Tuesday, July 14, 2009

நாட்குறிப்பு 2009 - 6

இந்த ஜூன் மாதத்தில் இரண்டு மகிழ்ச்சியான நிகழ்சிகள்.
ஒன்று, தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்கத்தினால் வெளியிடப்படுகின்ற '' உதவிகரம்'' ஜூன் மாத இதழில், சிறு கால இடைவெளிக்கு பின் நடைப்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் நான் அனுபவித்த சிரமங்கள் ''வாசகர் வாய்ஸ்'' என்ற பகுதியில் ஒரு செய்தியும், என் புகைப்படத்துடன் மற்றொரு தகவலும் வந்ததாகும்..
அடுத்தது கடைசி வாரம் 26 ந் தேதி, எனது பெரிய மகள் பணிபுரிகின்ற அலுவலகத்தில் குடும்ப விழா ( Family Day ) என்ற பெயரில் ஏற்பாடு செய்து அழைப்பு விடுத்திருந்தார்கள். நாங்கள் குடும்பத்துடன் கலந்துக் கொண்டோம். அங்கு பணிபுரிபவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒரு கவிதையை எழுதி எடுத்து சென்றிருந்தேன். நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் அனுமதிப் பெற்று, '' நீங்களும் பிரம்மாக்களே '' என்ற தலைப்பில் கவிதையை வாசித்தேன். மீண்டும் ஒரு பொது இடத்தில் என் கவிதையை வாசித்து, அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது மகிழ்வாக இருந்தது. கவிதை வாசித்த வகையில் இது மூன்றாவது பொதுக்களம் ஆகும்.
இதில் மற்றொரு சிறப்பான தகவல் என்னவென்றால், என் மகளுடன் பணியாற்றுகின்றவர்கள், உன் அப்பா கவிதையில் நன்றாக வாழ்த்தினார் என அவளிடம் பாராட்ட, அதில் அவள் மகிழ்ந்தது தான், மேலும் மகிழ்ச்சியை எனக்கு தந்தது. அதில் கலந்துக் கொண்டதற்கு குடும்ப புகைப்படமும், கவிதை வாசித்தப் போது எடுத்த புகைப்படமும், டேபிளில் வைப்பதற்கு ஏற்றவாறு லேமினேசன் செய்து கொடுத்து கௌரவித்தார்கள். கவிதையை வாசிக்க வேண்டும் என்ற உங்கள் ஆவலுக்காக, இதோ கீழே.

நீங்களும் பிரம்மாக்களே!....

கருக் கொள்ளும்
எண்ணங்கள்,
உருக் கொள்ளும்
செயல் விசையாய்.
கற்று தேர்ந்த
அறிஞர்களாய்,
உயிர் கொடுப்பீர்
தெய்வங்களாய்.
இயக்கும் விசை
பலவற்றை,
இணைத்து வைப்பீர்
எண் கொண்டே.
சிந்தனையில்
மனமிருக்கும்,
சிக்கல்களாய்
செயலிருக்கும்.
முடிவினிலே
பொருளிருக்கும்,
சிலை வடிவாய்
அது இருக்கும்.
அத்தனையும்
கொலுவிருக்கும்,
கைவண்ணம்
அதிலிருக்கும்.
செயலிலே செம்மையாக
செயல்படும் உங்களைத்தான்,
வெற்றி மீது
வெற்றி பெற்று,
வெல்க என்றே
வாழத்தினேன் இன்றே!.

No comments: