Thursday, December 25, 2008

எனக்கும் ஆசை தான் - 27

ஒவ்வொரு வகுப்புக்கும் ஐந்தாறு மாணவர்களே இருந்ததால், நான்கு வகுப்பு மாணவர்களையும் ஒரே வகுப்பறையில் ஒரு ஆசிரியரே பாடம் நடத்துவார்கள். ஒரு வகுப்புக்கு பாடம் நடத்தும்போது, மற்றவர்கள் எழுதுவதோ மனப்பாடமோ செய்ய சொல்லியிருப்பார்கள். தவிர மருத்துவ சிகிச்சைக்கும் உடற்பயிற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம், ஒரு மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரம் வரை நீடிக்கும். அந்த நேரம் வகுப்பறையில் இருக்க முடியாது. எப்படியோ பாடங்களும் முடிந்துவிடும். காலாகாலத்தில் தேர்வுகளும் நடந்து, விடுமுறையும் விடப்படும். முடிவுகள் எவ்வாறாயினும் தண்டனைகள் எதுமில்லை. ஒரு வழியாய் நாலாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை அங்கு படித்தேன்.  ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, எனது இடதுகால் பாதம் வளைந்திருப்பதாய், நேராக்குவதற்கு ''மேஜர்'' ஆப்ரேசன் (அறுவை சிகிச்சை) நடைப்பேற்றது. இந்த சமயம் நடந்த சில நிகழ்வுகள் நினைவுக்கு வருகிறது. அறுவை சிகிச்சை நடந்து படுக்கையில் இருந்த சமயத்தில் எனது பாட்டி ( அம்மாவை பெற்றவர் ) இறைவனடி அடைந்து விட்டார். அது குறித்து கடிதம் எனக்கு வந்தது. அதை படித்த நான், அம்மா.. அம்மா... என்று பலமாக அழுதேன்.  நான் மட்டும் கட்டிலில் இருந்தேன். மற்றவர்கள் வகுப்புக்கு சென்றிருந்தார்கள். எனக்கு ஆறுதல் சொல்ல வந்த ஆயாக்களுக்கு பதிலே சொல்லாமல் அழுதுக் கொண்டிருந்தேன். என்னிடமிருந்து கடித்ததை வாங்கி படித்த பின், ஏன்டா, பாட்டி இறந்ததற்கு யாராவது அம்மாவென்று அழுவார்களா என்று கூறி திட்டினார்கள். அதற்குபின் பாட்டி.. பாட்டி என்று அழுததுடன், ஓரிரு நாட்களில் அந்த சோக நினைவுகளிலிருந்தும் மீண்டுவிட்டேன். அறுவை சிகிச்சை நடந்து படுக்கையிலிருந்த நேரத்தில் தேர்வு ஒன்று நடந்தது, எதனால் என்று ஞாபகமில்லை, தேர்வு விடைத்தாட்களில் ஒன்றும் எழுதாமல் வெற்றுதாளாக கொடுத்தேன் அல்லது சில எழுத்துக்களை மட்டும் கிறுக்கி கொடுத்தேன். படிக்கச் சொல்லியும் எழுதச் சொல்லியும் வீம்பாக மறுத்து விட்டேன். மற்றொன்று அறுவை சிகிச்சை காயம் ஆறுவதற்காக, காலுக்கு மாவுகட்டு போட்டிருந்தார்கள். அறுவை சிகிச்சையின் வலி மறைந்த சில நாட்களுக்கு பின், அந்த மாவுகட்டில் பூச்சி நுழைந்தது போல் ஒரே குறுகுறுப்பு, இதை பற்றி எனக்கு மருந்து கொடுக்க வரும் நர்ஸ்களிடமும், அட்டண்டர்களிடமும் தினமும் சொல்ல ஆரம்பித்தேன். அவர்களும் டாகடரிடம் சொன்னதாகவும், ஆப்ரேசன் புண் ஆறுவதால் அப்படி தான் இருக்கும், பொருத்துக்கொள் என்று சொன்னார்கள். அப்படியிருந்தும் பொருத்துக் கொள்ளமுடியாததால், ஆப்ரேசன் செய்த இடத்திலில்லை வேறிடத்திலென்றும் டாக்டரை பார்க்க வேண்டுமென்றும் நச்சரித்ததால், ஒரு வழியாக டாக்டரிடம் அழைத்து சென்றார்கள். என்னிடம் பேசியபின் டாக்டர் சொன்னது என்ன? முடிவு என்ன?....

Saturday, December 20, 2008

எனக்கும் - 26

முன்பாகவே இவர்களை ஆறிமுகம் செய்திருக்கிறேன், சுமார் ஐந்தாறு வருடங்களுக்கு முன், எதிர்பாராத வகையில் சந்தித்து ஊனமுற்றவர்கள் என்ற முறையில் அறிமுகம் செய்துக் கொண்டபோது தான், இவர் ரவிசந்திரன் என்பதும், சென்னை எக்மோர் ரயில்வே அலுவலகத்தில் பணியாற்றுவதையும் அறிந்துக் கொண்டேன். அதேபோல  திண்டுக்கல்.கணகசபாபதியையும், எங்கள் தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் மாநில சங்க விழாவில் ஒருவரை ஒருவர் அறிந்துக் கொண்டோம். இந்த இருவரின் அறிமுகம் மீண்டும் கிடைத்தும், நட்பை தொடரமுடியாமல் தவறவிட்டதற்கு வருந்துகிறேன். அடுத்தது சென்னையில் பள்ளி வகுப்புகளும் ஆசிரியர்கள் பற்றியும்  பார்போமா!!!. மூளைவளர்ச்சி இல்லாதவர்களுக்கென ஒரு வகுப்பறையும், ஆந்திர மாணவர்களுக்கு ஒரு வகுப்பறையும், தமிழ் மாணவர்களுக்கு ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை ஒரு வகுப்பறையும், ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்பறையும், ஆக நான்கு வகுப்பறைகள் இருந்தன. இந்த நான்கு வகுப்பறைகளுக்கும் நான்கு ஆசிரியர்கள் மட்டுமே. அந்த நான்கு ஆசிரியர்களிடமும்  எனக்கு நல்ல அறிமுகமுண்டு. அதற்கு ஒரு முக்கியமான காரணமும் இருந்தது. அதைப்பற்றி பின்னொரு சமயத்தில் சொல்கிறேனே. ஒன்பதாம் வகுப்பிலிருந்து பக்கத்திலிருக்கும் மாநகராட்சி பள்ளிக்கு, மருத்துவமனையிலிருந்த சைக்கிள் ரிக் ஷாவில் அழைத்து சென்று வருவார்கள். முத்து என்பவர்தான் ரிக் ஷா  ஓட்டுபவராகவும், வாட்சுமேனாகவும் பணிபுரிந்தார். அவர் இறந்து விட்டதாகவும், அவர் மகன் விஜயன் தற்போது அங்கு பணியாற்றுகிறார். எனக்கு சைக்கிள் ரிக் ஷாவில் சென்று படிக்கக் கூடிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ஏனென்றால் ஏழாம் வகுப்பு முடிந்ததும் 1970 ம் வருடம் மே மாதமே டிசார்ஜ் ஆகி ஊருக்கு வந்து விட்டேன். அந்த வருடம் ஜூன் மாதம் நடக்கவிருந்த எனது இரண்டாவது சகோதரியும், இரண்டு வருடங்களுக்கு முன்பாக இறைவனடி அடைந்து விட்ட திருமதி.வசந்தா ஹரிகிருஷ்ணன் அவர்களின் திருமணத்திற்காக, விடுப்பில் அழைத்து செல்ல வந்திருந்தார்கள். அப்பொழுதெல்லாம் டாக்டரின் ஒப்புதலில்லாமல் யாரும் விடுமுறையில் செல்லமுடியாது. எனவே டாக்டரின் அனுமதிக்காக சென்றபோது,  அவர், உங்கள் மகனுக்கு ( அதாவது என்னை ) தேவையான மருத்துவ சிகிச்சை முடிந்து விட்டது. நடந்து பழகுவது ஒன்றே சிகிச்சை. ஆதலால் டிசார்ஜ் அழைத்து சென்று விடுங்கள், ஊரிலும் நடக்கவையுங்கள் என்று அறிவுறையும் கூறி அனுப்பிவிட்டார். இன்னும் சில செய்திகள் உண்டு...   

Thursday, December 11, 2008

எனக்கும்.....25

அடுத்தவன் செகந்திராபாத்தை சேர்ந்தவன். ஒரு சமயம் சென்னையில் காய்ச்சல் பரவியிருந்தது, அது எங்கள் மருத்துவமனையிலிருந்த குழந்தைகளையும் தாக்கியது. அதில் அவனும் ஒருவன், அது ஒரு கோடைகாலமாக இருந்ததால்,அவனை ஆந்திராவிலிருந்து பார்க்க வந்த உறவினர் பங்கனபள்ளி மாம்பழங்களை வார்டனுக்குத் தெரியாதவாறு அவனிடம் கொடுத்தார். மாம்பழங்கள் ஓரிரு நாட்கள் கழித்து பழுக்க வேண்டிய நிலையிலிருந்ததால் பெட்டியில் வைத்து பூட்டி வைத்தான். அந்த ஓரிரு நாட்களில் அவனுக்கும் காய்ச்சல் வந்து விட்டது. பழங்கள் பழுத்திருந்தாலும் அவனால் சாப்பிட முடியாத சூழ்நிலை. அதனால் தினமும் ஏக்கத்துடன் பெட்டியைத் திறந்து பார்த்து விட்டு மூடிவைத்துக் கொள்வான். பழங்கள் கெட்டுபோகும் நிலையிலிருந்ததால், நான்அவனிடம் பழங்கள் கெட்டு விட்டால் யாருக்கும் உபயோகமின்றி போய்விடும். எனவே நண்பர்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் கொடு, உனக்கு உடல்நிலை சரியானதும் மீதி பழங்களை சாப்பிடுயென்று எவ்வளவோ கூறியும் ஏற்றுக் கொள்ளவேயில்லை. பழங்கள் ஒவ்வொன்றாக அழுக ஆரம்பித்தது. கெட்டுப்போன பழங்களை பார்த்து அழுதுக் கொண்டே, ஒவ்வொன்றாக தூக்கி வெளியில் போட்டான். அப்படி நாலைந்து பழங்கள் போட்டபிறகும், அவன் உடல்நிலை பூரணகுனமடையாததாலும், முதலிலிருந்தே நச்சரித்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு மாம்பழத்தை அறைகுறை மனத்துடன் கொடுத்தான். எனக்கும் அந்த சமயத்தில்தான் காய்ச்சல் வந்து சுமாராகியிருந்தது. பங்கனபள்ளி மாம்பழங்கள் எவ்வளவு பெரிதாக இருக்குமென்பதை உங்களுக்கு சொல்லதேவையில்லை. எனக்கும் அந்த சமயம் பத்து பதினோரு வயது தானே. பழம் கிடைத்த மகிழ்சியிலும் அதன் ஆசையினாலும் உடற்பயிற்சி கட்டடத்தின் வராந்தாவின் சுற்றுசுவரில் ஒரு காலை, நிற்பதற்கு வசதியாக மேலே தூக்கிப்போட்டு நின்றுக் கொண்டு, அந்த பழம் முழுவதையும் நான் ஒருவனே தின்றுமுடித்து விட்டேன். பிறகு வந்ததே வினை, அப்பொழுது தான் காய்ச்சல் விட்டிருந்ததாலும் காலையிலேயே வெறும் வயிற்றில் சாப்பிட்டதாலும் அன்று மாலையே வயிற்றுப்போக்கும், காய்ச்சலும் ஆரம்பமாகிவிட்டது. ஆனால் அவன் நிலையோ மேலும் பரிதாபமானது. அனைத்து பழங்களும் கெட்டு குப்பையில் போட்ட பிறகும், உடல்நிலை சரியாகமல் அவன் தவித்த தவிப்புதான். அடுத்து யாரைப் பற்றி, எதைப் பற்றி சொல்லலாம்?.....

எனக்கும் --24

அவனே அவன் பெட்டியைத் திறந்த சமயத்தில், அவனிடமிருந்து பிடுங்கிப் பார்த்தார்கள். அவனுடைய துணிமணிகள் இரண்டு மூன்றும், உபயோகித்த (பாத்ரூமுக்கு எடுத்து சென்றுவிட்டு வந்த) சோப்,பேஸ்ட்,பிரஷும் இருந்தது. அது தவிர அத்துடன் இருந்தவைதான் அதிர்ச்சியையும் . கேலியையும் கிண்டலையும் ஏற்படுத்தியவையாகும். எல்லோரும் கேலி, கிண்டல் செய்தாலும், எனக்கு அவன் மேல் அனுதாபத்தைத்தான் ஏற்படுத்தியது. என்னவென்று தெரிந்துக் கொள்ள உங்களுக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்குமே!. ஆமாங்க, அவன் சாப்பிட்டது போக மீதியான இட்லி, தோசை,வடை,உப்புமா ஆகியவற்றை பொட்டலம் கட்டியும் கட்டாமலும், பெட்டியில் நிறையிருந்ததுதான். பெட்டியை பிடுங்கியதற்கும் அதிலிருந்த குப்பைகளை எடுத்து வெளியில் போட்டதற்கும் அழுது பெரிய ஆர்பாட்டமே செய்து விட்டான். சுமார் ஒரு பத்து மாதங்களே அவன் அங்கிருந்தான். அவனை அங்கு சேர்த்த பிறகு முதன்முதலாக அவனை பார்க்க வந்த அவன் பாட்டி, அங்கு சரியான கவனிப்பு இல்லையென்றும், பேரன் மிகவும் உடல் மெலிந்து விட்டதாக கூறி, டிசார்ஜ் செய்து அழைத்து சென்று விட்டார்.
இவனைப் பற்றி முடிப்பதற்கு முன், மேலும் ஒன்றையும் சொல்ல வேண்டும். மாடிக்கு சென்றுவர படிகட்டுகள், சாய்தள வழி என இரண்ட் வழிகள் உண்டு. சில நேரங்களில் நான் மற்றும் சில ஊனமுற்றுள்ளவர்களும் படிகட்டுகள் வழியாக வரும்போது கைப்பிடி சுவற்றில் சாய்ந்துக்கொண்டு கால்களைக் கீழே வைக்காமல், வழுக்கிக் கொண்டு வருவோம். ஆனால் இவனோ, இந்த பக்கம் ஒன்று அந்த பக்கம் ஒன்று கால் போட்டு அமர்ந்துக் கொண்டு, முன் பக்கமாகவோ அல்லது பின் பக்கமாகவோ பார்த்தபடி கைப்பிடிசுவற்றில் வழுக்கிக் கொண்டு வந்து, சடாரென்று சரியாக கைப்பிடி முனையில் நிற்பான். பார்ப்பவர்களுக்கு ஒரு நொடி மூச்சு நின்றுவிடும். அடுத்தவன் செகந்திராபாத்தை சேர்ந்தவன். அவனைப் பற்றி அடுத்ததில்.......

Saturday, December 6, 2008

எனக்கும்....23

ஆந்திர மகிளசபா ஈஸ்வர பிரசாத் தத்தாத்ரேயா மருத்துவமனை ஆரம்பத்திற்கு ஒரு காரணம், ஆந்திராவை சேர்ந்த ஒரு பெரிய தன்வந்தர்களான தம்பதிகளின் மகன் ஈஸ்வர பிரசாத், போலியோவினால் பாதிக்கப்பட்டு, சிறு வயதிலேயே இறைவனடியை அடைந்து விட்ட சோகத்தாலும், போலியோவினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவி அளிக்கும் பொருட்டும் ஆரம்பிக்கப்பட்டதுதான் இது. இதனால் ஆந்திராவை சேர்ந்தவர்கள் அதிகமிருப்பார்கள். அப்படி ஆந்திராவை சேர்ந்த இருவரைப் பற்றி இப்பொழுது. அதிலொருவன் நினைத்த நேரத்திலெல்லாம் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த ''விவசாயி'' படத்தில் வரும் '' விவசாயி... விவசாயி... கடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி....'' என்ற இந்த வரிகளை மட்டும் திரும்ப திரும்ப இருக்கின்ற இடமே அதிரும்படியாக பாடுவான். அவனை யாராலும் கட்டுபடுத்தவே முடியாது. ஆனால் கட்டுப்படுத்த எங்களுக்கு தெரியும். அதாவது அவனுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுத்தால் நிறுத்திவிடுவான். இது எங்களைத்தவிர மற்றவர்களுக்கு தெரியாது. அவன் காதுக்கு எட்டும் வகையில் மிக மெதுவாக ''விவசாயி'' என்று கூறினால் போதும் பாட ஆரம்பித்து விடுவான்.அவன் அடிபடும்பொழுது பார்க்க வருத்தமாக இருந்தாலும், வார்டன் அம்மாவை வெருப்பேற்ற நினைக்கும் போது பயன்படுத்திக் கொள்வோம். அதனால் அந்த டெக்னிக்கை யாருக்கும் தெரியபடுத்தாமல் வைத்திருந்தோம். ஆனால் அவன் மகாகஞ்சபிரபு, எங்களால் சாப்பிடமுடியாத பட்சத்தில், அவனிடம் கொடுத்து விட்டால் சாப்பிட்டு விடுவான். சாப்பிட முடியாவிட்டால், பிறகு சாப்பிடுவதற்காக, காகிதமிருந்தால் கட்டி போட்டுக் கொள்வான். காகிதமில்லாவிட்டால், அப்படியே பாக்கெட்டில் போட்டுக் கொண்டு வந்து பெட்டியில் வைத்துக் கொள்வான். குளிக்க பாத்ரூம் போகும்போது சோப்,பேஸ்ட், பிரஷ் அனைத்தும் எடுத்து போவான், ஆனால் பயன்படுத்தவே மாட்டான். ஆள் வாட்டசாட்டமாக இருப்பான். யாரிடமும் சேரவோ பேசவோ மாட்டான். தனிகாட்டு ராஜா. அவனை யாரும் பார்க்கவே வரமாட்டார்கள். அவனுக்கு ஒருசமயம் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அந்த சமயத்தில்அவனுக்கு துணி மாற்றுவதற்காக பெட்டியின் சாவியைக் கேட்டதற்கு தரமறுத்து விட்டான். வேறுவழியின்றி அவனையே பெட்டியை திறந்து எடுத்துக் கொள்ளச் சொல்ல, பெட்டியை மெதுவாக அவனே திறந்தான். அந்த சமயத்தில்......

எனக்கும் 22

மேலும் ரவிசந்திரன், சலீம் இந்த இருவரைப்பற்றிக் குறிப்படும்போது ஜாலியான, தமாஷான சில விசயங்களையும் குறிப்பிட்டு விடுகிறேன். யாருடைய உறவினர்கள் வந்தாலும், அவர்கள் கொண்டு வந்து கொடுக்க வரும் பழம்,பிஸ்கட் மற்றும் பணத்தையும், அவரே கவனித்து கொடுப்பதாகச் சொல்லி, வார்டன் அம்மா அவர் அறையில் வாங்கி வைத்துக் கொள்வார். அவர் அறையை ஒருமுறைக்கூட நான் பார்த்ததில்லை. அப்படி வாங்கிக் கொண்ட பிஸ்கட்டுகளையும் பழங்களையும் உரியவர்களுக்கு ஓரிரு முறை, அவரின் அறை வாசற்படியின் அருகிலேயே அமரவைத்து கொடுப்பார். அதன் பிறகு கேட்டால் தீர்ந்து விட்டது. அடுத்த முறை உன் உறவினர் கொடுக்கும்போது தருகிறேன் என சொல்லி அனுப்பி விடுவார். ஓரிரு முறை அங்கு வேலை செய்கின்ற ஆயாக்களுக்கும் அலுவலகத்தில் பணியாற்றுகின்றவர்களுக்கு தேனீர் இடைவேலையில் கொடுப்பதுடன், அவருக்கும், அவரின் வளர்ப்பு செல்லங்களான நாய்களுக்கும்,தனிப்பட்ட சிறப்பு கவனிப்பில் இருக்கும் சிலருக்கும் உரியதாகும். இதை அறிந்துக் கொண்ட நான், எனக்கு தருவதை அவரிடமும், அவர் கண்ணில் படும்படியாக தருவதையும் தடுத்துக் கொண்டேன்.ஆனால் சலீமின் உறவினர்கள் வார்டன் அம்மாவிடமும் தந்து விட்டு, அவருக்கு தெரியாத வகையில் தனியாக அவனிடம் பழம் பிஸ்கட்டுகளுடன் பணமும் தருவார்கள். அவனைப்பார்க்க உறவினர்கள் அடிக்கடி வந்துக் கொண்டே இருப்பார்கள். அதனால் அவனிடம் பணத்துக்கு குறையிருக்காது. யாரும் தனியாக பணம் வைத்துக் கொண்டு வெளியில் வாங்கி சாப்பிடக் கூடாது. வெளியில் வாங்கி சாப்பிடுவதற்கு அங்கு வேலை செய்பவர்கள் உதவக்கூடாது என்ற கட்டளையும் இருந்ததால், அங்கு அட்டண்டர்களுக்கு பணம் கொடுத்து, யாருக்கும் தெரியாமல் வாங்கி வந்து அவசர அவசரமாக விழுங்குவோம். அப்படி நான் வாங்கி சாப்பிடுவது ''மசால் தோசை'' தான். சலீம் ''மட்டன்'' அல்லது ''சிக்கன்'' பிரயாணி. இதில்தான் முக்கியமான தகவலே ஆரம்பம் ஆகிறது. சலீமோ முஸ்லீம் ரவிசந்திரனோ ஏழை பிராமனன். இவனுக்கு எப்படியோ மாமிசத்தின் ருசி பிடித்து விட்டது. அதனால் சலீம் பிரியாணி வாங்கி வரும்போதெல்லாம் அதிலிருந்து போட்டியாக அதிலிருந்து எடுத்து சாப்பிடுவான். ''டேய்.. நீ ஐயர், இதெல்லாம் சாப்பிடக் கூடாது'' என்று மறைத்துக் கொள்வான். ஆனால் இவனோ விடாபிடியாக பிடுங்கி சாப்பிடுவான். இந்த சண்டைக் காட்சியைப்பார்த்து விழுந்து விழுந்து சிரிப்போம். மற்றும் சில சிரிப்புகள் அடுத்து...

Thursday, December 4, 2008

எனக்கும்!!!!!-21

இப்பொழுது சேலம்.அசோக், நான் ஆந்திர மகிளசபாவில் சேர்ந்த பிறகு வந்து சேர்ந்தான். அப்பொழுது அவனுடன் வந்திருந்த அவன் அம்மாவும் அக்காவும் எங்களையெல்லாம் பெயரும் ஊரும் விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.என் பெயரையும் ஊரையும் அறிந்துக் கொண்டதுமே, கோவை தெலுங்குபாளைய மருத்துவமனை, என் பாட்டி,சகோதரி,அம்மா பெயர்களையெல்லாம் சொல்லி கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டபிறகு சொன்னார்கள், இந்த அசோக்கும் நான் அங்கிருந்தபோது ஆறு மாதம் மருத்துவம் செய்துக்கொண்டதாக. அவனுக்குத் துணையாக இருக்கச் சொல்லி கேட்டுக் கொண்டதுடன், அவனிடமும் நான் துணையிருப்பேன் என தைரியம் கொடுத்து சென்றார்கள். சிறிது அலட்டலிருந்தாலும் மிகவும் மென்மையாக பேசக்கூடியவன். இனிமையான நண்பன். மாலதியின் நட்பு கிடைத்தபிறகு, அவளை சந்திக்க முடியாத நேரங்களில் மட்டும் தான் எங்களுடனிருப்பான் என்ற சுழ்நிலை ஏற்பட்டது. இதைப் பற்றி நாங்கள் எவ்வளவு கேலி செய்தாலும் பொருட்படுத்தவே மாட்டான். மருத்துவமனையிலிருந்து டிசார்ஜ் ஆன பிறகு ஓரிரு முறை அவன் வீட்டிற்கே சென்று வந்தேன். ஓரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்கத்தின் சேலம் மாவட்டப் பொது செயளாலராக இருந்தபோது, சங்கத் தகவலுக்காக வட்டார அலுவலகத்துக்குச் சென்றேன், அப்பொழுது தற்செயலாக அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த அசோக்கைப்பார்த்து அடையாளம் கண்டுக் கொண்டு பேசினோம். பணி நிமித்தத்தினால் குறுகிய நேரத்தில் விடைப்பெற்றுக் கொண்டோம். அதன் பிறகு இதுவரை சந்திக்கவோ பேசவோ வாய்ப்புக் கிடைக்கவிலை. மற்றவர்களைப் பற்றி அடுத்ததில்....

Wednesday, December 3, 2008

நண்பர்களை அறிமுகப்படுத்தி விட்டுதான் அடுத்த தகவலுக்கே போகவேண்டும். அடுத்த நண்பி பெங்களூரை சேர்ந்த குமாரி.மாலதி. இவரைப் பற்றி சுவாரிஸ்யமான தகவல்கள் பல இருக்கின்றன. இவரும் எனக்கு முன்பாகவே மருத்துவமனையில் சேர்ந்தவர். என்னைவிட சேலம் மாநகரை சேர்ந்த மறைந்து விட்ட டாக்டர். ஸ்ரீதர் அவர்களின் மகன் அசோக் மிகவும் நெருங்கிய நண்பன். ஏனென்றால் இருவரும் கன்னடத்துக்காரர்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் தனியாக அமர்ந்து கன்னடமொழியில் பேசிக்கொண்டே இருப்பார்கள்.சரி மாலதி விசயத்துக்கு வருவோம்.அவரும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என நினைக்கிறேன். நண்பர்களாக இருந்தவர்களுடைய குடும்ப சூழ்நிலைப் பற்றி அதிகம் தெரியாது. அதைப்பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமென்ற ஆர்வமோ வயதோ இல்லை. மிகவும் சூட்டிகையானபெண். வார்டன் அம்மாவின் செல்லமான கவணிப்பில் சிலர் இருந்தார்கள்.ஏனென்று தனியாக அவரை பற்றி எழுதும் போது தெரிவிக்கிறேன். அவர்களில் முதலிடம் மாலதிக்கு தான். அவர் தற்போது பெங்களூருவில் ஏதோ ஒரு இந்தியன் வங்கியில் பணிபுரிவதாகவும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடந்த ஊனமுற்றோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக் கொண்டு பல பதக்கங்கள், பரிசுகள் பெற்றிருப்பதாகவும் வாரயிதழ் ஒன்றிலும், ''தினமலர்'' நாளிதழில் 'சொல்கிறார்கள்' என்ற தலைப்பின் கீழும் செய்தி வந்துள்ளது. அதையும் எடுத்து வைத்துள்ளேன். மருத்துவம் செய்துக் கொள்ள பெங்களூரூ வழியாக மைசூரைத் தாண்டி கிருஷ்ணராஜசாகர் என்ற ஊர் வரை காலையில் சென்று அன்று இரவே ஊர் திரும்பியதால், நினைவிலிருந்தும், விசாரித்துதான் பார்க்கச் செல்லவேண்டிய சூழ்நிலையில் இருந்ததால் நட்பை புதிப்பித்துக் கொள்ள முடியாத வருத்ததுடன் இருக்கிறேன். விளையாட்டுகளில் ஆர்வமிருந்தாலும் போட்டிகளில் கலந்துக் கொள்ளாமல் நான் ஒதுங்கியதற்கு இவர் அறியாமலே இவரும் ஒரு காரணமாக இருந்துவிட்டார். அதற்காக இவரை குறைச்சொல்லமாட்டேன். காரணம் அந்த வார்டன் அம்மா தான். நான் முதலும் கடைசியுமாக கலந்துக் கொண்ட போட்டி அதுதான். ஊனமுற்றோருக்கான தினவிழா நடைப்போட்டியில் வென்ற நான், சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட திரைப்பட நடிகை ''ஆச்சி'' மனோரமா அவர்களிடமிருந்து பரிசு வாங்கி என் இருப்பிடத்தில் அமர்ந்த அடுத்த நொடி என் கையிலிருந்த பரிசு பிடுங்கப்பட்டு, மாலதி வெற்றிப் பெற்றதாக அறிவித்து மீண்டும் ''ஆச்சி'' அவர்கள் மாலதிக்கு பரிசு வழங்க, அதை நாளிதழ்களிலும் வெளியிட செய்ததுடன் மருத்துவமனையிலும் பாராட்டுவிழா நடத்தினார்கள். விபரம் தெரியாததால் அவளுக்கு எந்த ஒரு குற்ற உணர்வுமில்லை.பின்னாளில் இந்த பாராட்டுவிழா தகவலும் புகைப்பட சான்றுகளே விளையாட்டில் அவருக்கு ஊக்கத்தை ஏற்படுத்தியிருக்குமென நினைக்கின்றேன். பாராட்டுவிழா பற்றியெல்லாம் எனக்கும் குறையாக தெரியவில்லை. என்ன பரிசு என்று பார்ப்பதற்கு முன்பாகவே பிடுங்கிக் கொண்டு விட்டார்களே என்ற ஏக்கம் தான் அன்று பெரிதாக இருந்தது. அன்றிலிருந்துதான் போட்டிகளில் கலந்துக் கொள்ளாமலே தவிர்த்து விட்டேன். அடுத்ததில் சேலம் நண்பன் அசோக் பற்றி....

Monday, December 1, 2008

ஆந்திர மகிளசபா- நண்பர்கள்,-2

ஆந்திர மகிளசபா- நண்பர்கள்-2
நான் அங்கு சேர்ந்த போது 12 வயதுக்குள் உள்ளவர்களை மட்டுமே சேர்ப்பார்கள். அதிகபட்சம் 15 வயது வரை இருக்கலாம். சிலருக்கு சிறப்பு சலுகை இருந்தது. ஏனென்று தெரியாது. கேரளா.பால்ராஜ், திண்டுக்கல்.கனகசபை, தற்போது இறைவனடி அடைந்து விட்ட திரு.முத்துசாமி, திருமதி.கிருஷ்ணவேணி முத்துசாமி மற்றும் சிலர். பையன்கள் மேலே ஹால் மற்றும் 2 ரூம்களிலும், பெண்பிள்ளைகள் கீழே 2 ஹால்களிலும் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். என்னை விட வயதில் மூத்தவர்கள் ( பையன்கள் ) சிலர் சேர்ந்து ஒரு ''கேங்'' குழுவாக இருந்தார்கள். அவர்கள் சொல்படிதான் அனைத்து பையன்களும் நடக்க வேண்டும். பால்ராஜ், கனகசபை இவர்கள் தலைவர்கள் போலவும், துணையாக முத்துசாமியும் உதவியாளர்களாக மனோகரன் மற்றும் சிலருமிருந்தனர். நான் இவர்களை நினைத்து பயப்பட்டதுமில்லை, எதிர்க்க வேண்டுமென நினைத்ததுமில்லை. என்னுடன் பேசுபவர்கள் அனைவரிடமும் கிண்டலும் கேலியுமாக பொழுதை கழித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான் அவர்களை மதிக்காதது போலவும்,தனியாக குழு ஒன்று ஏற்படுத்துவது போலவும் அவர்களுக்கு எண்ணம் ஏற்பட்டு, ஒரு சமயம் என்னை அழைத்து, எங்களை மதிப்பதில்லை, எங்களுக்கு எதிராக குழு சேர்க்கிறாயா'' என மிரட்டலாக கேட்டார்கள்.எனக்கு அந்த எண்ணமும் இல்லை, அவசியமும் இல்லை, நீங்கள் என்னிடம் பேசியதில்லை,அதனால் உங்களிடம் நானும் பேசவில்லை என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்தவரை எங்களுக்குள் எந்த மோதலும் ஏற்பட்டதில்லை. பால்ராஜ்,கனகசபை, முத்துசாமி இம்முவரும் மருத்துவமனையிலிருந்து டிசார்ஜ் ஆனதும் மனோகரனும் அவர்களுடன் இருந்தவர்களும் என்னுடன் நண்பர்கள் ஆகிவிட்டார்கள்.
இவர்களைத் தவிர மேலும் சில நண்பர்களையும், நினைவில் நிற்கும் சிலரையும் அறிமுகப்படுத்த விரும்புகிறேன். முதலில் நண்பிகள் கீதா, மாலதி. இவர்கள் எனக்கு முன்பாகவே அங்கிருந்தவர்கள்.இதில் கீதா கொல்கத்தாவை சேர்ந்தவள். என் வகுப்பு தோழி. தமிழ் நன்றாக தெரியும். சில வருடங்கள் கழித்து ஆந்திர மகிளசபா மருத்துவமனைக்கு வந்த போது, அலுவலகத்தில் தயங்கி தயங்கி ஒரு வழியாக ரிஜிஸ்டரிலிருந்து அவள் விலாசத்தை வாங்கி விட்டேன். அவர்கள் அந்த விலாசத்திலிருப்பார்களா என்பது தெரியாது என்று கூறியதாலும், ஆங்கிலத்தில் கடிதம் எழுத சரிவர தெரியாததாலும் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக அந்த விலாசக்காகிதத்தை அவள் நினைவாக பாதுகாத்து வருகிறேன். அடுத்த நண்பி, நண்பர்கள் பற்றி அடுத்ததில் தொடர்கிறேனே.....

சென்னை.ஆந்திர மகிள சபாவில் அனுமதியும் முதல் நண்பர்களும்

1967 ம் வருடம் மே-ஜூன் மாதத்தில் சென்னை அடையாறு ஆந்திர மகிளசபா, ஈஸ்வர பிரசாத் தத்தாத்ரேயா முடநீக்கு மருத்துவமனையில் சேர்ந்தேன். அதே நாளில் எனக்கடுத்து மருத்துவமனையில் சேர்ந்த, ராஜபாளையம் அருணகிரி, கோபி, ராமநாதன் ஆகிய இம்முவரைப்பற்றியும் அறிமுகம் செய்யாமல் மற்றவர்களை அறிமுகம் செய்ய முடியாது. அவர்களைப்பற்றிய அறிமுகம் ஒரு சிறு கதையாகத்தான் இருக்கும். பார்ப்போமா?. 1) இவர்கள் முவ்வரும் சகோதரர்கள். 2) முதல் இருவரும் பெரியம்மை நோயினால் தாக்கப்பட்டு ஊனமுற்றவர்கள்,3) இரு பையன்களுக்கு பிறகு இரண்டு பெண்பிள்ளைகள், சொக்கதங்கம் போல் அழகு, நிறம். தவிர எந்த குறைவுமில்லாமல் இருந்தார்கள். 4)இவர்களுக்கடுத்தவன் ராமனாதன் நிறமும் அழகும் இருந்தாலும் இளம்பிள்ளைவாத நோயினால் ( போலியோவினால்) தாக்கப்பட்டவன். 5) அடுத்து பிறந்த பையனும், பிறந்ததிலிருந்தே இளம்பிள்ளைவாத நோயினால் ( போலியோவினால்) தாக்கப்பட்டதுடன், இரவு பகலின்றி ஒரே அழுகை, மருத்துவர்களின் ஆலோசனைப்படி தூக்க மாத்திரை வழங்கி வந்தவர்கள், ஒரு நாள் பெற்றோர் அடைந்த மிக்க அசதியினால், இவர்களாகவே, அவன் நன்றாக தூங்கட்டுமென்று தூக்க மாத்திரையொன்றை சேர்த்து வழங்க, நிரந்தரமாகவே தூங்கிவிட்டான்.
இம்முவரையும் ஒரே ஹாலில் எனக்கடுத்து வரிசையாக கட்டில்கள் கொடுத்திருந்தார்கள்.வீட்டு ஏக்கம் இருந்தாலும் கோயம்பத்தூர் தெலுங்குபாளையம் மருத்துவமனையில் இருந்த அனுபவத்தினால், புதிய இடத்தின் சூழ்நிலைகளை அறிந்துக் கொள்ளும் ஆர்வத்தினால் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் பேசினாலும் என்னிடம் பேசாமல் அவர்கள் நாள் முழுவதும் ஒரே அழுகை.வகுப்புக்கும், மருத்துவ சிகிச்சைக்கும் பெயர் பதிவு செய்ய ஒரு வாரமாவது ஆகிவிடுவதால், அதுவரை படுக்கை தான். எங்களுடன் தங்கிருந்த மற்றவர்கள் பள்ளிக்கு சென்று விடுவர்.நாங்கள் நான்கு பேர் மட்டும் தனியாக ஹாலில் இருப்போம். எனக்கோ பொறுமை போய்விட்டது. ஓரிரு நாள், இவர்களின் அழுகையைப் பொறுத்தவன், வாயை மூடுகிறீர்களா இல்லை அடித்து உதைக்கட்டுமா என்று மிரட்டினேன். உடனே சடாரென்று அழுகையை நிறுத்தியதுடன் வாயையும் மூடிக்கொண்டார்கள். மென்மையாக சிறுகசிறுக பேசி,பிறகு நிரந்தர நண்பர்களானோம்.அவர்கள் ராஜபளையத்தில் பெரிய நூற்பாலை நடத்தி வரும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதை பின்னாலில் அறிந்துக் கொண்டேன். அவர்களையும் அவர்களின் பெற்றோரையும் நினைக்கும்போது அவர்களின் துயரத்தை எண்ணி இன்றும் வேதனைப்படுகிறேன். அவர்களில் ஒரு சகோதரன் ஐந்தாறு வருடங்களுக்கு முன்பாக இயற்க்கை ஏய்தி விட்டதாக அறிந்தேன். இதை பதிவு செய்யும்போது, நண்பர்களாக நான் நினைப்பவர்களையெல்லாம், மீண்டும் ஒருமுறையாவது சந்திப்போமா? என்ற ஏக்கம் ஏற்படுகிறது. மற்றவர்களை அடுத்த பதிவில்..

Sunday, November 30, 2008

முதல் நண்பி

அடட!.. ஒரு முக்கியமான ஸ்வாரிஸ்யமான தகவலை, என் முதல் பெண் தோழியை அறிமுகம் செய்யாமல் விட்டுவிட்டேன்.ஆரம்பபள்ளியை நினைத்தாலே நினைவில் வரக்கூடிய நிகழ்ச்சியிது.மூன்றாம் வகுப்பில் நான் சேர்ந்த போது, எங்கள் எதிர்வீட்டு பெண் விஜயா @ விஜயலட்சுமியும் என் வகுப்பு தான். ஆனால் அவளுக்கு நாங்கள் வைத்த புனைப்பெயரோ ''சிட்டுக்குருவி''. ஏனென்றால் ஒரே துருதுரு. ஒரு நாள் என் ஊனத்தைச் சுட்டிக் காட்டி ''மொண்டி'' என்றழைத்தாள்.எனக்கு வந்த கோபத்தில் மூன்று கால் பாய்ச்சலில் ( இரண்டு கைகள், ஒரு கால் ) சென்று அவள் துடையில் 'நறுக்'கென்று கிள்ளி விட்டேன். அவளோ அழுது ஆர்ப்பாட்டம் செய்து, வகுப்பாசிரியர் மூலமாக தலைமையாசிரியருக்கு சென்றது. அவர் என்னை அழைத்து, பெண்பிள்ளையைக் கிள்ளியது தவறுயென கண்டித்தார். ஆனால் நானோ, அவள் என் ஊனத்தை குறிப்பட்டதால் தானே கிள்ளினேன். அதனால் தவறு அவள் மேல்தான், அவளையும் கண்டிக்க வேண்டுமென வாதிட, தலைமையாசிரியருக்கு வேறு வழியின்றி அவளையும் அழைத்து, யாரையும் அதுமாதிரி அழைக்கக்கூடாது பேசக்கூடாது என கூறி, சண்டைப்போடக்கூடாது நண்பர்களாக இருக்க வேண்டுமென சொல்லி அனுப்பி வைத்தார். சிறிது நாட்களில் நண்பர்களாகி விட்டோம். துவக்கப்பள்ளி படிப்புடன் அவளை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தி விட்டிருந்தனர். நான்காம் வகுப்பு முடிவில் சென்னை மருத்துவமனையில் இருந்து விட்டு, ஊருக்கு திரும்பும்போது, அவளும் அவள் சகோதரிகளும் அவர்கள் வீட்டு வாசற்கதவிற்கு பின்னிருந்து தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தனர். எப்போதாவது அப்படி எட்டிப்பார்க்கும்போது, நானாக வலிய பேசினால், ஒரு வார்த்தை அல்லது தலையசைப்பு மட்டுமே பதிலாக கிடைப்பதுடன் அடுத்த நொடி அவர்கள் வீட்டு கதவை மூடிவிடுவார்கள். அப்படி இருந்த நிலையில் நண்பிக்கு திருமணம் ஆனது, இந்த விசயம் இன்னும் ஹைலைட்டானது, அதாவது அவளுக்கு திருமணம் முடிந்து, இரண்டு நாட்களுக்கு பிறகு தாய்வீட்டிற்கு கணவருடன் வந்தாள். அப்படி வரும்போதே, அவள் தாய்வீட்டில் நுழைவதற்கு முன்பாகவே, சாலையில் நின்றபடியே, என்னைப் பார்த்து '' பத்ரி, எப்படியிருக்கிறே?, நல்லாயிருக்கிறாயா?'' என்று தலை நிமிர்ந்து துணிவாகவும் பலமாகவும் கேட்டாள். ஒரு நிமிடம் நான் அதிர்ந்த் விட்டேன். என்னடா, இரண்டு நாட்களுக்கு முன் திருமணத்திற்கு நம்மை தாண்டிச் செல்லும் போது கூட, ஒரு வார்த்தைப் பேசாதவள் எப்படி, பிரமிப்பிலிருந்து மீளமுடியாதனாய் தலையை மட்டும் ஆட்டி வைத்தேன். பிறகுதான் அவள் கணவருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தாள். ஆனால் அவரோ, உன்னை பெண் பார்க்க வரும்போதே அறிமுகமாகிவிட்டோம். என்று கூறி சிரித்தார். என் முதல் இனிய தோழி மூன்று, நான்கு வருடங்களுக்கு முன்பாகவே இறைவனடியை அடைந்து விட்டார் என்பதை கேள்விப்பட்டேன்,என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Saturday, November 29, 2008

எனக்கும்-16

ஓ.. நேற்று எந்த இடத்தில் விடைப்பெற்றேன்? ஆமாம் நண்பர்களின் அறிமுகப்படலம் அல்லவா! நண்பர்களென்றாலே ஆரம்பப் பள்ளியிலிருந்து தானே! மூன்று மற்றும் நான்காம் வகுப்புக்கு என்னை சுமந்து சென்றவர்களில் என் நினைவில் நிற்பவர்கள் கோவிந்தன் பூசாரியும், உடையானும் தான், இந்த இரண்டு வகுப்புகளுக்கு பிறகு என்னை பள்ளிக்கு தூக்கிச் செல்ல வேண்டிய நிலை யாருக்கும் எற்படவில்லை. ஏனென்றால் அடுத்து உயர்நிலைப்பள்ளி படிப்புக்குத்தான் எங்கள் ஊருக்கு வந்தேன். அது சமயம் கேளிப்பர்கள் அணிந்துக் கொண்டு ஊன்றுக்கோள்களின் உதவியுடன் நடந்தே பள்ளிக்குச் சென்று வந்தேன். சென்னை ஆந்திர மகிள சபா ஈஸ்வரி பிராசாத் மருத்துவ மனையிலிருந்து டிசார்ஜ் ஆகி ஊருக்கு வந்த புதிதிலும், அவசர சமயங்களிலும் எங்கள் வேலைக்காரர்கள் மூலமாக சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்று வந்திருக்கிறேன். சரி நண்பர்களின் அறிமுகம் எங்கோ நழுவிக்கொண்டு போகிறது. எனது புத்தகப்பையை அதிகம் தூக்கி வந்தது கேசவன் @ வீரகேசவன் மற்றும் சிலர். புத்தகப்பை என்றதும் இப்பொழுது ஆரம்பப்பள்ளி மாணவர்கள் சுமக்கக் கூடிய புத்தகப்பையை நினைத்து விடாதீர்கள். அப்பொழுது மூன்று புத்தகங்கள், இரண்டு நோட்டுகள், ஒரு சிலேட் மட்டும்தான். ; 1) தமிழ், 2) கணக்கு, 3) வரலாறும் புவியலும் சேர்ந்து ஒன்று ஆக மூன்று புத்தகங்கள் மட்டுமே. என்னையும், என் பையையும் தூக்கிச் சென்றதாக பின்னாளில் பலர் உரிமைக் கொண்டாடி இருக்கிறார்கள். எனக்கு ஞாபகத்துக்கு வராததாலும் அவர்கள் ஆத்ம திருப்திக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் மறுப்பு தெரிவிக்காமல் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அடுத்ததில் சென்னையில் பள்ளி, மருத்துவமனை நண்பர்களின் அறிமுகம்....

Friday, November 28, 2008

எனக்கும்!!!!!!!!!!-15

இது வரை என் வாழ்வில் சிறு வயதிலிருந்து பல்வேறு காலகட்டங்களில் பலர் நண்பர்களாக இருந்துள்ளனர். ஏனோ உயிர்தோழன் அல்லது தோழி என்று சொல்லக் கூடியவகையில் எனக்கு இருப்பதாக தோன்றவில்லை. ஏன் இப்படி கூறுகின்றேனென்றால் பலரிடம் நான் மனம் விட்டு பேசியிருக்கிறேன். ஆனால் அவர்கள் அப்படி இருந்தார்களா என்றால், தெரியவில்லை என்பது தான் என் பதிலாக இருக்கிறது . இதை படிக்கக் கூடிய வாய்ப்பு என் நண்பர்கள் யாருக்காவது ஏற்பட்டால் வருத்தப் படவேண்டாம். அவர்களை அடையாளம் கண்டுக் கொள்ளக் கூடிய தகுதி எனக்கு இல்லையென்று எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் நான் மறக்காத நண்பர்கள் பலர் இருக்கின்றனர். சிறு வயதிலிருந்தே தொடரும் சில நண்பர்களின் நட்பு என கூறுவதென்றால் திரு.பங்காரு ஆசிரியர் மகன் திரு.விஸ்வநாதன் (விவசாயி ), தர்மபுரி மாவட்டத்தில் CBCID காவல் துறையில் பணியாற்றுகின்ற திரு.பாபு ( நாங்கள் செல்லமாக அழைப்பது குண்டு பாபு என்கின்ற குண்டு). இந்த இடத்தில் சிறு தயக்கம். எந்த நண்பர்களை முதலில் அறிமுகம் செய்வதென்று.சரி, சிறிய வயதிலிருந்தே ஆரம்பித்து விடுகிறேன். முதலிலேயே எழுதியிருக்கிறேனே, அந்த ஆரம்பப் பள்ளி நண்பர்களிலிருந்தே ஆரம்பித்து விடுவோமா? அடுத்த பதிவிலே தொடர்ந்து....