Thursday, July 16, 2009

எனக்கும் -41

வாலிபத்தில் ஒரு கண்டம்

என் புத்தகப்பையையும், டிபன்பாக்ஸையும் யாராவது என் வீட்டில் கொடுத்து விடுவார்கள். நான் நடந்து சென்று வர ஆரம்பித்திருந்தேன். ஒரு நாள் பள்ளி முடிந்ததும்  எனது வகுப்பு தோழனும் உறவினனுமான ஜெயக்குமார் என்பவனும் நானும் பேசியபடியே வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தோம்.

அப்பொழுது  '' என்னம்மா ராணி, பொன்னான மேனி ஆளவட்டம் போட வந்ததோ '' என்ற சினிமாபாடலை  சில வரிகள் பாடினான். அங்குதான் ஆரம்பித்து வினை எங்கள் வகுப்பு மாணவி விஜயராணி () ராணி பின்னால் வந்து கொண்டிருந்திருக்கிறாள். அவன் அவளை நோக்கித்தான் பாடினானா, இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் அவளோ, அவளை நோக்கித்தான் கேலி செய்து பாடியதாக சண்டைப்போட்டாள். அவன் இல்லையென மறுத்து விட்டு, இடையிலேயே அவன் வீட்டுக்கு சென்று விட்டான். அவன் வீட்டு வழியாகவும்  எங்கள் வீட்டிற்கு செல்லலாம், இருப்பினும் அப்பொழுது அந்த வழியாக போகும் பழக்கம் இல்லை. எப்பொழுதும் செல்லும் நேர்வழியாகவே வீட்டிற்கு தனியாக சென்றுக் கொண்டிருந்தேன். அவள் வீட்டைத்தாண்டி தான் செல்ல வேண்டும். .

அவள் அவள் அம்மாவிடம் புகார் செய்து விட, என் வரவை எதிர் நோக்கி அவர்கள் வீட்டு வாசலில் காத்திருந்த அவள் அம்மாவோ, நீ நல்ல பையனல்லவா, என் மகளை கேலி செய்து இப்படி பாட்டு பாடலாமா கேட்க, என்னடாயிது நாம் பாடியது போல் மாட்டிக் கொண்டோமே உள்ளுக்குள் நடுங்க ஆரம்பித்து விட்டேன். நான் படவில்லையென மறுக்க, அவன் இவளை நோக்கிதானே பாடினான் என கேட்டார்கள். நான் ரோட்டை கவனித்து நடந்துக் கொண்டிருந்ததால் எனக்கு தெரியாது. என்னுடன் எப்பொழுதும் யாராவது உடன் வருவார்கள். அதுபோல் இன்று இவன் வந்தான் என்று கூறியபின் அவனை பிறகு பார்த்துக் கொள்கிறேன் என கூறி என்னை விட்டுவிட்டார்கள்.


இருப்பினும் இது பிரச்சனை ஆகப்போகிறது, நம்மை மீண்டும் விசாரிக்கப் போகிறார்கள் என சில நாட்கள் தயக்கத்திலேயே இருந்தேன். ஆனால்      ,,,,,,,,, பயந்ததைப்போல் பள்ளியிலோ மற்றும் எங்கும் அவள் பிரச்சனை எழுப்பாத்தால், பெரிய கண்டத்திலிருந்து தப்பியதைப்போல் உணர்ந்தேன். பின்னாளில் அவள் தம்பி பசுவராஜன் () பசுவன் எங்கள் நண்பர்கள் ஒருவனானான்

Tuesday, July 14, 2009

நாட்குறிப்பு 2009 - 6

இந்த ஜூன் மாதத்தில் இரண்டு மகிழ்ச்சியான நிகழ்சிகள்.
ஒன்று, தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்கத்தினால் வெளியிடப்படுகின்ற '' உதவிகரம்'' ஜூன் மாத இதழில், சிறு கால இடைவெளிக்கு பின் நடைப்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் நான் அனுபவித்த சிரமங்கள் ''வாசகர் வாய்ஸ்'' என்ற பகுதியில் ஒரு செய்தியும், என் புகைப்படத்துடன் மற்றொரு தகவலும் வந்ததாகும்..
அடுத்தது கடைசி வாரம் 26 ந் தேதி, எனது பெரிய மகள் பணிபுரிகின்ற அலுவலகத்தில் குடும்ப விழா ( Family Day ) என்ற பெயரில் ஏற்பாடு செய்து அழைப்பு விடுத்திருந்தார்கள். நாங்கள் குடும்பத்துடன் கலந்துக் கொண்டோம். அங்கு பணிபுரிபவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒரு கவிதையை எழுதி எடுத்து சென்றிருந்தேன். நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் அனுமதிப் பெற்று, '' நீங்களும் பிரம்மாக்களே '' என்ற தலைப்பில் கவிதையை வாசித்தேன். மீண்டும் ஒரு பொது இடத்தில் என் கவிதையை வாசித்து, அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது மகிழ்வாக இருந்தது. கவிதை வாசித்த வகையில் இது மூன்றாவது பொதுக்களம் ஆகும்.
இதில் மற்றொரு சிறப்பான தகவல் என்னவென்றால், என் மகளுடன் பணியாற்றுகின்றவர்கள், உன் அப்பா கவிதையில் நன்றாக வாழ்த்தினார் என அவளிடம் பாராட்ட, அதில் அவள் மகிழ்ந்தது தான், மேலும் மகிழ்ச்சியை எனக்கு தந்தது. அதில் கலந்துக் கொண்டதற்கு குடும்ப புகைப்படமும், கவிதை வாசித்தப் போது எடுத்த புகைப்படமும், டேபிளில் வைப்பதற்கு ஏற்றவாறு லேமினேசன் செய்து கொடுத்து கௌரவித்தார்கள். கவிதையை வாசிக்க வேண்டும் என்ற உங்கள் ஆவலுக்காக, இதோ கீழே.

நீங்களும் பிரம்மாக்களே!....

கருக் கொள்ளும்
எண்ணங்கள்,
உருக் கொள்ளும்
செயல் விசையாய்.
கற்று தேர்ந்த
அறிஞர்களாய்,
உயிர் கொடுப்பீர்
தெய்வங்களாய்.
இயக்கும் விசை
பலவற்றை,
இணைத்து வைப்பீர்
எண் கொண்டே.
சிந்தனையில்
மனமிருக்கும்,
சிக்கல்களாய்
செயலிருக்கும்.
முடிவினிலே
பொருளிருக்கும்,
சிலை வடிவாய்
அது இருக்கும்.
அத்தனையும்
கொலுவிருக்கும்,
கைவண்ணம்
அதிலிருக்கும்.
செயலிலே செம்மையாக
செயல்படும் உங்களைத்தான்,
வெற்றி மீது
வெற்றி பெற்று,
வெல்க என்றே
வாழத்தினேன் இன்றே!.

Monday, July 13, 2009

நாட்குறிப்பு - 2009 - 5

சுமார் 3 மாத காலமாக பார்லிமெண்ட் ( பாராளுமன்றம்) தேர்தலை ஒட்டி ஓயாமல் ஒலித்த அரசியல் வசவுகள் முடிவடைந்தது. ஓட்டுக்காக, பணமும் மதுவும் ஆற்று வெள்ளமாய் பல இடங்களில் பெருக்கெடுத்தோட, இன்று ( \04\2009 ) ஓட்டு பதிவு நடந்தது. அட நானும் இந்த நாட்டின் குடிமகன் அல்லவா!!!!!!!!!!, கண்டுக்கொள்ள ஆட்களின்றி (பணம் கொடுக்கத்தாங்க!, சீரியஸா எடுத்துக்காதிங்க) ஓட்டுப் போட என் மயில் வாகனத்தில் பறந்துச் (விரைந்து) சென்றேன். இதுக்கு மேல நாடந்த கூத்துக்களை கேளுங்களேன். பூத்துக்கு அருகில் வண்டியுடன் போக வாக்குசாவடிக்கு உள்ளே நுழையப்போனேன். அந்த நேரம் சடாருனு ஒரு போலீஸ்காரர் வழிமறிச்சு எங்கே போறிங்கன்னு கேட்டாரு!. அட! என்னடாயிது ஓட்டுச்சாவடிக்கு இந்த நேரத்திலே எதுக்கு வருவாங்க? இருந்தாலும் பதில் சொன்னேங்க, ஓட்டு போடன்னு. அப்படினா, கேட்டுக்கு வெளியிலே வண்டிய நிறுத்திட்டு நடந்து போனாரு. ஐயா, என்னால நடக்கமுடியாததாலே எப்பவுமே பூத்து வரைக்கும் வண்டியில போய்தான் ஓட்டு போடுவேன். வழிவுடுங்கனு சொன்னத்துக்கு, இப்படியே நில்லுங்க, கேட்டுட்டு வரேனு திரும்ப, வெயிலா இருக்குதேனு வண்டிய நிழலில நிறுத்தக் கூட அனுமதிக்க மறுத்தாருங்க. என்னடா குத்தம் செஞ்சவங்கள நடத்தரமாதிரி நடத்தராரேனு, ஐயா உங்க வேலைக்காக நீங்க வெயிலிலே நிக்கிறிங்க, நான எதுக்கு இப்ப நிக்கனுமுனு கோபம் வந்து கேட்டுபுட்டேன். இன்னொரு போலீஸ்காரரு என்னோட ஓட்டர் சிலிப்பை பார்த்துட்டு, வேற வாக்குசாவடிக்கு நானு போகனுமுனு சொல்லி வழிச்சொன்னாரு. அப்போழுதான் போக வேண்டிய வாக்குசாவடியை தவறவிட்டு வேறு வாக்குசாவடிக்கு மோப்பம் புடிச்சு போய்ட்டேனு தெரிஞ்சது. திருப்பு அந்தபக்கமுனு, அங்கபோனா வண்டிய உள்ள உடமுடியாதுனு அதே கதை கதைங்க. நானா உடுவேன். ஐயா, ஓட்டு போடறது என் உரிமை, அதுக்கு உதவறது உங்க கடமையினு, அடுக்குமொழியிலே சொல்லி, யார் உங்க மேலதிகாரியோ, அவர கூப்பிடுங்க, கேட்டுட்டு போறேனு விடாம சொன்ன நேரத்திலே, கேட்டுக்கு உள்ளயிருந்து வந்த ஒரு போலீஸ்காரரு, கேட்டுலே போலீஸை சமாதானப்படுத்தி, என்ன உள்ள விட்டாரு. ஒரு வழியா ஓட்டு குத்தி என் கடமைய முடிச்சிடு, ஜெயிச்சு வரவங்க நமக்கு செய்யவேண்டிய கடமைய சரியா செய்வாங்களானு ஏக்கத்தோடு வீட்டுக்கு வந்துட்டனேங்க.

நாட்குறிப்பு 2009 - 4

பிப்ரவரி, மார்ச் மாதங்கள் குறிப்பிட்டு சொல்லும்படியான செய்திகளின்றி கழிந்தது. இந்த ஏப்ரல் மாதம் நினைவில் நிற்கக் கூடியதாய் அமைந்தது. 13ந் தேதி எங்கள் அப்பாவிற்கு பிறந்தநாள். 88 வருடங்கள் கழித்து, 89வது வயதிற்குள் நுழைந்திருக்கிறார். அவர் விருப்பப்படி அவர் உடற்பயிற்சி செய்து வரும் ஜெராசிம் சென்டரில் கேக் வெட்டியும், அங்கு பணியாற்றுகின்ற உதவியாளர்களுக்கு பரிசுப்பொருள் அளித்தும் பிறந்தநாள் கொண்டாடினார். பரிசுப்பொருட்களை நான் எடுத்து சென்றுக்கொண்டிருந்த போது, மாற்றுதிறனுடைய ஒரு இளஞி தன் தாயாரை வண்டியின் பின் அமர வைத்தப்படி எனக்கு முன்னாள் விரைந்துக் கொண்டிருந்தாள். அதை கண்ட நான் விரைந்து சென்று குறிக்கிட்டு நிறுத்தி ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டோம். கணனி வேலையிழந்து பணிக்காக அலைந்துக் கொண்டிருப்பதுடன், வேலை வாய்ப்பு இருப்பின் வேலைக்கிடைக்க உதவும்படியும், உறவினர் திருமணத்திற்காக மண்டபம் தேடி சென்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்க, மண்டபத்திற்கு வழி காட்டி விட்டு, வேலை கிடைக்க முடிந்த வரை உதவுவதாக கூறி விடைப்பெற்றுக் கொண்டேன். இதை தொடர்ந்து ஐந்தாறு நாட்கள் நான் பலரிடம் சொல்லி வேலை கிடைக்க ஏற்பாடு செய்துக் கொண்டிருக்க, அவ்வப்பொது அந்த இளஞியும் கைப்பேசியில் பேசியும், குறுஞ்செய்திகள் அனுப்பியும் (எஸ்.எம்.எஸ்) தேவையான தகவல்களை என்னிடம் பெற்றுக் கொண்டிருந்தார். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை நடைப்பெறும் எங்கள் உடல் ஊனமுற்றோர் சங்க சந்திப்புக் கூட்டத்திற்கு செல்ல அறிவுறித்திருந்தேன். அதற்கு என்னையும் துணைக்கு வரச்சொல்லி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். ஆனால் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த எனது பெரிய தம்பி, அன்று பயணம் மேற்கொள்ளவிருந்ததால், உதவிக்கு வரயியலாத நிலையை எடுத்து சொல்ல ஓரிரு முறை முயன்றும் தொலைப்பேசி இணைப்பு கிடைக்கவில்லை. அன்றைய சனிக்கிழமை இரவு சுமார் 9 மணி அளவில் ஒரு கணனி வேலைக்கு ஏற்பாடு செய்திருப்பது பற்றியும், உடன் வரமுடியாமைக்கு வருத்தம் தெரிவிக்கவும் அந்த இளஞியின் கைப்பேசிக்கு தொடர்பு கொண்டபோது, அவள் இல்லை, வேலை கிடைத்து விட்டது, இனிமேல் இந்த எண்ணிற்கு தொடர்புக் கொள்ள வேண்டாம் அறிமுகமில்லாத யாரோ ஒருவர் பேசுவது போல இணைப்பை துண்டித்து விட்டார். வேலை வாங்கிதர கேட்டு இன்று காலை (18\04\09)
வரை தொடர்பு கொண்டவருக்கு, என்ன ஆனது?
உதவி செய்ய நினைத்து மூக்கு அறுப்பட்ட நிலையாக அதிர்ந்து விட்டேன். இந்த விசயத்தை ஜிரணித்துக் கொள்ள சில நாட்கள் ஆகிவிட்டது. இந்த மாதம் இவ்வளவு தான். அடுத்து என்ன?

Friday, July 10, 2009

நாட்குறிப்பு 2009 - 3

ஒரு வழியாக பேபி வீல்சேர் வந்தது. அதில் மிகவும் குறுகி அமர்ந்து என் ஊன்று கோல்களையும் கையில் பிடித்துக் கொண்டு தண்டவாளங்களையும் பிளாட்பாரங்களிலிருந்த மேடு பள்ளங்களை கடந்து நான் ஏற வேண்டிய ரயில் பெட்டியை வந்தடைந்தேன். என்னை கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் தள்ளி வந்த இரயில் நிலைய ஊழியரை சும்மா அனுப்ப மனம் வரவில்லை. பணம் கொடுத்ததற்கு வேண்டாமென மறுத்தவருக்கும் வலுகட்டாயமாக கையில் திணித்து அனுப்பி வைத்தோம். என்ன குரங்கு மனமடா! இலவசமாக செய்ய வேண்டியதற்கு யாராவது பணம் கேட்டால் கோபம் வருகிறது. வேண்டாமென்பவருக்கு கையில் திணித்து அனுப்புகிறோம். விடியற்காலை 4,30 மணி சுமாருக்கு ஆத்தூர் சென்றடைந்துவிடுமென்றதால், இரவு 12 மணிக்கு மேல் டிக்கெட் பரிசோதகர் வந்து சென்ற பிறகு எங்கே தூக்கம். அறைகுறை தான். அன்று திருமணநாளாக இருந்ததால், நான் இருந்த பெட்டியில் பாதி பேர் ஆத்தூரில் இறங்குபவர்களாக இருந்தார்கள். இரயில் சரியாக எத்தனை மணிக்கு சேருமென தெரியாததால், ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே இரயில் வாசற்படியில் திபுதிபுவென கூட்டம். ரயில் தாமதமானதாலும், சிறிய நிலையங்களில் போதுமான வெளிச்சத்துடன் பெயர் பலகைகள் இல்லாததாலும் தடுமாறினார்கள். ஊர் வந்ததும், பிளாட்பாரத்தின் கடைசியில் நாங்கள் இறங்கவேண்டிய பெட்டி இருந்தது. முன்பே தகவல் கொடுத்திருந்ததால் அழைத்து செல்ல ஏற்பாடு செய்திருந்தார்கள். நாங்கள் செல்வதற்கு முதல் நாள் தான் ஆத்தூர் லன்யஸ் கிளப் மூலமாக வீல்சேர் ஒன்றை இரயில் நிலையத்திற்கு நன்கொடை அளித்திருந்ததால் எனக்கு மிக்க வசதியாக அமைந்தது.சென்னைக்கு திரும்பும்போது நாங்கள் ஏறவேண்டிய இரயில் பெட்டி நிற்குமிடத்தை கேட்டு அந்த இடத்தில் ( பிளாட்பாரத்தில் ) இறங்கிக் கொண்டு வீல்சேரை வேறு யாருக்காவது தேவைப்படுமென அனுப்பி வைத்து விட்டேன். மீண்டும் சோதனை இரயில் இரண்டு பெட்டிகளுக்கு மேல் முன்னோக்கி சென்று விட்டதுடன் பிளாட்பாரம் தாழ்வாக இருந்ததால் கீழ்யிருந்து இரண்டு மூன்று பேர் தூக்கிவிட, பெட்டியினுள்ளிருந்து இரண்டு மூன்று பேர் மூட்டைப் போல் என்னை இழுத்து ஏற்ற விட்டார்கள். சென்னை வந்ததும் பழைய நிலைபடியே எக்மோர் இரயில் நிலையத்திலிருந்து வீடு வந்தடைந்தேன். அடுத்தது மறக்க முடியா ஏப்ரல் மாத நிகழ்சியை அடுத்து பார்ப்போமா...

Thursday, July 9, 2009

வந்த கனவு - 5

சமிபத்தில் சில கனவுகள் வித்தியாசமாகவும் கோர்வையாகவும் அமைதியான நீரோட்டம் போலவும் அமைந்திருந்தது. ஆனால் விழிப்பு வந்ததும், அந்த கனவுகளை ஒரு முறைக்கு இரு முறையாக கனவுகளை நினைவு படுத்தி மனத்தில் பதித்துக் கொள்ளாத்துடன் நடைமுறை நிகழ்வுகளில் மனம் இலயத்து விட்டதாலும் சிறிது நேரத்தில் கனவுகள் நினைவிலிருந்து அகன்று விட்டது. பிறகு ஞாபகத்திற்கு கொண்டு வர முயன்றும், ஞாபகத்திற்கு வரவில்லை. ஆனால் அதே சமயத்தில் ஒரு நிகழ்வு மட்டும் நினைவில் ஆழப் பதிந்து விட்டது. ஆதாவது ஒரு கனவு மனத்தை மிகவும் சலனப்படுத்தியது. அதனால் விழிப்பு வந்தது, ஆனாலும் உடல் மிக்க சோர்வடைந்திருந்ததால், உடனே மீண்டும் உறக்கத்தில் கண் அயர்ந்தது. ஆனால் ஒரிரு நிமிடங்களில் வந்த கனவின் ஆரம்பமே நடக்க ஆரம்பித்த நான் தரையில் வழுக்கி விழுவதைப்போல் கனவு வர, என் உடல் தூக்கிப் போட துடித்தெழுந்தேன். பிறகென்ன தூக்கமும் கலைந்தது. இது எதனால் ஏற்பட்டது என சிந்தனையில் ஆழ்ந்தேன். விடையோ இல்லை. அடுத்ததைப் பார்ப்போமா வித்தியாசமாய்.....