Thursday, November 5, 2009

எனக்கும் -42

நான் படித்த காலத்தில் விளையாட்டுநேரம் என்று பள்ளி பாடநேர அட்டவணையிலேயே நேரம் ஒதுக்கப்பட்டு இருக்கும். அதில் அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ளவேண்டும். அதற்கு மதிப்பெண்களும் உண்டு. ஆனால் நான் ஊனமுற்றவன் என்பதால், விளையாட்டு பயிற்சியில் விலக்கு அளித்து சான்று அளித்தார்கள். விளையாட்டுகளில் எவ்வளவுதான் ஆர்வம் இருந்தாலும், ஒரு கட்டுப்பாடுகளின் கீழ் இருக்க விரும்பாததால் எனக்கு இது மிக்க மகிழ்ச்சியை அளித்தது. எந்த ஒரு ஆசிரியர்களும் இல்லாத நேரங்களில், மற்ற மாணவர்களுடனும், தனியாகவும் அமர்ந்தபடியே சாட்புட் ( இரும்புகுண்டு) வீசுவது, பில்லப்ஸ் எடுப்பது ஆகிய பயிற்ச்சிகளை எடுத்து வந்தேன். இந்த இரு போட்டிகளிலும் என்னுடன் போட்டி போட்ட நண்பர்கள் யாரும் வெற்றியடைந்ததில்லை என்பதை பெருமையாக நினைவிற் கொள்கிறேன். பள்ளி சார்பாக எந்த ஒரு போட்டியிலும் கலந்துக் கொண்டதும் இல்லை. எனக்கு தெரியும் என ஆசிரியர்களிடம் காட்டிக் கொண்டதுமில்லை.

ஒரு சமயம் எங்கள் ஊருக்கு தாலுக்காவாக இருந்த அரூரில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இடையே கபடிப் போட்டி (சடுகுடு) நடந்தது. எங்கள் ஊர் பள்ளி குழுவுடன் நானும் பார்வையாளனாக சென்றிருந்தேன். நான் பூட்ஸ், ஊன்றுகோல்கள் உதவியுடன் அங்குமிங்குமாக எங்கள் குழுவுடன் சுற்றிக் கொண்டிருந்ததை பார்த்த மற்ற பள்ளி மாணவர்கள், என்னையும் குழுவின் அங்கமாக நினைத்துக் கொண்டு, இவர் குழுவிலே உண்டா? எப்படி விளையாடுவார்? எங்கள் ஊர் மாணவர்களிடம் விசாரிக்க, இதுதான் வாய்ப்பு என, அமர்ந்தபடியே விளையாடுவார், அவரிடம் மாட்டிக் கொண்டவர்கள் தப்பித்து செல்லவே முடியாது என வாயிக்கு வந்தபடியெல்லாம் கலாய்க்க, எங்கள் ஊர் குழுவுடன் மோதயிருந்த முதல் குழு எச்சரிக்கையுடனும், பயத்துடனும் களமிறங்க, மற்ற குழுவினரோ எதிர்ப்பார்ப்புடன் குமிழியிருக்க, எங்கள் குழு களமிறங்கியது நான்னின்றி. அப்பொழுதும் எனைப்பற்றி கேட்டவர்களுக்கும் பலம்வாய்ந்த அணிக்கு மட்டும் தேவைப்பட்டால் களமிறங்குவார் என சொல்லி கிலியூட்ட, நானோ மற்றவர்கள் எனைப்பற்றி அலாசுவதை செவிமடுத்துக் கொண்டு, மனதுக்குள் சிரித்துக் கொண்டிருந்தேன். எங்கள் குழு விளையாடிய கடைசி போட்டி வரை, நான் களம் இறங்காததைக் கண்ட பிறகுதான், அவர்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்கள். நாங்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாத நிலை அடைந்தபோது ஏமாற்றப்பட்ட மாணவர்கள் அடைந்த சந்தோசத்தையும், குதித்து கும்மாளம் போட்டதையும் சொல்ல தேவையில்லை. யாருமே கடைசிவரை என்னிடம் நேரடியாக விசாரிக்கவில்லை என்பதுதான் இதில் ஹைலைட்.



No comments: