Friday, October 9, 2009

நாட்குறிப்பு- 2009 - 9

தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்க மாநில அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலையில் ஊனமுற்றோருக்கான சந்திப்புக் கூட்டம் நடைப்பெறும். மாதத்தின் முதல் சனிக்கிழமை கூட்டத்தில் சமிப காலமாக கலந்துகொள்கிறேன். இம்முறை ஆகஸ்ட் முதல் வாரம் கலந்துக் கொள்ளமுடியாத நிலையேற்பட்டது. அதனால் ஜுலை மாதம் 25ந் தேதி மீண்டும் கூட்டத்தில் கலந்துக் கொள்ள சென்றேன். தலைவரின் அலுவலின் காரணமாக விரைவிலே சந்திப்புக் கூட்டத்தை முடித்துக் கொண்டு புறப்படவும், நான் அங்கு செல்லவும் சரியாக இருந்தது. ஆனால் மாநில சங்க பொறுப்பில் இருக்கும் திரு. நந்தகுமார் அவர்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்தேன். அவரும் 30/08/2009 அன்று நடைப்பெற உள்ள தனது மூத்தமகள் திருமண அழைப்பிதழை கொடுத்தார். திருமண நாள் ஒரு மாதத்திற்கு மேலாக இருந்ததால், அந்த நிகழ்ச்சிப் பற்றியே மறந்துவிட்டேன். மாநில சங்கத்தால் வெளியிடப்படுகின்ற "உதவிகரம்" ஆகஸ்ட் மாதத்துக்கு உரிய இதழ் ஆகஸ்ட் 29 ம் தேதி எனக்கு கிடைத்து. அதிலிருந்த திருமணத் தகவலைக் கண்டு ஒரு நிமிடம் தவறவிட்டு விட்டேனோ என அதிர்ந்து விட்டேன். அவசர அவசரமாக அன்று மாலை நடைப்பெற்ற திருமண வரவேற்பில் கலந்துக் கொண்டேன்.

செப்டம்பர் மாதத்திலும் குறிப்பிட்டு சொல்லும்படியாக நான்கு விழாக்களுக்கு சென்று வந்தேன். முதலில் எனது மனைவியின் சகோதரி முறையாகின்ற உறவினர் திருமதி.லக்ஷ்மி ரங்கநாதன் W/O. Y.K. ரங்கநாதன் செட்டியார் அவர்களின் மூத்தமகன் முரளி (எ) செந்தில்குமாரின் 02/09/2009 ந் தேதி திருச்சியில் நடைப்பெற்ற திருமணத்திற்கு எம் குடும்பத்தின் சார்பாக எனது மனைவி சென்றுவர, 06/09/2009 அன்று மாலை சென்னையில் நடைப்பெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் குடும்பத்தில் அனைவரும் கலந்துக் கொண்டோம்.

இங்கு 02/09/2009 ந் தேதி சென்னையில் திருவாண்மியூரில் நடந்த வீட்டு உரிமையாளரின் சிறிய மகளின் திருமண வரவேற்புக்கு ( ரிசப்சனுக்கு) நான் சென்று வந்தேன். என்னால் மேடை ஏறமுடியாததால், வீட்டு ஒனரிடமே அன்பளிப்பை அளித்துவிட்டு வந்துவிட்டேன். விழாவில் என் அருகில் அமர்ந்த வீட்டு ஒனரின் 85 வயதான அப்பாவிடம் சில வார்த்தைகள் பேச வாய்ப்பு கிடைத்தது.

அடுத்ததாய் தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்க மாநிலத் தலைவர். திரு.T.A.P.வரதகுட்டி அவர்களின் சஷ்டியப்தபூர்த்தி (60 வது பிறந்தநாள்) விழா 20/09/2009 அன்று நடைப்பெற உள்ளதாகவும், அழைப்பிதழ் இ-மெயிலில் அனுப்பியிருப்பதாகவும், கலந்துக் கொள்ளச்சொல்லி தொலைப்பேசியில் அழைப்பு விடுத்தபடி கலந்துக் கொண்டதுடன் , விழா தம்பதிகளுக்கு பொன்னாடை அணிவித்து எனது மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டேன்.

அதுசமயம் நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்கள் சிலரையும் சந்திக்கும் வாய்ப்பும் புதியவர்கள் சிலரின் அறிமுகமும் கிடைத்தது. நண்பர் சாமுவேல் ஜெயசிங், டாக்டர்.திருமதி.சந்திரா சாய்நாத் அவர்களிடமும் பழைய நினைவுகளை பகிர்ந்துக் கொண்டது மகிழ்வான தருணமாகும். செப்டம்பர் மாத நிகழ்ச்சிகள் அடுத்ததிலும் தொடருகிறது......

Thursday, October 8, 2009

நாட்குறிப்பு 2009 - 8

அடுத்தது ஆகஸ்ட் மாதம் 19ந் தேதி ஞாயிறுகிழமை வாராந்திர இலவச விளம்பர இதழ் ஒன்றில் தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பும், திரைபட சங்கமும் இணைந்து ஊனமுற்றவர்களின் திறமைகளை கண்டறியும், ஊக்குவிக்கும் விழா 18ந் தேதி சனிக்கிழமை ஆரம்பித்து ஞாயிறுகிழமை மாலை வரை தொடர்வதாக செய்தி வந்திருந்தது. அந்த இதழ் மதியம்தான் எனக்கு கிடைத்திருந்தாலும், அந்த விழா நான் இருந்தபகுதியில் நடந்துக் கொண்டிருந்ததால் கலந்துக்கொண்டேன்.

அதில் சின்னதிரை, பெரியதிரைகளை சேர்ந்த தயாரிப்பு, நடிப்பு, பாடல், கதை, இசையமைப்பு மற்றும் அந்த துறைகளை சார்ந்த பலர் கலந்துக் கொண்டார்கள். நான் என்னுடைய எண்ணங்களையும் முன்பாகவே எழுதி வைத்திருந்த கவிதைகள் சிலவற்றையும் மேடையில் ஏறி பேச வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கு சென்றிருந்ததால், சினிமா கவிதை எழுதும் போட்டியில் கலந்துக் கொள்ளாமல் தவிர்த்து விட்டேன். அதனால் விழா தொகுப்பாளர், மேடை ஏற வேண்டும் என்ற என்னை தவிர்த்துக் கொண்டிருந்தார். ஆனாலும் நான் விடாமல்.மேடைக்கருகில் கண்ணுக்கு படும்படியாக அமர்ந்துக் கொண்டு அவரை சைகை காட்டி நச்சரித்துக் கொண்டேயிருந்தேன். ஒரு வழியாக விழா முடிவுறும் நேரத்தில் கடைசியாக என்னை அனுமதித்தார். இவர் போட்டியாளர் இல்லை. மேடையேறி பேசவேண்டுமென்று விடாபிடியாக இருப்பதால், இவருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது என அறிவித்து விட்டே அனுமதித்தார். அதே சமயம் நான் பேச ஆரம்பிக்கும் போதே நிகழ்ச்சி முடிவுக்கென சிறப்பு அழைப்பாளர்களை மேடைக்கு அழைத்து விட்டார்.

நான் அதைப்பற்றி கவலையே கொள்ளாமல், என் கருத்தை இயம்பவும், மேடைப்பேச்சுக்கு என்னை தயார் செய்துக் கொள்ளும் ஒரு வாய்ப்புக் கிடைத்தேயென பயன்படுத்திக் கொண்டேன். அது போலவே ஓரிரு சிறிய பேச்சு தவறுகளுடன் மனதிருப்தியுடன் முடித்தேன். சிறப்பு அழைப்பாளர்களும் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவிக்க மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. பரிசுகள் வழங்கிக் கொண்டிருக்கும் நேரத்திலேயே மழை ஆரம்பமாகி விட்டது. அதனால் அங்கிருந்த அனைவரும் விழா நடந்த பள்ளிகட்டடத்திலேயே உள்ளே ஒதுங்கினார்கள். ஆனால் உள்ளே செல்வதற்கான படி உயரமானதாக இருந்ததால், நான் மேடையிலேயே நனையாதபடி ஒதுங்கி அமர்ந்து விட்டேன். ஆதனால் சிறப்பு அழைப்பாளர்களுடன் நெருக்கமான அறிமுகம் செய்துக் கொள்ள கிடைத்த வாய்ப்பை தவறவிட்டு விட்டேன். அதை பிறகு உணர்ந்த நான் வருத்தப்பட்டேன். இளம் கதாநாயகனாக திரையுலகில் தற்போது உள்ள ''முகில்'' என்ற நடிகர் அவராகவே முன்வந்து வாழ்த்து தெரிவித்ததும், விடைப்பெறும்போது சொல்லிச் சென்றதும் மரியாதைக்குறியதாக இருந்தது.

அடுத்ததில்.....

நாட்குறிப்பு 2009 - 7






அம்மாவின் நினைவுநாள் ஆங்கில நாட்காட்டிப்படி ஜூன் 30ஆம் தேதி வந்தாலும் திதி படி ஜூலைமாதம் 4ஆம் தேதிதான் எங்கள் வழக்கப்படி அனுஷ்டித்தோம். 11ந் தேதி இரவு சுமார் 11 மணி அளவில் போன் வந்தது, 12ந் தேதி ஞாயிறு கிழமை 10 மணி அளவில் ஊனமுற்றோருக்கான ஒரு சங்கம் சென்னை கிண்டியில் துவக்கப்பட உள்ளது. அவசியம் கலந்துக் கொண்டு கருத்துக்களைக் கூற கேட்டுக் கொண்டார். அதன்படி காலை 9.30 மணிக்கு புறப்பட்டு 15 நிமிடத்தில் சென்று சேரவேண்டியவன். இடம் கண்டு பிடிக்கமுடியாமல் 2 மணிநேர தாமதமாக 11.30 மணிக்கு சென்றடைந்தேன்.

ஓ.. அழைத்ததற்கு மரியாதையில்லாதது போல் இவ்வளவு தாமதமாகி விட்டதே என சஞ்சலத்துடன் அங்கே சென்றால்!, கூட்டம் நடைப்பெறுவதற்குறிய எந்த அறிகுறியுமில்லாமல் இருந்ததைக் கண்டு, நிகழ்ச்சி முடிந்து விட்டது போல் உள்ளது. அதனால் தான் இங்கு யாரும் இல்லை போலிருக்கிறது, அல்லது இடம் மாறி வந்து விட்டோமோ என்ற சந்தேகத்துடனே, அங்குதான் கூட்டம் தாமதமாக நடைப்பெறயிருப்பதையும், பொருப்பாளர்களே இன்னும் வராத்தைப் பற்றியும், அங்கிருந்த ஓரிருவரிடம் கேட்டு அறிந்து கொண்டேன். சிறிது நேரத்தில் கூட்டமும் ஆரம்பமானது. ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துக் கொண்டோம். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஓரிரு கவிதைகளை கூறி என் எண்ணங்களை பகிர்ந்துக் கொண்டேன். அங்கு சமபந்தி போஜனம் முடித்துக் கொண்டு கிளம்பினேன்.