Monday, October 14, 2013

அனுபவங்கள் ,பல



 

ஒரு வழியாக பேபி வீல்சேர் வந்தது. அதில் மிகவும் குறுகி அமர்ந்து என் ஊன்று கோல்களையும் கையில் பிடித்துக் கொண்டு தண்டவாளங்களையும்  பிளாட்பாரங்களிலிருந்த மேடு பள்ளங்களை கடந்து நான் ஏற வேண்டிய ரயில் பெட்டியை வந்தடைந்தேன். என்னை கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் தள்ளி வந்த இரயில் நிலைய ஊழியரை சும்மா அனுப்ப மனம் வரவில்லை. பணம் கொடுத்ததற்கு வேண்டாமென மறுத்தவருக்கும் வலுகட்டாயமாக கையில் திணித்து அனுப்பி வைத்தோம். என்ன குரங்கு மனமடா! இலவசமாக செய்ய வேண்டியதற்கு யாராவது பணம் கேட்டால் கோபம் வருகிறது. வேண்டாமென்பவருக்கு கையில் திணித்து அனுப்புகிறோம். விடியற்காலை 4,30 மணி சுமாருக்கு ஆத்தூர் சென்றடைந்துவிடுமென்றதால், இரவு 12 மணிக்கு மேல் டிக்கெட் பரிசோதகர் வந்து சென்ற பிறகு எங்கே தூக்கம். அறைகுறை தான். அன்று திருமணநாளாக இருந்ததால், நான் இருந்த பெட்டியில் பாதி பேர்  ஆத்தூரில் இறங்குபவர்களாக இருந்தார்கள். இரயில் சரியாக எத்தனை மணிக்கு சேருமென தெரியாததால், ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே இரயில் வாசற்படியில் திபுதிபுவென கூட்டம். ரயில் தாமதமானதாலும், சிறிய நிலையங்களில் போதுமான வெளிச்சத்துடன் பெயர் பலகைகள் இல்லாததாலும் தடுமாறினார்கள். ஊர் வந்ததும், பிளாட்பாரத்தின் கடைசியில் நாங்கள் இறங்கவேண்டிய பெட்டி இருந்தது. முன்பே தகவல் கொடுத்திருந்ததால் அழைத்து செல்ல ஏற்பாடு செய்திருந்தார்கள். நாங்கள் செல்வதற்கு முதல் நாள் தான் ஆத்தூர் லன்யஸ் கிளப் மூலமாக வீல்சேர் ஒன்றை இரயில் நிலையத்திற்கு நன்கொடை அளித்திருந்ததால் எனக்கு மிக்க வசதியாக அமைந்தது.சென்னைக்கு திரும்பும்போது நாங்கள் ஏறவேண்டிய  இரயில் பெட்டி நிற்குமிடத்தை கேட்டு அந்த இடத்தில் ( பிளாட்பாரத்தில் ) இறங்கிக் கொண்டு வீல்சேரை வேறு யாருக்காவது தேவைப்படுமென அனுப்பி வைத்து விட்டேன். மீண்டும் சோதனை இரயில் இரண்டு பெட்டிகளுக்கு மேல் முன்னோக்கி சென்று விட்டதுடன் பிளாட்பாரம் தாழ்வாக இருந்ததால் கீழ்யிருந்து இரண்டு  மூன்று பேர் தூக்கிவிட, பெட்டியினுள்ளிருந்து இரண்டு  மூன்று பேர் மூட்டைப் போல் என்னை இழுத்து ஏற்றி விட்டார்கள்.  சென்னை வந்ததும் பழைய நிலைபடியே சிரமப்பட்டு எக்மோர் இரயில் நிலையத்திலிருந்து வீடு வந்தடைந்தேன். அடுத்தது மறக்க முடியா ஏப்ரல் மாத நிகழ்சியை அடுத்து பார்ப்போமா...

No comments: