ஆனால் இதை படித்த நீங்கள் நினைக்கலாம். உன் மீது மட்டும் வார்டன் அம்மாவுக்கு ஏன் இவ்வளவு கோபமும் பழி வாங்க எண்ணம் தோன்ற காரணம் என்ன என தோன்றலாம். இது ஒரு சத்திய சோதனை தான். அன்று மாட்டிக் கொண்டவர்களில் சிலர் வார்டன் அம்மா செல்லம். சிலர் அப்பாவிகள் போல் இருப்பவர்கள். மற்றும் என்னையும் சேர்த்து சிலர் குறும்புகாரர்கள். அதில் நான் நேரடி கவனத்துக்கு உள்ளானவன். ஓ..ஹோ... அப்படியா! என நினைப்பது தெரியுதுங்க. ஆனா நீங்க நினைக்கிற மாதிரி இல்லைங்க. நான் விசயம் சொன்னப் பின்னாடி உங்க முடிவை சொல்லுங்க. ஏனென்றால் முதலில் விட்டுவிட்ட முட்டை கதைக்கு மீண்டும் போகலாமா? அந்த வார்டன் அம்மா செல்லமா இரண்டு நாய்களை வளர்த்தாங்க. அதிலே ஒன்னு போமேரியன் ஆண் நாய். அதுக்கு பேரு ராம். மற்றொன்று ராஜபாளையம் வகை பெண் நாய். அதுக்கு பேரு சீத்தா( தமிழில்-சீதை). இது ஒரு ராட்ச்சசி போல் இருக்கும். காலையிலும் மாலையிலும் ஒரு ரவுண்ட் சங்கிலி பிடித்துக் கொண்டுச் செல்வார்கள். அவர்கள் எங்கே பிடித்துக் கொண்டு செல்வது. அது அவர்களை இழுத்துக் கொண்டு ஓடும். அவர்களைப் பார்க்க பாவமாய் இருக்கும். எங்களுக்கு பரிமாற வைத்திருக்கும் உணவுகளை நேரடியாக அந்த பாத்திரங்களில் வாய் வைத்து சாப்பிட,இந்த இரண்டு நாய்களையும் அனுமதிப்பார் வார்டன் அம்மா. முட்டைப் பொரியல் பெரும் பகுதி அவைகளுக்குத்தான். அதனால் பல முறை எதிர்த்து கேட்டிருக்கிறேன், சாப்பிட மறுத்திருக்கிறேன். தவிர இந்த இரண்டு நாய்களையும் வெவ்வேறு இடங்களில் கட்டி வைத்திருப்பார்கள். சித்தா நாய் ராட்ச்சசி போலிருப்பதால் , அதனிடம் யாரும் குரும்பு வைத்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால் போமேரியன் நாயை கைத்துப்பாக்கியால் சுடுவது போல கைவிரல்களை மடக்கி டிஸ்யும்... டிஸ்யும்... என ஒலி எழுப்பினால் போதும் குரைக்க ஆரம்பித்து விடும். வார்டன் அம்மாவிடம் இருந்த கோபத்தை, பாவம் அந்த சின்ன நாயிடம் காட்டுவோம். மேலும் என்னைக் கண்டாலே குலைக்கக் கூடிய அளவுக்கு செய்து விட்டேன். பல முறை என்னை வார்டன் அம்மா, டே உன்னைப் பார்த்தாலே குலைக்கிறது. நீ அந்த பக்கம் போ என விரட்டி விடுவார்கள் அல்லது வேறு இடத்தில் கட்டி வைத்து விடுவார்கள். இவைகளும் என்னை பலி வாங்கக் கூடிய அளவுக்கு மாறியிருக்குமென கருதுகிறேன். இந்த இரண்டு விசயங்களுக்கு தவிர, வேறு எதற்கும் கோபப்படும்படி நேரிட்டதில்லை. எதற்கு என்று ஞாபகமில்லை. ஒரு சமயம் ஏழெட்டு பேர் எங்கள் ஹாலிலேயே தங்கியிருந்தோம். ஒரு நாள் காலை டிபன் ( சப்பாத்தி ) கொண்டுவந்தவர்கள்,யார் விரைவாக பனிரெண்டு சப்பாத்தியையும் சாப்பிட்டு முடிக்கிறவர்களுக்கு நூறு ரூபாய் பரிசு தருவதாக போட்டி வைத்தார்கள். ஆனால் கன்டிசன் ,முன்னதாகவும், பனிரெண்டு சப்பாத்தியையும் சாப்பிட்டு விடவேண்டும். பிறகு பாத்ரூம் சென்று வாந்தி எடுத்துக் கொள்ளலாம். அந்த போட்டியில் அனைவரும் ஆறு ஏழு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, நான் முன்னதாகவும், பதினோரு சப்பாத்திகளையும் சாப்பிட்டு விட்டேன். ஆனால் பனிரெண்டு சாப்பிட்டால் தான் பரிசு என கூறி விட்டார்கள். நான் வாந்தி எடுக்க விரும்பாததால் அத்துடன் நிறுத்திக் கொண்டுவிட்டேன். என்னுடைய இரண்டாவது பெரிய சகோதரியின் திருமணத்திற்காக அழைத்துச் செல்ல வந்து டாக்டரிடம் அனுமதி கேட்டதற்கு, உங்கள் பையன் நடக்கக் கூடிய அளவுக்கு வந்து விட்டான். இதற்கு மேல் இங்கு மருத்துவம் தேவையில்லை. எனவே ஊருக்கே டிசார்ஜ் செய்து அழைத்து சென்று விடுங்கள் என டிசார்ஜ் செய்து அனுப்பி விட்டார். இத்துடன் ஆந்திரமகிளசபா மருத்துவமனை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்து விட்டதாக கருதுகிறேன். ஏதேனும் ஞாபகம் வந்தால் அவ்வப்போது பதிவு செய்கிறேன். அடுத்து.....
Tuesday, January 27, 2009
எனக்கும்-35
இதில் என்னுடைய சோகங்களும் வருத்தங்களும். போட்டியில் பரிசு கிடைத்து இழந்ததையும், எனது பாட்டியின் இழப்பையும் முன்பே குறிப்பிட்டு விட்டேன். ஒரு சமயம் திருச்சிக்கு சுற்றுளா சென்றோம். திருச்சியா, லால்குடியா என சரியாக நினைவுக்கு வரவில்லை. லால்குடிஎன்று தான் ஞாபகம். ஒரு அரிசி அறவை ஆலையில் (ரைஸ் மில் குடோனில்) தங்க வைக்கப்பட்டோம். அங்கிருந்து திருச்சி மற்ற இடங்களுக்கும் அழைத்து சென்றார்கள். ஆனால் அதில் மறக்க முடியாத இரண்டு சம்பவங்கள், ஒன்று திருச்சி விமான நிலையத்திற்கு சென்றபோது, நான் வர மறுத்து விட்டு, நெல் காய வைக்கும் களத்தில் புட்பால் அல்லது வாலிபால் பந்தை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தது. மற்றொன்று அவர்கள் விமான நிலையத்திற்கு சென்றதுடனில்லாமல் விமானத்திலும் ஏறி அமர்ந்ததையும், பழங்களும் குளிர்பானங்களும் கேக் சாக்லெட் போன்றவையும் கொடுத்ததையும்,விமானத்தின் அமைப்பை பற்றியும் சென்றவர்கள் மாறிமாறி சொன்னதை கேட்டு, ஐயோ! தவற விட்டு விட்டோமே என ஏங்கியது. அறியாத வயதில் நடந்துருந்தாலும்,ஆந்திர மகிளசபா வாழ்வில் ஆறாத சுட்டபுண் ஒன்று உண்டு. அன்றும் இன்றும் நண்பர்களாக கருதப்படக் கூடிய சிலர் ( பெயர்கள் நினைவிலே இருப்பினும் சொல்ல விரும்பவில்லை) ஒன்று கூடி, வார்டன் அம்மாவுக்கு கெட்டபெயர் உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு திட்டத்தை ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள். உடனிருந்து கேட்டுக் கொண்டிருந்த நான் அப்படி செயல்படாதீர்கள், அது உங்கள் உயிருக்கு ஆபத்து, வேறு வழியை யோசனை செய்யுங்கள் என்று கூறியதின் பேரில் நானும் கூட்டாளியாக கருதப்பட்டு விட்டேன். ஆனால் அவர்களோ ஒரே முடிவுடனிருக்க, தடுத்து நிறுத்த வழித்தோன்றாத நான், ஒருவர் மூலமாக வார்டன் அம்மாவுக்கு தகவல் தெரிவித்து விட்டேன். ஆனால் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. சம்மந்தப்பட்டவர்கள் அனைவரையும் தனித்தனியாக அழைத்து விசாரித்தவர்கள், தகவல் தெரிவித்த என்னை அழைக்காமலேயே எம் பெற்றோருக்கு தந்தி அனுப்பி, என் அப்பாவும் பெரிய அத்தையின் பெரிய மகனும் வந்த பிறகுதான் என்னை குற்றவாளியாக முடிவு செய்து விட்டார்கள் என்பது தெரிந்தது. என் அப்பாவிடம் என்ன கூறினார்கள் என்பதும் எனக்கு தெரியாது. அப்பாவும், அத்தையின் மகனும் என்ன நடந்தது என்று அவர்கள் என்னிடம் கேட்கவேயில்லை. பேசிய வார்த்தைகளோ மூன்று நான்கு தான். அவை '' உன்னை டிசார்ஜ் செய்து அழைத்து போகச் சொன்னார்கள்'' '' சமாதனம் சொல்லியிருக்கிறோம்'' நல்ல பிள்ளையாக நடந்துக் கொள்'' ''போய் வருகிறோம்'' இவ்வளவுதான். இவர்கள் வரும் முன்பாவது, அழைத்து கேட்பார்கள், நடந்ததைச் சொல்லலாம் என்றிருந்த நான், இவர்களும் என்னை குற்றவாளியாகவே நினைத்து விட்டார்களே என உணர்ந்ததும் கூனிக்குருகி தலைக் குனிந்தவன் தான். தலை நிமிர்ந்து யாரையும் பார்க்கமாட்டேன் பேசமாட்டேன், தனிமை தனிமைதான். வகுப்பில் கூட தனியாக மாணவர்களுக்கு எதிர்புறத்தில் கதவுக்கு அருகில் மூலையில் அமர்ந்துக் கொள்வேன். டீச்சர் கேட்கின்ற கேள்விகளுக்கு கூட தலை குனிந்தவாறே பதில். நானிருக்கும் நிலையைக் கண்டு, உன் தன்னிச்சையான செயலே உன் மேல் தவறுயில்லையென காட்டுகிறது. தலையைத் தூக்கி பேசு, அனைவருடனும் சேர்ந்து அமர்ந்து கொள், யாராவது சொன்னால் எங்களிடம் கூறு என்று பலவாறாக, பல நாட்களாக டீச்சர்கள் சொல்லியும் கேட்காததால், எப்படி நடக்கவேண்டுமென்று உத்தரவே போட்டுவிட்டார்கள். அதன்படி மாணவர்களுடன் சேர்ந்து அமர வேண்டியதாகிவிட்டது. அடிக்கடி என்னிடம் கேள்வி கேட்டு, அதற்கு தலைத் தூக்கி பதில் சொல்லும் வரை விடமாட்டார்கள். இப்படியே சிறிதுசிறிதாக சகஜநிலைக்கு தயார்படுத்தினார்கள். எப்படி நான் மட்டும் குற்றவாளியானேன் என்ற உறுத்துதல் இருந்துக் கொண்டேயிருந்தது. எனவே அறிந்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுடன் பழகியதில், ஆரம்பத்தில் யார் மாட்டிவிட்டார்கள் என தெரியாமல், மாட்டிக் கொண்டுவிட்டோமே என்ற பயத்தில் அழுது இருந்திருக்கிறார்கள். ஆனால் வார்டன் அம்மா விசாரிக்க ஆரம்பிக்கும்போது,என் பெயரும் அடிப்பட்டதால் அவன்தான் செய்திருக்க வேண்டும். நீங்கள் அவனிடம் சேரக்கூடாது. நான் சொன்னேனென்று யாரிடமும் எதுவும் பேசவேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்கள்.
Labels:
ஆந்திரமகிளசபா,
வருத்தங்களும் சோகங்களும்
Sunday, January 18, 2009
எனக்கும்-34
அனைவருக்கும் பொதுவான பொழுதுபோக்கு அரசு மற்றும் தனியார் டாக்குமென்டரி படங்கள்,ஸ்லைடு ஷோ. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது காட்டபடும்.வருகின்ற வி.ஐ.பி.களுக்கு எங்களை காட்டுவதற்கும், நாங்கள் விரும்பி படம் பார்க்க அமருமிடமாகவும் முன் கட்டடத்ததில் ஒரு ஹால் உள்ளது.
ஒரு சமயம் சாய்பாபா அருளாசி வழங்க வந்திருந்தார். அந்த சமயத்தில் ஒரு மகானாக அவரை உணராமல், அவரின் நடை உடை பாவனைகள் தான் என்னை கவர்ந்தது. அவர் காரிலிருந்து இறங்கி வந்து அருளாசி வழங்கி விட்டு மீண்டும் காரில் ஏறி செல்லும் வரை அவரையும் , அவர் அருகில் வந்து கூழை கும்பிடு போட்டுக் கொண்டிருந்தவர்களின் செயல்களும், விபூதி மற்றும் பொருட்களை மாயமாக வரவழைத்து ஆசிர்வதித்து கொடுத்ததும் அவரின் உடையோ கழுத்திலிருந்து கனுக்கால் வரை மூடியிருந்ததும்,கால்கள் எடுத்து வைக்கும் போது மட்டும் அவர் அணிந்திருக்கும் பூட்ஸ்கள் (பாதரட்ச்சைகள்) சிறிது தெரிந்தத்தும், சுருண்ட தலைமுடியுடன் கூடிய முகமும், உள்ளங்கையுடன் விரல்களும் பார்வையில் பட்ட உருப்புகளாகும். அவருடைய நடையில் ஒரு நளினத்தையும் கண்டேன். இவை தான் என் கவனத்தை ஈர்த்ததே தவிர, வேறு பக்கம் என் கவனம் சிதறவில்லை.
ஒரு நாட்டிய நிகழ்ச்சி, எங்கள் கட்டடத்திக்கு பின்புறமிருந்த திறந்தவெளி அரங்கில்.நடிகை ராஜசுலோச்சனா அவர்களின் நாட்டியம் நடைப்பெற்றது. அதில் மறக்கமுடியாத நாட்டியத்துடனான பாடல்'' காக்கை சிறகினிலே நந்தலாலா.... உன்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா.. ''
வி.ஐ.பி வெளி நோயாளியாக வந்து உடற்பயிற்சிக்கு வந்தவர், மறைந்த நடிகர் அசோகன் அவர்களின் மகன். பிறப்பிலேயே பாதிக்கப்பட்டவர். 99% செயழிழந்தவர். காரில் அழைத்து வருவார்கள். அவரால் எந்த ஒரு செயலையும் செய்துக்கொள்ளவோ, சொல்லக்கூடிய நிலையிலே இல்லாதவர். உதவியாளர்கள் தான் அவரின் அனைத்து தேவைகளையும் கவணித்து செய்ய வேண்டும். அவரை நினைக்கும் போதெல்லாம், நான் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்ட ஆரம்ப கட்டநிலையை நினைத்துக் கொள்வேன். ஒரு பிறந்த நாளுக்காக அனைவருக்கும் பழங்கள், பிஸகட்டுகள், சாக்லெட்டுகள் அனைவருக்கும் கொடுத்தார்கள். என்னுடைய உடற்பயிற்சி நேரமும் அவர் பயிற்சிக்கு வந்த நேரமும் அடிக்கடி பார்க்க கூடிய வகையில் அமையும்.
Labels:
ஆந்திரமகிளசபா வி.ஐ.பி நினைவுகள்
எனக்கும் -33
இங்கு பணிபுரிந்தவர்கள் என்றால், முதலில் ஆசிரியர்களைத்தான் சொல்ல வேண்டும் . அவர்கள் தான் குருவாயிற்றே. முதலில் மூளைவளர்ச்சியின்மையால் செயல்பாடுகள் குறைந்தவர்களுக்கு தனியாக படம் நடத்த ஒரு டீச்சரும், ஆந்திராவிலிருந்து வந்த தெலுங்கு மாணவர்களுக்காக தெலுங்கில் பாடம் நடத்த ஒரு டீச்சரும், ஒன்றிலிருந்து நான்காம் வகுப்பு வரைக்கும் டீச்சர் திருமதி. கமலா அவர்கள், அடுத்து ஐந்தாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை திருமதி. ( பெயர் ஞாபகம் வந்ததும் எழுதுகிறேன்) அவர்கள். இவர்களிருவரும் எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்தவர்கள். இந்த நான்கு ஆசிரியர்களும் அன்பாக பழக கூடியவர்கள். ஆயாக்கள் கிருஷ்ணம்மா, வள்ளியம்மா மற்றும் சிலர். அட்டண்டர்கள் ராஜகோபால், சண்முகம், பாலையா( இவர் வார்டன் அம்மாவின் சகோதரராக இருப்பினும் மிகவும் வெகுளியானவர்). டாக்டரை பார்க்க, உடற்பயிற்சி, ஆப்ரேசன் தியேட்டர்களுக்கு அழைத்து செல்வதும், ஆபீஸ் மற்றும் பல வேலைகள் அனைத்துக்கும் இவர்கள் தான். ஆப்ரேசன் தியேட்டரில் உதவியாளர்களாகவும் செயல்படுவார்கள். மீண்டும் சில முறை அங்கு சென்ற போது பழைய நினைவுகளை அசைப்போட உதவுபவர்கள். அங்கு எங்களுக்கு வழங்கப் பட்ட உணவுகளை பற்றி, இட்லி, தோசை, சப்பாத்தி, கோதுமைரவா உப்புமா( வெங்காயம் இருக்காது) இவை அனைத்துக்கும் சட்னியும் சாம்பாரும் வெறும் நீர் போல்தான் இருக்கும். வாரத்தில் ஒருநாள் ஆஃப் பாயில்டு முட்டை அல்லது முட்டை பொரியல் கொடுப்பார்கள். மதியம் சாதம், சாம்பார் அல்லது குழம்பு, ரசம், மோர், ஊறுகாய், பொரியல். ஆஃப் பாயில் முட்டை எனக்கு பிடிக்காது. எனவே வெள்ளைகரு பகுதியை சாப்பிட்டு விட்டு மஞ்சள் கருவை யாருக்காவது கொடுத்து விடுவேன். முட்டைப் பொரியலில் வெங்காயம் போடாமல் மிளகுத்தூள் மட்டும் போட்டுக் கொடுப்பார்கள். அதை சாப்பிட பழகிவிட்டேன். விசேஷ நாட்களில் அல்வா அல்லது பாயாசம் இருக்கும்.நாங்கள் சுத்த சைவம். திருமணத்துக்கு பின் ஒருமுறை நானும் , எனது மனைவியும் சென்னைக்கு டிரைனில் வந்து சேர்ந்ததும், அருகிலிருந்த ஒரு ஓட்டலுக்கு சென்று, சைவமும் அசைவமும் என போட்டிருந்தாலும், பசியின் காரணமாய் ஆளுக்கு ஒரு பிளேட் இட்லி வாங்கி சாப்பிட வாயில் வைத்தோம். அப்போதுதான் தெரிந்தது மாமிச குளம்பு ஊற்றியிருக்கிறார்கள் என்பது. அன்று காலை உணவை சாப்பிடவேயில்லை. அட முட்டைக்குள் ஒரு கதையே இருக்கிறது. அதை அடுத்ததில்...
எனக்கும் -32
என் பெரிய பொழுது போக்குகள் சில இருந்தன. இரவுகளில் நடமாட்டமில்லாத நான்கு பகுதிகள் இருந்தன. நான் தங்கிருந்த ஹாலிலும், பக்கத்தில்லுள்ள சின்ன ஹாலிலும் பால்கனிகளும், மாடியிலிருந்து கீழ்பகுதிக்கு வர இரண்டு பகுதிகளையும் இணைக்கும் பாலம் போன்ற நடைப்பாதையின் இரு பக்கமும், அடுத்து அதை ஒட்டியிருக்கும் கட்டடத்தின் முதல்மாடியான உடற்பயிற்சி கூடத்தின் நடைபாதையின் இருபக்க தடுப்பு சுவரும், கீழே பிரதான கேட்டை நோக்கிய வாசல் ஆகியவை நான் தன்னந்தனியாக வெளியுலகை காண பயன் பட்ட இடங்களாகும். பகல் என்றால் போக்குவரத்தும், கட்டடம் மற்றும் மற்றவர் வேலை செய்வதையும், வானத்தையும் பார்த்துக் கொண்டிருப்பதும், இரவுயெனில் வானத்தையும், காற்று, அதனால் ஏற்படும் இயற்கை அசைவுகளையும், கண்ணுக்கு காதுக்கு புலப்படக் கேடக கூடிய ஒளி ஒலிகளை பார்த்தும் செவிமடுத்துக் கொண்டிருப்பதும் எனது பொழுதுபோக்குகளில் ஒன்றாகும். தவிர இரும்பு சக்கர நாற்காலி, மடக்க கூடிய வகை சக்கர நாற்காலி இதில் எது கிடைக்கிறதோ அதில், ஆங்கில எழுத்து ''வீ'' முறையில் இருக்கும் சருக்கு பாதையில் தனியாக வேகமாக கீழே இறங்குவதும், ஊனமுற்றவர் பிடித்து நடைபழக ஊன்றுகோள்கள் இருப்பது போல வாக்கர் என்று '' பா'' வடிவில் ஒன்றிருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அதன் நான்கு முனைகளிலும் சக்கரங்கள் பொருத்தபட்டிருக்கும். ஒருகாலில் சக்தி சிறிது இருந்ததால் அதை ரோலிங்க் ஸ்கேட்டிங் போல வேகமாக உந்தி விட்டு, காலை கீழே ஊன்றாமல் சாய்ந்து அல்லது ஒரு பக்கமாக அமர்ந்துக் கொண்டு, ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்கு வேகமாக செல்வது, படிகளின் கைப்பிடி சுவற்றில் வழுக்கிக் கொண்டு வருவதும், யாருமே இல்லாத நேரத்தில் மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக உடற்பயிற்சி கூடத்தின் கதவுகளை மூடிக்கொண்டு, சைக்கிள் பெடலிங், உட்கார்ந்தபடியே கயிற்றை இழுத்து உயரத்தூக்ககூடிய வெயிட்லிஃப்ட்யை இழுப்பதும், கைகளால் தூக்கக் கூடிய வெயிட்லிஃப்ட்களை தூக்கி பயிற்சி செய்வதும், பில்லப்ஸ் எடுப்பதும் எனது தன்னந்தனியான பொழுதுபோக்குகளாகும். மற்ற மாணவர்களுடன் சேர்ந்து விளையாடும் விளையாட்டுகளென்றால் தவழ்ந்தவாறு ஓடிப்பிடிப்பது, கண்ணைக் கட்டிக் கொண்டு தொடுவது, கட்டில்களின் இடையே பக்க தடுப்புகளைப் பிடித்து தொங்கியவாறு ஆடுவது, கட்டில்களில் போடப்பட்டிருக்கும் தடுப்புகளை கழட்டாமலே கட்டிலிலிருந்து கீழே இறங்குவது,மேலே ஏறுவது, கட்டிலிலும் தரையிலும் குட்டிகரணங்கள் போடுவது, சப்பணமிட்டவாறு தலை கீழாக நடப்பதுடன், அவ்வாறே சாய்தளத்திலும், படிகட்டுகளிலும் இறங்குவதும், மற்றும் சில சிறு வயது விளையாட்டுகளும் மறக்க முடியாதவையாகும். அந்த வயதின் சாதனையாக கதுவது சாய்தளத்தில் தன்னந்தனியாக சக்கரநாற்காலியில் அமர்ந்தபடி இறங்குவது. அப்படி இறங்கும்போது இரண்டு முறைதான் முன்பக்க சுவர்களில் நிலைத்தடுமாறி மோதியிருக்கிறேன். நன்றாக நடக்க கூடிய பெரியவர்கள் கூட அப்படி இறங்க துணியமாட்டார்கள். கீழ்தளத்தில் வெளிவாசலுக்கு வருகின்ற சிறிய சாய்தளத்தில் கூட நோயாளிகளை அமர வைத்து பின்பிறமாகதான் இறக்குவார்கள், இறங்குவார்கள். அடுத்து அங்கு பணிபுரிந்தவர்களைப் பற்றி பார்போமா
Sunday, January 11, 2009
எனக்கும்-31
சிறிது நாளில் பூட்ஸ் கொடுத்தார்கள். வலது காலுக்கு இடுப்பில் ஒரு பெல்ட்டுடன் இணைந்தது போல முழுமையாகவும், இடது காலுக்கு முழுமையாகவும், கை அக்குள்களில் வைத்து நடக்கும்படியான ஊன்றுகோள்களையும் கொடுத்தார்கள். மற்றவர்களெல்லாம் பூட்ஸ் போட்டுக் கொண்டு நடப்பதைப் பார்த்து, வெறியோடு காத்திருந்த எனக்கு, மதியம் கொடுத்த பூட்ஸ்களை அணிந்துக் கொண்டு, முதலில் கட்டிலைப் பிடித்துக் கொண்டும், சிறிது நேரத்தில் ஊன்றுகோள்களின் உதவியுடனும் அன்று மாலைக்குள் தனியாகவே நடக்க பழகி விட்டேன். பெரிய சாதனை செய்த மகிழ்ச்சியில் மிதந்தேன். சில நாட்களில் மற்றவர்கள் நடப்பது போல இரண்டு கால்களையும் ஒரே நேரத்தில் தூக்கி வைத்து விரைவாகவும் நடக்க பழகி விட்டேன். அவ்வப்போது டாக்டர் செக்கப் உண்டு. என்னுடைய முறை வந்தது. டாக்டர் என்னை நடந்து காட்ட சொன்னார். நானும் விரைவாக இரண்டு கால்களையும் ஒரே நேரத்தில் தூக்கி வைத்து நடந்து காட்டினேன். நன்றாக நடப்பவர்கள் நடப்பது போல் ஒவ்வொரு காலாக எடுத்து வைத்து நடக்க வேண்டும். அப்பொழுது தான் நோய் குணமாகும். நீயும் நன்றாக நடக்க முடியும் என்றதுடன் நடப்பதற்கும் சொல்லிக் கொடுத்தார். அன்றிலிருந்தே அதுபோல் நடக்க ஆரம்பித்து விட்டேன். சிலர் இரண்டு கால்களையும் தூக்கி வைத்து நடப்பார்கள். டாக்டர் பார்க்கும்போது மட்டும் ஒவ்வொரு காலாக எடுத்து வைத்து நடப்பார்கள். அதனால் அவர்கள் வேகத்திற்கு என்னால் நடக்கமுடியாது. மீண்டும் சில மாதங்களுக்கு பிறகு பரிசோதித்த டாக்டர் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. எனவே இனிமேல் வலைத்தடி (WALKING STICK ) உதவியுடன் நடந்து பழகுயென பரிந்துரைத்தபடி நடக்க ஆரம்பித்தேன். முதலில் மிகவும் சிரமமாக இருந்தாலும் நடக்க பழகி கொண்டு விட்டேன். மேலும் சிறிது நாட்களுக்கு பிறகு இடுப்பு பெல்ட்டையும் எடுத்து விட்டு நடக்கச் சொன்னார். ஆனால் அப்படி நடக்க முடியததால் ஊன்றுகோள்களையே கொடுத்து நடக்க பரிந்துரைத்தார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் இடதுகாலுக்கு முழுமையாக இருந்த பூட்ஸ் முழங்காலுக்கு கீழ்நிலைக்கு (below knee) மாற்றப்பட்டது. இந்த நிலையே இன்று வரை அப்படியே நீடிக்கிது. முதலும் கடைசியுமான ஒரே ஒரு நடைப்போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்றதை முன்பே கூறியுள்ளேன். அடுத்த சாகசங்களையும் பொழுது போக்குகளையும் படித்து களிப்போமா!....
Labels:
ஆந்திர மகிளசபா,
இரண்டாவதாக பூட்ஸ்,
சாகசங்கள்
எனக்கும் -30
இடையிலே எழுதாமல் விட்டுவிட்ட மைனர் ஆப்ரேசன் பற்றி, வலது கால் நீட்டி வைத்தால், அதில் நரம்பு சுருண்டிருப்பதால் தானாகவே மடங்கிக் கொளகிறது என்ற காரணத்தினால் ஆந்திர மகிளசபாவில் சேர்ந்த ஆறு மாதத்திற்குள் மைனர் ஆப்ரேசன் செய்ய வேண்டுமென்று டாக்டர் முடிவு செய்தபடி, ஆந்திர மகிளசபாவிலே ஒரு பகுதியாக இருந்த மகப்பேறு மருத்துவமனையில் ஆப்ரேசன் செய்தார்கள். இதை மைனர் ஆப்ரேசன் என சொல்வதற்கு காரணம், இந்த ஆப்ரேசனுக்கு தையல் போடுவதில்லை.மற்றொன்று கட்டு பிரித்த பிறகு ஆப்ரேசன் செய்த தளும்பும் இருப்பதில்லை. மயக்க மருந்து செலுத்த, கொடுக்க கண்களை மூடிக்கொள்ள சொல்லி விட்டு குளோரோஃபாரம் ஸ்பிரே செய்தார்கள். அப்பொழுது எவ்வளவு நேரம் மயக்கமடையாமல் என்னால் தாக்கு பிடிக்க முடிகிறது என்று சோதித்து பார்க்க நினைத்து மூச்சை அடக்கிக் கொண்டேன். ஆனால் வாய்யைத் திறந்து வைத்திருந்தேன் .வாயில் விழுந்த மயக்கமருந்து துளிகள் சிறிது இனிப்பாகவும் குளிர்ச்சியாகவும் இருப்பதாக உணர்ந்தேன். அதை விழுங்கி விட்டதினால் சிறிது நேரத்தில் மயக்கம் வந்து விட்டது. நான் செய்த குறும்பினால் மயக்க மருந்து அதிகமாக கொடுத்திருக்கிறார்கள். மயக்கம் தெளியவும் நேரமாகிவிட்டதாகவும், உனக்கு மயக்கம் வராததால் அதிக மயக்க மருந்து செலுத்தியதற்கு கூடுதலாக கட்டணம் வசூலித்தார்களெனவும் மயக்கம் நன்றாக தெளிந்து பேசிக்கொண்டிருக்கும் போது அப்பா சொன்னார்கள். நான மூச்சை அடக்கிக் கொண்ட விசயத்தை அவரிடம் சொல்ல வில்லை. இந்த நேரத்தில் முன்பாகவே ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த சமயம் என்னுடைய வயது ஒன்பது அல்லது பத்து. ஆப்ரேசன் தியேட்டரில் படுக்க வைத்தபிறகு ஆப்ரேசனுக்கு முன்னேற்பாடுகள் செய்ய வந்த நர்ஸ் என்னுடைய ஆணுருப்பை சுண்டி விட்டபடி ' என்ன மிளகாய் போல் இத்துணூண்டு இருக்கிறது என கேலிசெய்ததையும் மறக்க முடியாதது. ஆப்ரேசனுக்கு பின் கால் நீட்டுவதில் பிரச்சனை இல்லையே தவிர, சக்தி குறைந்தது போல உணர்ந்தேன். காலை பலவிதங்களில் வளைப்பதற்கு ஏற்றதாக மாறிவிட்டது. யோக செய்வது போல சப்பணமிடுவதற்கும், கழுத்துக்கு, முதுகுக்கு பின் என காலை கைகளால் எடுத்து வளைத்து போட்டுக் கொள்ள வசதியாகி விட்டது. இங்கு வருவதற்கு முன்பாகவே கழுத்து வரை கவசம் போல பூட்ஸ் அணிந்ததைப் பற்றி கூறியிருக்கிறேன். மைனர் ஆப்ரேசனுக்கு பிறகு ஒரு நாளில் பூட்ஸ் கொடுத்தார்கள். அந்த அனுபவங்களை அடுத்ததில் பார்ப்போமா!.....
Labels:
ஆந்திர மகிளசபா,
சாகசங்கள்,
நர்ஸ் செய்த கேலி,
மைனர் ஆப்ரேசன்
Saturday, January 10, 2009
எனக்கும்-29
2009 வருடமாகிய இந்த நேரத்தில் எப்படி இருக்கிறது என்பது எனக்கு தெரியாது. நான் சொல்லியிருப்பது சுமார் 40 வருடங்களுக்கு முன்பானது. ஆனாலும் பெரிய அளவில் மாற்றமிருக்காது என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால் நான்கைந்து வருடங்களுக்கு முன் MRI ஸ்கேன் எடுத்துக் கொள்ள சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். MRI SCAN எடுக்குமிடம் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். ஆனால் உள்ளுக்கும் வெளியில் நடப்பதற்கும் ஒரே செருப்புகளையும் பூட்ஸ்களையும் பயன்படுத்தினார்கள். தரை முழுவதும் புழுதியாகவே இருந்தது. ஸ்கேன் எடுப்பதிலும் மிகவும் அலட்சியமாக நடந்து கொண்டார்கள். நோயாளிகளை ஸ்கேன் மிஷினில் படுக்க வைக்கும்போது நன்றாக படுத்துள்ளாரா என்று ஒரு முறைக்கு இரு முறையாக சரி பார்க்க வேண்டும். நோயாளியிடமும் கேட்க வேண்டும். தவிர ஸ்கேன் செய்யும் போது, காது செவிடாகும்படியாக இரைச்சலிருக்கும். அதற்காக நோயாளிக்கு காதில் பஞ்சு வைக்க வேண்டும். அதுவும் வைப்பதில்லை. அதை அவர்களுக்கு சுட்டி காட்டலாமென நினைத்தேன். ஆனால் எனது மனைவி தடுத்து விட்டார். அப்பொழுது நினைத்து கொண்டேன். நோயாளி யாராவது மிஷினில் படுத்திருக்கும் போது, சரியான பராமரிப்பில்லாத்தால் கெட்டு விட்டால், நோயாளியின் பாடு அவ்வளவுதான். அதே போல ஓரிரு மாதங்களுக்குள் மிஷின் கெட்டுபோய் நான்கைந்து மணி நேரம் அவதி பட்டு தற்காலிகமாக சரி செய்துள்ளதாகவும், மிஷின் தயாரித்த டெக்னிசியன்கள் வெளிநாட்டிலிருந்து வந்து சரி செய்ய இருக்கிறார்கள் என செய்தியை படித்தேன். அப்படியென்றால் நிலமையை பார்த்துக் கொள்ளுங்களேன். ஆப்ரேசன் தியேட்டரில் எனக்கு நர்ஸ் ஊசி போட வந்தார். கண்ணை மூடிக்கொள், வலியிருக்காது என்றார். என்ன ஊசி என்றேன். மயக்க ஊசி என்றதும், எனக்கு பயமில்லை.இதற்கு முன்பாகவே ஆப்ரேசன் செய்துக் கொண்டுள்ளேன சொன்னதும், வலது முழங்கையில் இரத்தநாளத்தில் ஊசியை குத்தி மருந்தை உட்செலுத்தி சிரஞ்சை வெளியில் உருவுவதற்கு முன்பாகவே மயக்கத்தில் ஆழ்ந்து விட்டேன்.இந்த மேஜர் ஆப்ரேசன் முடிந்த ஓரிரு நாட்களில் ஆந்திர மகிளசபாவுக்கு அழைத்து வந்து விட்டார்கள். இந்த ஆப்ரேசன் செய்த சமயத்தில் நடந்த நிகழ்சிகளை முன்பே சொல்லியதை படித்திருப்பீர்களே. இதற்கு முன்பாகவே நடந்த மைனர் ஆப்ரேசனைப் பற்றி சொல்லாமல் விட்டுவிட்டேன். அதை பற்றி அடுத்து பார்போமா.....
Thursday, January 8, 2009
எனக்கும் -28
டாக்டரின் ஆலோசனைபடி ஆப்ரேசன் செய்யப்பட்ட இடது கால் மாவுகட்டை முழங்கால் பக்கத்திலிருந்து சிறிது சிறிதாக அறுத்து கிழித்து இங்கே பூச்சியில்லையே, இங்கே பூச்சியில்லையே என சொல்லியவாறு, எவ்வளவு பஞ்சு வைத்து கட்டியிருக்கிறோம் பார்த்தாயா? இதில் பூச்சி நுழையவே முடியாது என சொல்லி முக்கால் பகுதியில் நிறுத்தி விட்டார்கள். பிறகு பார்க்க வந்த டாக்டர், இவ்வளவு திறந்தாகிவிட்டது. ஆப்ரேசன் செய்த பகுதியையும் பார்த்து விடலாமென கூறி, மீதியையும் திறந்து பார்த்தார்கள். அப்பொழுதுதான் தெரிந்தது. ஆப்ரேசன் செய்த இடத்தில் செப்டிக் ஆகி சீவு பிடித்திருந்தது. நல்ல நேரம், இவனுடைய தொந்தரவை பொருட்படுத்தாமல் விட்டிருந்தால் நிலமை மோசமாகியிருக்கும் என கூறியதுடன், ஆப்ரேசன் தையல்களை பிரித்து விட்டு சுத்தம் செய்து மீண்டும் மாவுகட்டு போட்டார்கள். ஏன் இப்படி அலட்சியமாக செயல்படுகிறார்கள் அரசு மருத்துவமனை டாக்டர்கள் என டாக்டர் நர்ஸிடமும் அட்டண்டரிடமும் வருத்தத்துடன் பேசிக்கொண்டது, இன்னும் நினைவில் நிற்கிறது. டாக்டர் என் முதுகில் தட்டி கொடுத்ததுடன், விரைவில் சுமாராகி விடும். எதேனும் சிரமம் இருந்தால் சொல்லிவிடு உடனே பார்த்து விடலாம் என அனுப்பி வைத்தார். பெரிய ஆப்ரேசன்கள் செய்யவேண்டியிருந்தால் பொது அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பார்கள். அதனால் நானும், சென்னை அரசு பொது மருத்துவமனையில் ஆப்ரேசன் செய்துக் கொண்டேன். அங்கு சில நாட்கள் உள் நோயாளியாக வைத்திருந்து, பிறகு ஆப்ரேசன் செய்வார்கள். அப்படி நான் இரண்டு முறை தங்க நேரிட்டது. முதல்முறை ஒரு பத்து நாட்களுக்கு பிறகு ஏனோ திருப்பி அனுப்பி விட்டார்கள். இரண்டாவது முறை தான் ஆப்ரேசன் செய்தார்கள். ஆனால் அங்கிருந்த நாட்கள் கொடுமையானது. ஏனேன்றால் உள்நோயளிகளுடன் யாராவது ஒருவராவது உடனிருப்பார்கள். எனக்கு உதவியாளர்கள் இல்லாமல் நான் தனியாக இருக்க வேண்டியிருந்தது. பாத்ரூம் டாய்லெட் போய்வரவே முடியாது. மல, சிறுநீர் எல்லா இடங்களிலும் சிதறிக் கிடக்கும், நிரம்பி வழியும். நன்றாக நடப்பவர்களுக்கே கால் வைக்க முடியாது. கைகளையும் ஊன்றி செல்லவேண்டிய நிலையில் நான். இதற்கு மேல் சொல்லதேவையில்லை. காலை உணவோ இட்லி அல்லது தோசை அல்லது குண்டு பண் (ரொட்டி ) பொட்டலமாக அத்துடன் பால் ஒரு டம்ளர் வரும். மதியமோ அளவு சாதம் அதில் மேல் சாம்பார் ஊற்றி பொரியலுடன், ஒரு டம்ளர் நீர்மோர். மாலையில் ஒரு பண்ரொட்டி, டம்ளர் பால், இரவு சப்பாத்தி அல்லது சாதம். சாப்பாடு, பண்ரோட்டி சாப்பிடவே மாட்டேன். பால், மோர் குடித்து விடுவேன். இட்லி தோசை சப்பாத்தி முடிந்தவரை கையில் படாமல் கட்டி கொடுத்த காகிதத்திலே வைத்தபடியே வாயில் கடித்து சாப்பிட்டு விடுவேன். நான் அங்கிருந்தவரை குளிக்கவோ பல் விளக்கவோ முடியவில்லை. சாப்பாட்டை பக்கத்தில் யாருக்காவது கொடுத்து விடுவேன். அங்கும் எனக்கு ஒரு நண்பர் கிடைத்தார். என்னை விட வயதில் மிகவும் மூத்தவர். அவர் ஒரு தொழுநோயாளி. சிறந்த ஓவியரும் கூட. அவரிடம் புகைபடம் கொடுத்தால், அதை பார்த்து தத்ரூபமாக பெரிய அளவில் பென்சில் ஓவியங்களை வரைந்து கொடுப்பார். அதில் அவருக்கு சிறிது வருமானம் கிடைக்கும். எனக்கு கிடைக்கும் பண்ரொட்டிகளை அவருக்கு கொண்டு சென்று கொடுத்து விடுவேன். என்னையே சாப்பிட சொல்லி வற்புறுத்துவார். என்னால் சாப்பிடமுடியவில்லை என கூறி கொடுத்து விடுவேன். மிக்க மகிழ்ச்சி அடைவார். என்னுடைய புகைப்படத்தையும் வரைந்து தருவதற்கு கேட்டார். என்னிடம் புகைப்படம் இல்லை, எனவே என்னை பார்த்தே வரைந்து கொடுங்களென கேட்டேன். நீ நீண்டநேரம் அடாமல் அசையாமல் அமரவேண்டும், என்னாலும் விரைவாக வரையமுடியாது என கூறிவிட்டார். அங்கிருந்தபோது இரும்பு சக்கரநாற்காலியை (BIG IRON WEEL CHAIR ) எடுத்து கொண்டு மருத்துவமனைக்குள் முடிந்த இடங்களிலெல்லாம் சுற்றுவதும், ஓவியர் ஓவியம் வரைவதை பார்த்துக் கொண்டிருப்பதுமே என்னுடைய மிக பெரிய பொழுதுபோக்கு. அதுவுமில்லாமல் அரசு பொது மருத்துவமனைகளின் நிலை உங்களுக்கு சொல்ல தேவையில்லை.
Subscribe to:
Posts (Atom)