Wednesday, November 11, 2009

நாட்குறிப்பு 2009 -13

அத்துடன் இந்த தீபாவளி திருநாள் இரவும் மனவருத்தத்தை அளிக்கும் நிகழ்வு ஒன்று நடந்தது. செப்டம்பர் மாதம் திருமணமான உறவினரின் மகனும், மருமகளும் தலை திபாவளிக்கு செல்லமுடியாத சூழ்நிலை, அதனால் எங்கள் வீட்டிற்கு, அவர்கள் அனைவரையும் அழைத்து மதிய விருந்து அளித்தோம். அதனால் மாலையில் விரைவாக பட்டாசுகளை வெடிக்க செல்லமுடியவில்லை. ஆகவே 8 மணிக்கு மேல் பட்டாசுகளை வெடிக்க மொட்டைமாடிக்கு ( மேல்தளத்துக்கு) சென்றோம். அப்போது இரண்டாம் தளத்தில் குடியிருந்து வரும் குஜராத்தி வீட்டு புதுமண தம்பதிகளும் மேல்தளத்திலிருந்து, அவர்கள் வீட்டிற்கு செல்ல படிக்கட்டில் இறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு, மேல்தளத்திற்கு சென்றோம். அங்கும் வீட்டு உரிமையாளரின் புதுமண தம்பதிகளான சிறிய மகளும் மருமகனும், பெரிய மகளும் பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தார்கள்.மாடிப்பகுதியோ விரிந்திருக்க, அவர்களை தாண்டி செல்லமுடியாததால், இடம் இருந்த முற்பகுதிலேயே, 89 வயதான எனது தந்தையை சேரில் அமர வைத்துவிட்டு நான் தரையில் அமர்ந்திருக்க,நாங்களும் பட்டாசுகளை வெடிக்க ஆரம்பித்தோம். டபுள்சாட் எனப்படும் இரட்டை வெடியை, நிற்க வைத்து விடாமல் படுக்கை வசத்திலும், மற்ற சில வெடிகளை எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத வகையில் எங்களுக்கு அருகிலேயே வைத்ததைக் கண்டு, சிறிது தள்ளி வெடிகளை வெடிக்க கேட்டுக் கொண்டும், அதை பொருட்படுத்தாதவர்களாய், எங்களுக்கு அருகிலேயே வெடித்தார்கள். எனது தந்தைக்கும், எனக்கும் மற்றும் வெடிக்க வைத்திருந்த பட்டாசுகளுக்கு அருகிலேயே தீப்பொறிகள் வருவதை கூறி மீண்டும் அறிவுறுத்தியும், அவர்கள் செவிமடுக்காததை கண்ட நாங்கள், விபத்துக்கான வாய்ப்புகள் அதிகமாகவும் பாதுகாப்பு மிகவும் குறைவாக இருப்பதை உணர்ந்ததும், உடனடியாக எங்கள் வீட்டிற்கு திரும்பிவிட்டோம். இரவு பத்து மணிக்கு மேல் குஜராத்தி வீட்டுகாரர்கள் பட்டாசு வெடிக்க மாடிக்கு அழைத்தார்கள். அப்பொழுது தான் தெரிந்தது, குஜராத்தி வீட்டு புதுமண தம்பதிகளும் இடையிலேயே எங்களைப் போலவே பாதிக்கப்பட்டார்கள் என்பது. எங்களுக்கு சோர்வாக இருப்பதை கூறி, அவர்களுடன் கலந்துக் கொள்ளமுடியாமைக்கு வருத்தத்தை தெரிவித்துக் கொண்டோம். நம் மகிழ்வுக்காக, மற்றவர்களின் சந்தோஷத்தை பறிக்கலாமா?. விழா என்பதே அனைவரும் மகிழ்வதற்குதானே!. எப்பொழுது இதை உணர்வார்களோ. வரிசையாக இந்த நிகழ்வுகள் அனைத்தும் எனக்கு மிக்கவருத்தத்தை ஏற்படுத்தியது. அடுத்ததில் தொடரும் நவம்பர் மாத நினைவுகள்........

01/11/2009.

Tuesday, November 10, 2009

நாட்குறிப்பு 2009 -12

மேற்கு மாம்பழம் அரிமா சங்க விழாவை முடித்துக் கொண்டு, தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கத்தில் பணியாற்றுகின்ற செல்வி அவர்களின் அழைப்பின்பேரில், அவர்களையும் அழைத்துக் கொண்டு "வாய்ஸ் ஆப் நந்தினி" என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் அடையார் யூத் ஹாஸ்டல் விழா அரங்கத்தில் நடைப்பெற்ற "காந்தி ஜெயந்தி " விழாவுக்கு சென்று விட்டு, அங்கிருந்து அடையார் காது கேளாதோர் பள்ளிக்கு சென்று விட்டு, அப்படியே கோட்டூரில் இயங்கிவரும் தமிழ்நாடு ஊனமுற்றோர் கூட்டமைப்பின் தலைமை அலுவலகத்துக்கு முதல்முறையாக சென்றேன். அதன் தலைவர் திரு.சிதம்பரநாதன் அவர்கள், நான் தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கத்தில் இணைந்தபோதிலிருந்தே அறிமுகமானவர். அப்பொழுது அவர் மதுரை மாவட்ட சங்க தலைவராக செயல்பட்டு வந்தார். நான் அங்கு சென்றிருந்த சமயம் அவர், மதுரையில் அன்று "கலைவிழி" அமைப்பின் சார்பில் கதை, இசை, நடிப்பு, இயக்கம் என மாற்றுதிறனாளிகளால் மட்டும் உருவாக்கப்படும் "மா" திரைப்பட துவக்க விழாவுக்கு சென்றிருந்தார். இந்த சங்கத்தின் மாநில செயலாளராக செயல் பட்டு வரும் திரு.சிம்மசந்திரன் அவர்களை சங்கத்தில் சந்தித்து சில மணித்துளிகள் எண்ணங்களை பகிர்ந்துக் கொண்டோம். சங்கத்தின் செயல்பாடுகளை விவரித்தார். சங்கத்தால் வெளியிடப்படுகின்ற "மாற்றுத்திறன் மக்களின் குரல்'' இதழை வழங்கியதுடன், இச்சங்கத்தின் அறக்கட்டளையும், அட்வென்ட் டிசைன்ஸ் நிறுவனமும் இனைந்து 10 ந் தேதி நடத்தவிருந்த ஊனமுற்றோருக்கான சுயம்வர நிகழ்ச்சிக்கான அழைப்பிதழையும் கொடுத்ததுடன், 4.5 ந் தேதிகளில் தென்னக இரயில்வேயால் நடக்கவிருந்த '' இரயில் பயணங்களில் ஊனமுற்றவர்கான குறைகள்'' குறித்த கருத்தறியும் கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் கலந்துக்கொள்ள முடியவில்லை. அதே போல் இந்த அக்டோபர் மாதம் 14,15 தேதிகளில் டெல்லியில் இந்திய இரயில்வேயால் நடைப்பெறவிருந்த அகில இந்திய ஊனமுற்றவர்களின் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துக் கொள்ளவிருந்த கூட்டத்திற்கும் அழைப்பு அச்சமயத்தில் விடுத்தார். ஆனால அதற்குரிய நடைமுறை தகவல் பரிமாற்றங்கள் முழுமையாக இல்லாததால், அவர்களுடன் இனைந்து செல்லமுடியவில்லை.கலந்துக்கொள்ள முடியாமல்போனது மனவருத்தத்தை அளித்த நிகழ்வுகள்.


அடுத்ததில்............


நாட்குறிப்பு 2009 - 11

இந்த மாதத்தில் ஒரு வருத்தமான விசயமும் நடந்தது. வாடகையில் மற்றம் செய்யக்கூடாது என, இரண்டு வருட ஒப்பந்தம் செய்து, நான் தற்போது வாடகைக்கு குடியிருக்கும் வீட்டிற்கு வந்து ஒரு வருடம் கூட முடியவில்லை, அதற்குள் வீட்டின் ஓனராக இருக்கின்ற பெண்மணி, வாடகையை 25 சதவீதம் உயர்த்தி தரவேண்டும் அல்லது வீட்டை காலிசெய்து விடுங்களென எச்சரிக்கை விடுத்தார். நானோ ஒப்பந்தத்தை நினையூட்ட, அவரோ பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. எனவே ஒப்பந்தத்தைப் பற்றி பேசவேண்டாம், விருப்பம் இல்லையேல் காலி செய்துவிடுங்கள் என கண்டிப்பாக கூற மீண்டும் வீட்டை தேடுவது தற்போதய சுழ்நிலையில் மிகவும் கடினமாக தோன்றியதால், அவரிடம் 500 ரூபாய் உயர்த்திதருவதாக மன்றாடி, பின் ஒருவழியாக 1000 ரூபாய் உயர்த்தி பெற்றுக் கொள்ள சம்மதித்து சென்றார். இது எங்களுக்கிருந்த பொருளாதார சுழ்நிலையில் மிக்க சிரமத்தை உணர்ந்தோம். ஆனால் தற்போதைக்கு ஏற்றுக் கொண்டாலும், கூடிய விரைவில் குத்தகைக்கோ (Lease), குறைந்த வாடகைக்கோ வீடு பார்த்து சென்று விடுவதென முடிவு செய்துக் கொண்டேன். ஏனென்றால் இந்த குடியிருப்பு கட்டடித்திலேயே நன்கு வீடுகளும், வேறொரு இடத்தில் பல குடியிருப்புகள் கொண்ட முழு உரிமையுடைய கட்டடமும் ( ) , வீட்டில் இரு மகள்களும் உயர் பணிகளில் இருக்க, இத்தனை பெருத்த வருமானம் இருந்த சூழ்நிலையிலும் விலை உயர்வை காரணம் காட்டி, ஒப்பந்தத்தையும் நிராகரித்து, அவர் என்னைமரியாதை குறைவாக பேசி டார்ச்சர் செய்தது, கணவனை இழந்த பெண்மணியான, அவர் மேல் இருந்த பெரும் மதிப்பு அந்த நொடியில் பாழ்பட்டுவிட்டது.


மேற்கு மாம்பழம் அரிமா சங்கத்தை சேர்ந்த திரு. மாம்பழம் முருகன் அவர்களின் அழைப்பின் பேரில், 27/09/2009 அன்று மாலை சென்னை மாநகராட்சி சைதாப்பேட்டை மண்டலம் எண்: 9 ன் ஊருந்து ஓட்டுனர்கள் சங்கத்தின் சார்பில் ஆயுதபூசையை முன்னிட்டு நடைப்பெற்ற ஊனமுற்றோருக்கு உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துக் கொண்டேன்.ஆனால் விழா துவங்குவதற்கு முன்பாகவே பெருங்காற்றுடன் பெரும்மழையும் துவங்கி விட்டதால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்சிகள் சீர்குலைந்தது, ஒரு வழியாக ஒரு கட்டடத்தின் போர்டிகோவில் உதவிகள் மட்டும் வழங்கப்பட்டது. சென்னை மாநகர மேயர்.திரு.சுப்பிரமணியம் அவர்களும், மாநகர கமிஷ்னர் திரு.லக்கானி அவர்களும் மற்றும் சில சிறப்பு அழைப்பாளர்களும் தனித்தனியாக வந்து உதவிகளை வழங்கி மரியாதை பெற்று சென்றார்கள். மேடைப் பேச்சுக்கான வாய்ப்பு கிடைத்தும் மழையினால் பறிபோனது. அதற்கான வாய்ப்பு விரைவிலேயே மீண்டும் கிடைத்தது. எதில்? அது மகாத்மா காந்தி பிறந்த நாள் விழாவில்...

திரு.மாம்பழம் முருகன் அவர்கள் என்னுடைய மேடைப் பேச்சுக்கான ஏக்கத்தை புரிந்துக் கொண்டு, மேற்கு மாம்பழத்தில், மேற்கு மாம்பழம் அரிமா சங்கத்தின் சார்பில் அக்டோபர் 2 ந் தேதி மகாத்மா காந்தி அவர்களின் 141 ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு உதவிகள் வழங்கும் விழாவில் பேச வாய்ப்பளித்தார். அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன். ஆனால் ஒன்று மேடைப்பேச்சு போல் அல்லாமல், ஏதோ பாடம் பார்த்து படிப்பது போல என்னுடைய பேச்சு இருந்தது என்பதையும், மேலும் மேடைப்பேச்சுக்கு தகுந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டுமென்பதையும் அறிந்துக் கொண்டேன். அந்த உரையை http://aambalmalar.blogspot.com/ வலைப்பதிவில் ஐந்து பகுதிகளாக பதிவு செய்துள்ளேன்.அடுத்ததில்....

நாட்குறிப்பு 2009 -10

சென்ற வருடம் சாலை விபத்தில் முளைசாவினால் மரணமடைந்த ஹிதேந்திரனின் உடல் உறுப்புகள், அவனின் பெற்றோர்களான டாக்டர் தம்பதிகளால் உடலுறுப்புதானம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வு நடைப்பெற்று ஒரு வருடம் ஆவதை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்க மாவட்டத் தலைவரும், திருத்துறைப்பூண்டியில் சைக்கிள் ரிப்பேர் கடை வைத்து சுயத்தொழில் செய்து வருகின்ற திரு. ஜெகதீசன், தன் கால் ஊனமுற்றுள்ள நிலையிலும் உடலுருப்புதான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தினால், அவரின் சங்க உறுப்பினர்கள் இருவருடன் பல மாவட்டங்களின் வழியாக, விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தபடி 15 நாட்களில் சைக்களிலேயே பயணம் மேற்கொண்டு சென்னையை வந்தடைந்தனர். அவர்களை சிறப்பிக்கும் விதமாகவும், உடல் உறுப்புதான விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் பொருட்டும் தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் பட்டதாரிகள் சங்கத்தின் மூலம் நடைப்பெற்ற விழாவிற்கு, இச்சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு ஊனமுற்றோர் நலவாரியத்தின் உறுப்பினருமான திரு.தங்கம் அவர்களின் அழைப்பின் பேரில் கலந்துக்கொண்டேன்.

இது எதற்காக நடைபெறுகின்ற விழா என அறியாமலே கலந்துக்கொண்டேன். எனென்றால் விழா நடைப்பெறுவதற்கு முதல் நாளன்று இரவு எனக்கு போன் செய்து, சென்னை தியாகராயநகர் வெங்கடநாராயணா ரோடிலுள்ள பள்ளி வளாக அரங்கத்தில் விழா நடைப்பெறுகிறது, தவறாமல் கலந்துக்கொள்ளுங்கள் என திரு. தங்கம் அவர்களின் அழைப்பையேற்று, அங்கு சென்ற பிறகுதான் விழா குறித்த விபரமே தெரிந்தது, இதை குறித்து பேசுவதற்கு ஏற்றவகையில் நானும் குறிப்புகள் எடுத்து வந்திருப்பேன் அல்லவா என நண்பர் என்ற முறையில் கேட்டேன். அதற்கு அவரோ திடிரென்று தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்க மாநில தலைவர் திரு. T.A.P. வரதகுட்டி அவர்களின் அறிவுரைப் பேரில் மூன்று நாட்களில் அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டது என சமாதானம் கூறினார். தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்க மாநில தலைவர் திரு. T.A.P. வரதகுட்டி அவர்கள் தலைமையில் சமுக சேவையில் ஈடுபாடு உடையவரும் திரைப்பட நடிகருமான திரு. ராகவா லாரன்ஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், எக்ஸ்னோரா இண்டேர்நேசனல் தொண்டு நிறுவனத்தின் ஸ்தாபகர் திரு.நிர்மல், தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலசங்க செயலாளர் திரு.சிம்மசந்திரன் மற்றும் பலர் கலந்துக்கொள்ள விழா நடைப்பெற்று முடிந்தது.

என்னுடைய கருத்துகளையும் பதிவு செய்யும் விதமாக நானே வலிய வாய்ப்பைக்கேட்டு, எனது தாய், சகோதரி ஆகிய இருவரும் கண்தானம் செய்துள்ளதையும், இரத்தம்,கண்,உடல் உறுப்பு தானம் பற்றிய அவசியத்தை ஓரிரு வரிகளில் ( பேசுவதருக்கு தயார் செய்துக்கொண்டு போகாததால்) தெரிவித்து முடித்துக்கொண்டேன். கடைசி கட்டத்தில் திரு.ஜெகதிசன் பேசுவதற்கும், அவருக்கு பொன்னாடை அணிவிக்கவும் வலியுறித்தியதாக திரு.சிம்மசந்திரன் பிரிதொரு சமயத்தில் என்னிடம் தெரிவித்தார்.

விழா முடிவடைய இரவு கூடுதலான நேரம் ஆகிவிட்டபடியாலும், அந்த சாலையில் முற்றிலுமாக போக்குவரத்து நின்று விட்டபடியாலும் வாகனவசதியில்லாத ஊனமுற்றவர்கள் விழாவில் கலந்துக் கொண்ட மற்றவர்களின் வாகன உதவியுடன் வெளியேறிக் கொண்டிறிப்பினும் கடைசியில் இரு ஊனமுற்ற பெண்கள் வெளியேற வழியின்றி தத்தளித்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர் மாநிலசங்கத்தை சேர்ந்த செல்வியும், மேற்கு மாம்பழத்தை சேர்ந்த மற்றொரு யுவதியுமாகும். யுவதியை தியாகராயநகர் பஸ் ஸ்டேண்டில் அழைத்து போய் விட்டு விட்டு, மீண்டும் விழா நடைப் பெற்ற இடத்திற்கு வந்து, ரோட்டில் தனியாக நின்றுக் கொண்டிருந்த செல்வியை சைதாப்பேட்டை பஸ் ஸ்டேண்டில் விட்டுவிட்டு வீட்டுக்கு சென்றடைய நேரமாகிவிட்டது. அடுத்தது அடுத்ததில்....

Thursday, November 5, 2009

எனக்கும் -42

நான் படித்த காலத்தில் விளையாட்டுநேரம் என்று பள்ளி பாடநேர அட்டவணையிலேயே நேரம் ஒதுக்கப்பட்டு இருக்கும். அதில் அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ளவேண்டும். அதற்கு மதிப்பெண்களும் உண்டு. ஆனால் நான் ஊனமுற்றவன் என்பதால், விளையாட்டு பயிற்சியில் விலக்கு அளித்து சான்று அளித்தார்கள். விளையாட்டுகளில் எவ்வளவுதான் ஆர்வம் இருந்தாலும், ஒரு கட்டுப்பாடுகளின் கீழ் இருக்க விரும்பாததால் எனக்கு இது மிக்க மகிழ்ச்சியை அளித்தது. எந்த ஒரு ஆசிரியர்களும் இல்லாத நேரங்களில், மற்ற மாணவர்களுடனும், தனியாகவும் அமர்ந்தபடியே சாட்புட் ( இரும்புகுண்டு) வீசுவது, பில்லப்ஸ் எடுப்பது ஆகிய பயிற்ச்சிகளை எடுத்து வந்தேன். இந்த இரு போட்டிகளிலும் என்னுடன் போட்டி போட்ட நண்பர்கள் யாரும் வெற்றியடைந்ததில்லை என்பதை பெருமையாக நினைவிற் கொள்கிறேன். பள்ளி சார்பாக எந்த ஒரு போட்டியிலும் கலந்துக் கொண்டதும் இல்லை. எனக்கு தெரியும் என ஆசிரியர்களிடம் காட்டிக் கொண்டதுமில்லை.

ஒரு சமயம் எங்கள் ஊருக்கு தாலுக்காவாக இருந்த அரூரில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இடையே கபடிப் போட்டி (சடுகுடு) நடந்தது. எங்கள் ஊர் பள்ளி குழுவுடன் நானும் பார்வையாளனாக சென்றிருந்தேன். நான் பூட்ஸ், ஊன்றுகோல்கள் உதவியுடன் அங்குமிங்குமாக எங்கள் குழுவுடன் சுற்றிக் கொண்டிருந்ததை பார்த்த மற்ற பள்ளி மாணவர்கள், என்னையும் குழுவின் அங்கமாக நினைத்துக் கொண்டு, இவர் குழுவிலே உண்டா? எப்படி விளையாடுவார்? எங்கள் ஊர் மாணவர்களிடம் விசாரிக்க, இதுதான் வாய்ப்பு என, அமர்ந்தபடியே விளையாடுவார், அவரிடம் மாட்டிக் கொண்டவர்கள் தப்பித்து செல்லவே முடியாது என வாயிக்கு வந்தபடியெல்லாம் கலாய்க்க, எங்கள் ஊர் குழுவுடன் மோதயிருந்த முதல் குழு எச்சரிக்கையுடனும், பயத்துடனும் களமிறங்க, மற்ற குழுவினரோ எதிர்ப்பார்ப்புடன் குமிழியிருக்க, எங்கள் குழு களமிறங்கியது நான்னின்றி. அப்பொழுதும் எனைப்பற்றி கேட்டவர்களுக்கும் பலம்வாய்ந்த அணிக்கு மட்டும் தேவைப்பட்டால் களமிறங்குவார் என சொல்லி கிலியூட்ட, நானோ மற்றவர்கள் எனைப்பற்றி அலாசுவதை செவிமடுத்துக் கொண்டு, மனதுக்குள் சிரித்துக் கொண்டிருந்தேன். எங்கள் குழு விளையாடிய கடைசி போட்டி வரை, நான் களம் இறங்காததைக் கண்ட பிறகுதான், அவர்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்கள். நாங்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாத நிலை அடைந்தபோது ஏமாற்றப்பட்ட மாணவர்கள் அடைந்த சந்தோசத்தையும், குதித்து கும்மாளம் போட்டதையும் சொல்ல தேவையில்லை. யாருமே கடைசிவரை என்னிடம் நேரடியாக விசாரிக்கவில்லை என்பதுதான் இதில் ஹைலைட்.