Sunday, June 30, 2013

உரசிய பெண் பேய்! - மறக்கவியலா நினைவுகள்.






ஆட்கள் நடமாட்டமில்லாத தனிமையான இரவு நேரம் எம் விருப்பமென முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். யான் கல்லூரி வகுப்பில் தேர்ச்சி பெற சேலத்தில் தங்கும் விடுதியில் தாங்கியபடி ஒரு டுடோரியலில் (Tutorial ) படித்து / படிப்பது போல் பாவித்து / வந்தேன், எம் தாயிடம் செய்து கொடுத்த சத்தியத்தினால் திரைப்படங்களுக்கு செல்வதை தவிர்த்து வந்தேன். ஒரு நாள் நள்ளிரவு தாண்டிய நேரத்தில் தூக்கமின்றி தவித்த யான், விடுதியிலிருந்து வெளியேறி, வண்டி போக்குவரத்து, ஆட்கள் நடமாட்டமில்லாமல் வெறிச்சோடியிருந்த,  விளக்கொளி மட்டும் பரவியிருந்த, அமைதியான நேரான அந்த சாலையில் வரும் ஒரு வளைவு வரை மென்நடை போட்டபடி சென்று விட்டு, திரும்பி  சாலையின் மற்றொரு முடிவு வளைவுக்கு சென்று கொண்டிருந்தபோது, ஏதோ ஓர் உணர்வு எமை தாக்க சடாரென பின்பக்கம் திரும்பினேன்.

அப்பொழுது எம் பின்னே மிக நெருக்கமான நிலையில் ஒரு பெண்ணுருவம் இருப்பதையும், யான் திரும்பியபோது இரண்டு ஊன்றுகோல்களை பிடித்து நடந்துக் கொண்டிருந்த எம் கைகளில் வலது முட்டி ஒரு மென்மையான பகுதியில் மோதியதையும் உணர்ந்தேன். ஆனால் அப்பெண்ணோ எந்த ஒரு சலனமும் இல்லாமல் எமைத் தாண்டி சென்று விட, யாரிந்த பெண், இவ்வளவு நெருக்கமாக எமை பின்தொடர காரணமென்ன? எவ்வளவு தூரமாக தொடர்கிறாள்? எப்படி உணராமல் போனேன்? எப்பகுதியில் எமது முழங்கை  மோதியிருக்கும்? என சில நொடிகள் சிந்தனையில் உறைந்து விட்டு, அட! அந்த பெண் எங்கே செல்கிறாள் என தெரிந்துக் கொள்வோமே என  விரைந்தேன் அந்த வளைவுக்கு. அந்த சாலையும் நேரான சாலைதான்.  விளக்குகளோ குறைவு. சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்தேன். பார்வைக்கு எட்டியவரை அந்த பெண் கண்ணுக்கு புலப்படவில்லை. மீண்டும் பார்க்கவும் இல்லை.




No comments: