுவித்தேன்.
அது குங்ஃபூ போல விரல்களை பயன்படுத்துவது. எப்படி அதை அறிந்துக் கொண்டேன் என்பது ஞாபகத்திலில்லை.. அடுத்த நினைவு சிறிது அசிங்கமாகத்தான் தெரியும். ஆனாலும் மாணவப்பருவ விளையாட்டல்லவா !
தொடரும்...

No comments: